காசாவில் தொடரும் போர்: குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு விகிதம் அதிகரிப்பு

ஐ.நா. தரவு அறிக்கையின்படி, காசாவில் இளம் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு விகிதம் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே இரண்டு மாத போர் நிறுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, காசாவுக்குள் நுழையும் உதவிகளுக்கு இஸ்ரேல் 11 வார தடையை விதித்தது. இந்த தடை ஓரளவு நீக்கப்பட்டாலும், கட்டுப்பாடுகள் இன்னும் அமலில் உள்ளன. இதன்படி காசாவுக்குள் வரும் அனைத்து உதவிகளையும் சரிபார்க்க இஸ்ரேல் வலியுறுத்துகிறது. ஹமாஸ் பொருட்களைத் திருப்பிவிட்டதாக குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் ஹமாஸ் இதனை மறுத்து வருகிறது.

மே மாதத்தின் இரண்டாம் பாதியில் ஐ.நா தலைமையிலான ஊட்டச்சத்து குழு நடத்திய பகுப்பாய்வில், காசாவில் பரிசோதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 50,000 ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 5.8% பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகளைக் காட்டியதாகக் கண்டறிந்துள்ளது.

இந்த நிலையில்,இஸ்ரேல் – காசா இடையே அமைதியை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சில கோரிக்கைகைளை ஹமாஸ் அமைப்பினர் ஏற்காததால், இஸ்ரேல்-காசா இடையேயான பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுவதில் சிக்கல் தொடர்வதாக கூறப்படுகின்றது.