கஷ்டப்பிரதேச மாணவர்களின் கல்விச் சவால்கள் – துரைசாமி நடராஜா

இலங்கையின் மலையகப்  பகுதிகளில் கஷ்ட மற்றும் அதிகஷ்ட பிரதேச பாடசாலைகள் காணப்படுகின்றன. இத்தகைய பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது கல்வியை தொடர வேண்டிய நிலையில் உள்ளனர்.

அத்தோடு சமகால பொருளாதார பின்னடைவுகள் மாண வர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு மேலும் இடையூறினை ஏற்படுத்தி வருகின்றன. இந் நிலையில் இப்பிரதேச பாடசாலைகளினதும், மாணவர்களினதும் அபிவிருத்தி கருதி அரசாங் கம் காத்திரமான முன்னெடுப்புக்களை மேற் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. புதிதாக ஆட்சிபீடமேறியுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இவ்விடயத்தில் தனது கரிசனையை எவ்வாறு வெளிப்படுத்தப் போகின்றது? என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள் ளது.

‘கலாசாரத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பயனுள்ள விடயங்களை சமூகத்திற்கு பெற்றுக் கொடுப்பது கல்வி. மனிதரிடையே மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணர்வது கல்வி’  என்றெல்லாம் கல்விக்கு வரைவிலக்கணம் கூறுவார்கள். கல்வி என்பது தனிமனிதன், சமூகம் மற்றும் நாட்டின் அபிவிருத்திக்கு உந்துசக்தியாக விளங்குகின்றது. கல்வி மேலும் பல சாதக விளைவுகளுக்கும் அடித்தளமாக விளங்கும் நிலையில் சமூகங்கள் கல்வியில் உச்சத்தைத் தொடுவதற்கு பல்வேறு திட்டங்களையும் வகுத்து செயற்பட்டு வருகின்றன.

இந்த வகையில் மலையக சமூகத்தின் கல்வி நிலைமைகள் குறித்து நோக்குகின்றபோது இச்சமூகம் கல்வி அடைவுகள் உள்ளிட்ட மேலும் பல விடயங்களிலும் பின்னிலையில் இருந்து வருவது தெரிந்ததேயாகும். மலையகம் பல்வேறு துறைகளிலும் மேம்படுவதற்கு கல்வியில் கூடிய

ளவு கரிசனையை வெளிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. எனினும் மலையக மாண வர்கள் கல்வி நடவடிக்கைகளை சிறப்பாக முன் னெடுப்பதற்கு இடையூறாக பல காரணிகள் விளங்குகின்றன. அதிலும் கஷ்ட மற்றும் அதிக ஷ்ட பிரதேச பாடசாலைகள் மலையகத்தில் அதிகமுள்ள நிலையில் இவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல என்பதே உண் மையாகும்.

குண்டும் குழியுமான பாதைகள்

இத்தகைய பிரதேச பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. ஒரேயொரு ஆசிரியர் பல பாடங்களையும் கற்பிக்க வேண்டிய நிலையில் உள்ளார். இன்னும் சில பாடசாலைக ளில் துறைசார்ந்த ஆசிரியர்கள் இல்லாத நிலையில் குறித்த ஒரு பாடத்தில் பயிற்சி பெற்ற ஆசிரியர் அப்பாடத்திற்கு மேலதிகமாக வேறுசில பாடங்களையும் கற்பிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதேவேளை கஷ்ட மற்றும் அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளுக்கு நியமனம் பெற்றுக் கொள்ளும் சிலர் தமது செல்வாக்கை பயன்படுத்தி வசதியான பாடசாலைகளுக்கு இடமாற்றத்தினை பெற்றுக் கொள்ளும் ஒரு நிலைமையும் இல்லாமலில்லை. இதன் காரணமாக ஆசிரியர் பற்றாக்குறையால் தொடர்ந்தும் இத்தகைய பிரதேச மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி வருகின்றமையை அவதானிக் கக் கூடியதாக உள்ளது.

இதேவேளை கஷ்ட மற்றும் அதிகஷ்ட பிரதேசங்களுக்கு செல்லும் பாதைகள் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. இப்பாதையில் பெரும்பாலும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி சேவையில் ஈடுபடுத்தப்படாத நிலையில் தனியார் பஸ் உரிமையாளர்களின் ஆதிக்கமே வலுப்பெற்று வருகின்றது. போக்குவரத்து கட்டணங்களை தனி யார் பஸ் வண்டி உரிமையாளர்கள் அளவுக்கு அதிகமாக அறவிடுவதாகவும் பல இடங்களில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.  இதன் காரணமாகவும் கஷ்ட மற்றும் அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் செல்வதில் சிக்கல்களுக்கு முகம் கொடு த்து வருகின்றனர். ஆசிரியர்கள் தங்களின் குறைந்த வருமானத்துக்கு மத்தியில் போக்குவரத்துக் கென்று அதிகமான தொகை யினை செலவிட வேண்டியுள்ளதால் அவர் கள் பொருளாதார ரீதியில் திக்குமுக்காடி வருகின்ற னர்.

அத்தோடு கஷ்ட மற்றும் அதிகஷ்ட பிரதேசங்களில் சேவையில் ஈடுபட்டுவரும் பஸ் வண்டிகள் பாதைச்சீர்கேட்டை காரணங்காட்டி சேவையை அடிக்கடி இடைநிறுத்திக் கொள்வதையும் அவதானிக்க முடிகின்றது. இத்தகையதொரு சூழ்நிலையில் ஆசிரியர்கள் பாடசா லைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுவத னால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இவற்றுக்கும் மத்தியில் பல்வேறு இடையூறுகள் இருந்த போதிலும் கூட சிறப்பான சேவையினை வழங்கும் அர்ப்பணிப்புமிக்க தனியார் பஸ் வண்டி  உரிமையாளர்களையும் நாம் பாராட்டியே ஆகவேண்டும்.  கண்இது ஒரு புறமிருக்க கஷ்ட மற்றும் அதிகஷ்ட பிரதேசங்களில் ஆரம்பப்பிரிவு பாடசாலைகளே அதிகமாக காணப்படுகின்றன. இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் உயர் கல்வியை பெற்றுக் கொள்ளும் பொருட்டு பல கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள நகர்ப்புற பாடசாலைகளுக்கே செல்ல வேண்டியுள்ளது. எனினும் போக்குவரத்து உள்ளிட்ட சிரமங்களால் பல மாணவர்கள் உயர் கல்வியைப் பயிலாது இடைநடுவில் கல்வியைக் கைவிடும் அல்லது இடைவிலகும் ஒரு போக்கு காணப்படுகின்றது. இது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்த வல்லதாகும் என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒரு விடயமல்ல.

மாணவர் இடைவிலகல்

2012/2013 ம் ஆண்டின் தகவல் ஒன்றுக்கமைய பெருந்தோட்டப் பகுதிகளில் பாடசாலைக்குச் செல்லாதோர் வீதமானது 12.2 ஆகக் காணப் பட்டது. அதே ஆண்டில் நகர்ப்புறத்தில் 2.2 சதவீதமானோரும், கிராமப்புறத்தில் 3.5 சதவீத மானோரும் பாடசாலைக்கு செல்லாதிருந்த னர். இதேவேளை தேசிய மட்டத்தில் 3.7 சதவீத மானோர் பாடசாலைக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் 2012/2013 ம் ஆண்டில் பெருந்தோட்டத்துறையில் ஐந்தாம் தரம் வரை பயின்றோர் 42 வீதமாகவும், 6 தொடக்கம் 10 ஆம் தரம் வரை பயின்றோர் 38.07 வீதமாகவும், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் வரை பயின்றோர் 4.09 வீதமாகவும், கல்விப் பொதுத் தராதர உயர்தரம் வரை பயின்றோர் 2.2 வீதமாகவும் இருந்தனர். பெருந்தோட்டப் பகுதிகளில் பாடசாலைக்குச் செல்லாதோர் நகரம் மற்றும் கிராமத்தைக் காட்டிலும் 4 தொடக்கம் 6 மடங்கு அதிகமாகும் என்றும் தகவலொன்று வலியுறுத்துகின்றது. இந்நிலையில் மாணவர் இடைவிலகும் நிலைமைகள் கல்வித் துறையில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இதேவேளை பாடசாலைகளில் இருந்தும் இடைவிலகும் மாணவர்கள் வீதியில் வெறுமனே சுற்றித் திரிவதையும் அவதானிக்க முடிகின்றது. இவர்களில் சிலர் சமூக விரோத செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குடும்பத்தினர் பல்வேறு சிக்கல்களுக் கும் முகம் கொடுக்கும் நிலையில் சமூகத்தின் அவப்பெயரையும் சுமக்க வேண்டிய துர்ப் பாக்கிய நிலை ஏற்படுகின்றது. இதனால் மாணவர் சமுதாயம் பாரிய பின்னடைவை சந்திக்க நேரிடும் என்பதையும் மறுப்பதற்கில்லை.அத்தோடு இடைவிலகும் மாணவர்கள் சிலர் நகர்ப்புறத்தில் கீழ்நிலைத் தொழில்களில் ஈடு பட்டு உழைத்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் கலாசார சீர்கேடுகள் பலவற்றுக்கும் முகம் கொடுத்து வருகின்ற நிலையில் இதனால் சமூகச் சீரழிவுகளும் அதிகமாகவே இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை நாட்டின் சமகால பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சிறுவர்களும் பெண்களும் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல சிறுவர்கள் போஷாக் கின்மை காரணமாக பல்வேறு கொடிய நோய் நொடிகளுக்கும் ஆளாகி வருவதுடன் கற்றலிலும் அது தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. மந்த போஷணமும் அதிகரித்துள் ளது. இந்நிலை காரணமாக பாடசாலை மாண வர்களுக்கு சத்துணவு வழங்கும் திட்ட த்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட நிலையில் அதற்கான கொடுப் பனவுகளும் திருத்தியமைக்கப் பட்டுள்ளன. இது வரவேற்கத்தக்கதொரு விடயமாகும்.

உணவு வழங்கலில் தாக்கம் 

இதனால் மாணவர்கள் சாதக விளைவுகளை பெற்றுக் கொள்ளும் வாய்ப்புள்ளது. எனினும் கஷ்ட மற்றும் அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளில் உணவு வழங்கலில் இடர்பாடுகள் எதிர்கொள்ளப்படுகின்றன. உணவு வழங்கு வோரை தெரிவு செய்வதிலும் இடர்பாடுகள் எதிர்கொள்ளப்படுகின்றன. இதேவேளை போக்குவரத்து உள்ளிட்ட பல பிரச்சினைகளும் உணவு வழங்கலில் தாக்கம் செலுத்தி வருவதாக அதிபர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மலையகம் மேன்மை பெறுவதற்கு கல்வி அபி விருத்தி மிகவும் இன்றியமையாததாகும். இதன் ஊடாகவே பல்வேறு சவால்களையும் சமாளிக் கும் அல்லது வெற்றி கொள்ளும் நிலைமை உருவாகும்.

மலையகத்தின் ஆரம்பக்கல்விப் போக்கு கள் ஓரளவு திருப்தி தருவனவாக இருந்தபோதும் உயர்கல்வி நிலைமைகள் இன்னும் விருத்தி செய்யப்படுதல் வேண்டும். இதனிடையே கல்வி அபிவிருத்திக்கு தோள் கொடுக்கும் கஷ்ட மற்றும் அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் பலவற்றையும் கவனத்தில் கொண்டு அவற்றை தீர்த்துவைக்க அரசாங்கம் முற்படுதல் வேண்டும். தற்போது ஆட்சிபீட மேறியுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இதற்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். இதேவேளை மலையக சமூகத்தில் இருந்து மேலெழுந்த நலன்விரும்பிகளும் இச்சிறப்பு பணிக்கு தம்மாலான உச்சகட்ட பங்களிப்பினை வழங்க முன்வருவது மிகமிக அவசியமாகும் என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றேன்.