Tamil News
Home செய்திகள் கல்வி நிலையங்களை படையினருக்கு வழங்குவதை நிறுத்தவேண்டும்

கல்வி நிலையங்களை படையினருக்கு வழங்குவதை நிறுத்தவேண்டும்

கொரோனா தடுப்பு செயற்பாடுகளுக்காக பாடசாலைகளையும் கல்வி நிறுவனங்களையும் படையினருக்கு வழங்குவதை அரசு நிறுத்தவேண்டும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தெற்கிலுள்ள சில பாடசாலைகள் சிலவற்றை  படையினர் சில தேவைகளுக்கு  இதற்கு முன்னர் பயன்படுத்தியிருந்தாலும் கூட தற்போது கொரோனா நோய் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் இராணுவத்தினர் தங்கவைக்கப்படுவதை எதிர்த்து ஆசிரியர் கலாசாலை போன்ற கல்வி நிறுவனங்களை சூழவுள்ள மக்களால் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றுள்ளன.

எனவே இந்த அச்சமான சூழ்நிலையில்  தனிமைப்படுத்துதல் மற்றும் தொற்றைக் கட்டுப்படுத்தல் என்னும் போர்வையில் பாடசாலைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவே  மக்கள் மத்தியில் அச்ச நிலை உருவாகியுள்ளது.
நாடு முழுவதும் 43 இலட்சம் மாணவர்கள் கல்விகற்றுவரும் நிலையில்  பாடசாலைகளை சூழ உள்ள சமூகத்தினருக்கு அச்சமூட்டும் வகையில் செயற்பாடுகள் நடைபெறுவதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மக்கள் செறிவு நிறைந்த இடங்களிலமைந்த பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களில்  இத்தகைய தனிமைப்படுத்தல் நிலைகளை அமைக்க முயற்சிப்பதாகவே தகவல்கள் கிடைத்துள்ளன.வடமராட்சி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில்  பாடசாலைகள் சிலவற்றை வழங்குமாறு இராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்வாறு கொரோனா நோய்த்தொற்று தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு பாடசாலைகளையும், கல்வி நிறுவனங்களையும் வழங்குவதை இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்க்கிறது. அச்சுறுத்தல் நிறைந்த இந்த சூழலில்  பாடசாலைகளை இராணுவத்தினருக்கு வழங்கும் செயற்பாட்டை கல்வியமைச்சு உடன் நிறுத்த வேண்டும் எனவும்  ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Exit mobile version