கல்வி அமைச்சு ஆசிரியர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக குற்றச்சாட்டு

தொற்றுநோய் பரவலால் ஸ்தம்பிதமடைந்துள்ள பாடசாலை மாணவர்களின்  கல்வி செயற்பாடுகளுக்கு எந்தவொரு பயனுள்ள ஏற்பாடுகளையும் அரசாங்கம்  மேற் கொள்ளவில்லை என நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.

இதற்கு பதிலாக தோல்வியுற்ற இணையவழி கல்வியை வழங்க அரசாங்கம் பல்வேறு வழிகளில் ஆசிரியர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

“தற்போது, கல்வி அமைச்சு, மாகாண கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களின்  அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.”

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கும்வரை, ஆசிரியர்கள் தோல்வியுற்ற இணையவழி கற்றல் முறையைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பது துரதிர்ஷ்டவசமானது என சுட்டிக்காட்டியுள்ள, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,  இணையவழி கல்வி தோல்வி என்பதை, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவும் ஒப்புக்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

தோல்வியடைந்த திட்டமென தெரிந்தும், ஆசிரியர்களை அதனை செய்யும்படி கட்டாயப்படுத்துவது கல்வி அதிகாரிகளின் ஒரே கொள்கையாக மாறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சிரேஷ்ட தொழிற்சங்கத் ஜோசப் ஸ்டாலின், பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் வரை முறையான அட்டவணை மூலம் தொலைக்காட்சியைப் பயன்படுத்தி கல்வியை வழங்குவது ஒரு நடைமுறைத் சாத்தியமான திட்டமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

“ஊடக நிறுவனங்களின் தலைவர்களை வரவழைத்து இதற்கான திட்டத்தை வகுப்பது கல்வி அதிகாரிகளின் பொறுப்பாகும்.”

கோவிட்-19 தொற்றுநோய் நாட்டில் பரவியுள்ள நிலையில், 4.3 மில்லியன் பாடசாலை மாணவர்களின் கல்வி ஸ்தம்பித்துள்ளதோடு, மேலும் பாடசாலைகள் காலவரையின்றி மூடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை சுகாதார பாதுகாப்பு

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர் மாணவர்களுக்கு தரமான முகக்கவசங்களை வழங்குதல் உள்ளிட்ட பாடசாலைகளுக்கென ஒரு சுகாதாரத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் எனவும், எனினும், இந்த நோக்கத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய அரசாங்கம், 54.70 பில்லியன் ரூபாய் செலவில் ருவன்புர அதிவேக வீதியை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதோடு, 625 மில்லியன் ரூபாய் செலவில் 500 உடற்பயிற்சி மையங்களை அமைக்கவும் விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஆசிரியர் சங்கம் விமர்சித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில், இதுபோன்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி செலவிடுவதற்கு முன்னர், கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த தேவையான தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது.

தடுப்பூசி வழங்கலில்போது  முன்னுரிமை அளிக்க வேண்டிய ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு மீண்டும் பாடசாலை ஆரம்பமாவதற்கு முன்னர் தடுப்பூசியை வழங்குவது அவசியமான விடயம் என அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.

“அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பேராதெனிய பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்திய கழுவி பயன்படுத்தக்கூடிய நனோ தொழில்நுட்பத்துடன் சுடிய முகக்கவசங்களை இலவசமாக வழங்குதல், பாடசாலைகளுக்கு சுகாதார வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல், பாடசாலைகளுக்கு போதுமான கிருமிநாசினிகளை வழங்குதல் போன்ற செயற்பாடுகளுக்கு நிதி உதவி வழங்கும் விடயத்தில் முன்னுரிமைளித்து செயற்பட வேண்டும், ” என லங்கை ஆசிரியர் சங்கம் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக வைத்திய நிபுணர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் புதன்கிழமை கலந்துரையாடலை நடத்தவுள்ளதாக, அநுராதபுரத்தில் பௌத்த பிக்குகளை சந்தித்த பின்னர், கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.