கருணை கொலை செய்து விடுங்கள் – சிறப்பு முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்

“சிறப்பு முகாம் எனும் சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் கருணை கொலை செய்து விடுங்கள்” என்ற கோரிக்கையை முன் வைத்து  ஈழ தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். 

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக தமிழ்நாடு காவல் துறையால் கைது செய்யப்பட்ட ஈழத் தமிழர்கள் 78 பேர் உள்ளனர்.

இந்நிலையில், தங்களை பொய் வழக்கில் கைது செய்தும் அந்த வழக்கில் தண்டனைக் காலத்திற்கு மேல் சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்து வைத்துள்ளனர் என்றும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும் அவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் ஈழத் தமிழர்களிடம் காவல் உதவி ஆணையர் மணிகண்டன், வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. அப்போது போராட்டம் நடத்தினால், வழக்குப் பதிவு செய்து, கைது செய்வோம் என்று  காவல்துறையின் மிரட்டுவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.