‘கருகிய நினைவுகளை மறைத்து வெண்ணிறக் கட்டடமாய் எழுந்து நிற்கின்றது யாழ் நுாலகம்’ – ரகுராம்

269 Views

யாழ். நூலகக் கட்டடம் அரசியலும் ஆதாயமும் ஒருங்கு சேர்ந்திட வெண்ணிறக் கட்டடமாய், கருகிய நினைவுகளை மறைத்து எழுந்து நிற்கின்றது என   யாழ். பல்கலைக்கழக சிரேஸ்ர விரிவுரையாளர் சிவசுப்ரமணியம் ரகுராம் தெரிவித்துள்ளார்.

யாழ். நுாலக எரிப்பு தொடர்பில், இலக்கு இணையத்தளத்திற்கு அவர் வழங்கிய நேர்காணலில்,

“ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக விளங்கிய யாழ். நூலகம் பேரினவாதத் தீயில் எரிந்து கருகியதை தமிழினத்தின் வரலாறு என்றும் ஒரு மாறாத வடுவாக, ஆறாத ரணமாகவே சுமந்து கொண்டிருக்கின்றது.

யாழ். நூலகம் கல்வியியலாளர்கள், மாணவர்கள், ஆய்வாளர்களை பொறுத்தவரைக்கும் ஒரு வரலாற்று மையமாகவும் தமிழர்களுடைய வரலாறு சம்பந்தமான ஒரு மையப்படுத்தப்பட்ட களஞ்சியமாகவும் இருந்தது.

திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இன வன்முறையாக தான் நூலக எரிப்பை நாங்கள் பார்க்கலாம். இதனை சாதாரண சம்பவமாக எடுத்துக் கொள்ள முடியாது.

இன வன்முறையின் சாட்சியமாகவும், ஒரு பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனத்தினுடைய புலமைச் சொத்தின் மீது கை வைத்து அழித்த வரலாற்று தடயமாகத்தான் இதனை பார்க்கலாம்.

தென்னாசியாவில் மிகப் பெரும் நூலகம் எமது நூலகம் எனப் பெருமையுடன் உலாவந்தவர்களின் நெஞ்சம் வேகும்படியான நிகழ்வுகளைத் தமிழினம் மறக்கவும் மாட்டாது, மன்னிக்கவும் மாட்டாது. இனியும் பொறுக்கோம் என உணர்வுடன் எழுந்த தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் முக்கியமானதொரு சான்றாதாரமாக திகழ்ந்த யாழ். நூலகம் பழைய நினைவுகளை மறந்துவிட சொல்லும் அழுத்தத்துடன், புதிய கட்டடமாக வெளிப்பூச்சு மிளிர்ந்திட நிற்கிறது.

பார்வைக்கு மட்டுமே இது புனரமைக்கப்பட்டு விட்டாலும், இழந்ததை மறந்துவிட முடியாத உள்மன ஆதங்கத்தை எவராலும் புனரமைத்துவிட முடியவில்லை.

எங்கள் வரலாறு வீறு கொண்டெழுவதற்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்றாக, ஒரு நினைவுச் சின்னமாக எரிந்த நிலையிலேயே பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டிய யாழ். நூலகக் கட்டடம் அரசியலும் ஆதாயமும் ஒருங்கு சேர்ந்திட வெண்ணிறக் கட்டடமாய், கருகிய நினைவுகளை மறைத்து எழுந்து நிற்கின்றது” என்றார்.

Leave a Reply