கப்பல் தீயைக் கட்டுப்படுத்த இந்திய விமானம், கப்பல்கள் கொழும்பு விரைந்தன

124 Views

கொழும்புத் துறைமுகத்துக்கு அருகில் வெடிப்புக்குள்ளான ‘எம்.வி- எக்ஸ்பிரஸ் பேர்ல்’ கப்பலில் ஏற்பட்டுள்ள தீயைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கையின் கோரிக்கையையடுத்து இந்திய விமானப் படை விமானம் ஒன்று, கடற்படைக் கப்பல்கள் சிலவும் அவசரமாக இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இது தொடர்பிலான கோரிக்கை நேற்று நண்பகல் இலங்கையால் முன்வைக்கப்பட்டதாகவும், உடனடியாகவே கண்காணிப்பு விமானம் ஒன்றை இந்தியா அனுப்பிவைத்தது. குறிப்பிட்ட விமானம் நேற்று மாலை 4.00 மணியளவில் கொழும்பை வந்தடைந்ததாக இந்திய உயர் ஸதானிகராலய வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனைவிட மேலும் மூன்று கப்பல்களையும் இந்தியா உதவிக்கு அனுப்புகின்றது. முதலாவது கப்பல் நேற்றிரவு கொழும்பை வந்தடைவதாக இருந்தது. ஏனைய இரண்டு கப்பல்களும் இன்று கொழும்பை வந்தடையும்.

இந்தியாவின் ஹசீரா துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்த கப்பலிலேயே வியாழக்கிழமை தீ பரவியது. சிங்கப்பூர் கொடியுடன் உள்ள இந்தக் கப்பலில் தீ பரவிய சந்தர்ப்பத்தில் எத்தனால், 25 தொன் நைட்ரிக் அசிட் உள்ளிட்ட இரசாயன பதார்த்தங்கள்1486 கொள்கலன்களில் இருந்துள்ளன.

கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்ட நிலையில் கப்பலில் தீப்பற்றியுள்ளது. நேற்று காலை கப்பலில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்தே நிலைமை மோசமடைந்து இந்தியாவின் உதவி நாடப்பட்டது.

Leave a Reply