கனவுக்கு உயிர் கொடுத்த ராம் – அன்று அகதி இன்று மருத்துவர்

“சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு நான் அகதி முகாமில் பல சிரமங்களிடையே வாழ்ந்து வந்தேன். அங்கு பல இழப்புகளையும் மனிதர்கள் படும் துன்பங்களையும் கண்டிருக்கிறேன். அந்த மோசமான அனுபவங்கள் எனக்கு உத்வேகத்தை வழங்கியது.
சாத்தியமற்றதை கனவு காணும் தைரியத்தை வழங்கியது. அப்போது நான் ஒரு மருத்துவராக விரும்பினேன்,” என தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்திருக்கும் ராம் கஹனல் இன்று ஒரு மருத்துவர்.
அவுஸ்திரேலியாவில் மருத்துவம் கற்று முடித்ததன் மூலம் இந்த கனவுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் ராம். 1990களில் பூட்டானில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையினால் உயிருக்கு அஞ்சி ஆயிரக்கணக்கான Lhotshampa இன மக்கள் வெளியேறினர்.
அவ்வாறு வெளியேறியவர்களே ராமின் தாயும் தந்தையும். அப்போது பூட்டானிலிருந்து வெளியேறி நேபாளில் தஞ்சம் புகுந்த ராமின் பெற்றோருக்கு 1993ம் ஆண்டு அகதி முகாமில் பிறந்திருக்கிறார் ராம் கஹனல்.
சுமார் 16 ஆண்டுகள் அந்த முகாமிலேயே வாழ்ந்து வந்த நிலையில், இறுதியாக 2009ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் மீள்குடியேற கிடைத்திருக்கிறது. அதன் மூலம் ஆஸ்திரேலியாவில் மீள்குடியேறிய ராம் இன்று ஒரு மருத்துவராக உருவாகியிருக்கிறார்.