Home செய்திகள் கனமழையால் புத்தளம் மாவட்டம் பெரிதும் பாதிப்பு – ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில்

கனமழையால் புத்தளம் மாவட்டம் பெரிதும் பாதிப்பு – ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில்

புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக எட்டு பிரதேச செயலாளர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், புத்தளம், நவகத்தேகம, கருவலகஸ்வெவ, வண்ணாத்திவில்லு, கற்பிட்டி, ஆனமடு, முந்தல் மற்றும் பள்ளம ஆகிய எட்டு பிரதேச பிரிவுகளில் 1,777 குடும்பங்களைச் சேர்ந்த 6,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,184 குடும்பங்களைச் சேர்ந்த 4268 பேர் 15 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள 4 தற்காலிக முகாம்களில் 310 குடும்பங்களைச் சேர்ந்த 1183 பேரும் நவகத்தேகம பிரதேசத்தில் அமைக்கப்படடுள்ள 2 தற்காலிக முகாம்களில் 240 குடும்பங்களைச் சேர்ந்த 730 பேரும் புத்தளம் பிரதேசத்தில் 6 தற்காலிக முகாம்களில் 551 குடும்பங்களைச் சேர்ந்த 2080 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, ஆனமடு பிரதேசத்தில் ஒரு தற்காலிக முகாமில் 25 குடுபங்களைச் சேர்ந்த 72 பேரும் மற்றும் கருவலகஸ்வெவ பிரதேசத்தில் ஒரு தற்காலிக முகாமில் 40 குடும்பங்களைச்சேர்ந்த 150 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை புத்தளம்-அநுராதபுரம் பிரதான வீதியின் மீ-ஓயா பாலத்திற்கு மேலாக சுமார் இரண்டு அடிக்கு வெள்ள நீர் பாய்ந்து செல்வதினால் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்த வேண்டும் என போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தப்போவ நீர்த் தேக்கத்தின் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளமையால் நீர்த் தேக்கத்தை அண்மித்து வாழும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

Puttalam Weather Situation 1 கனமழையால் புத்தளம் மாவட்டம் பெரிதும் பாதிப்பு – ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில்

Exit mobile version