Tamil News
Home செய்திகள் கட்சியை விமர்சித்தோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை; மாவை சூளுரை

கட்சியை விமர்சித்தோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை; மாவை சூளுரை

தேர்தல் காலங்களிலும் அதற்குபின்னரும் இணையத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் கட்சிக்கும் அதன் தலைமையின் மீது பிரசாரங்களை மேற்கொண்ட உறுப்பினர்களிற்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இன்றைய கலந்துரையாடலில் பாராளுமன்றத்தேர்தலில் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் பற்றி ஆராய்ந்திருந்தோம். ஒவ்வொருவரும் தமது பகுதிகளில் கட்சியின் வீழ்ச்சிக்கு ஏற்ப்பட்ட காரணம் தொடர்பாக கருத்துக்களை தெரிவித்தார்கள். எனவே அந்த விடயத்தில் ஏற்பட்ட பின்னடைவு தொடர்பாக ஆராய்ந்து ஒரு அறிக்கை சமர்ப்பிக்குமாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒரு குழு விரைவில் அமைக்கப்படும்.

அத்துடன் கட்சியின் தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பாக தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அந்த தேசியல் பட்டியல் ஆசனம் தலைவரது அனுமதி பெறாமல் செயலாளரால் தேர்தல் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டமை தவறானது என்றும் இருப்பினும் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட நியமனம் சரி என்றும், அது தொடரவேண்டும் என்றும் மத்தியகுழுவால் தீர்மானிக்கப்பட்டது. அந்த தீர்மானம் விதிமுறைகளிற்கு மாறானது என்பதை தீர்மானித்துள்ளோம். அது தொடர்பாக மேலும் தீர்மானங்கள் எடுக்கவேண்டுமாக இருந்தால் அடுத்த செயற்குழு அது தொடர்பாக தீர்மானிக்கும்.

அத்துடன் தேர்தல் காலங்களிலும் அதற்குபின்னரும் இணையத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் கட்சிக்கும் அதன் தலைமைக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்கள் தொடர்பாக, ஊடகங்களில் பகிரங்கமான கருத்துக்களை வெளியிட்ட உறுப்பினர்களிற்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை ஒன்றை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளோம். அதுவரை அவரது நியமனம் தொடரும்.

அத்துடன் 2020 தேர்தல் விஞ்ஞாபனம் அதில் கூறப்பட்ட அரசியல் தீர்வு தொடர்பான விடயங்கள், ஏனைய நடவடிக்கைகள் மக்களின் தேவைகளை நிறைவேற்றுதல் தொடர்பாகவும் தேசியமாநாட்டை நடாத்துவது தொடர்பிலும் அடுத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.

அத்துடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடகபேச்சாளர் மற்றும் கொரடா விவகாரம் தொடர்பாக இன்று நாம் எதனையும் பேசவில்லை.கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு கூட்டத்தில் அந்த விடயம் தொடர்பாக தீன்மானிப்பார்கள். தேவைப்பட்டால் நாங்களும், கூட்டமைப்பின் தலைவர்களுடன் பேசுவோம்.

எமது கட்சியின் மகளீரணியை சேர்ந்த பெண்மணி தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக கட்சியின் தலைவரது வழிகாட்டலின்படி செயலாளர் அவரை பதவியிலிருந்து இடைநிறுத்தியுள்ளார். அவர் மீது சுமத்தப்படும் குற்றங்கள் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கை எடுக்கும் என தீர்மானித்துள்ளது.
ஜனநாயக போராளிகள் கட்சிக்கு மாகாணசபையில் கூட்டமைப்பின் ஊடாக ஆசனம் வழங்குவீர்களா என கேட்டபோது, இவ் விடயம் தொடர்பாக நாம் எதனையும் இன்று கதைக்கவில்லை. அதற்கான நேரமும் போதுமானதாக இருக்கவில்லை என தெரிவித்தார்.

Exit mobile version