Tamil News
Home செய்திகள் கடந்த 24 மணி நேரத்தில் மட்டக்களப்பில் 128 பேருக்கு கொரோனா தொற்று

கடந்த 24 மணி நேரத்தில் மட்டக்களப்பில் 128 பேருக்கு கொரோனா தொற்று

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 128 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் இனங்காணப்பட்ட அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இதுவெனவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடி  காவல்துறை நிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 32 பொலிஸாருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து காவல்துறை நிலையம் தற்காலிமாக மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் மேலும் தெரிவிக்கையில்,

“மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 128கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதுவே மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்காணப்பட்ட அதிகளவான கொரோனா தொற்றாளர்களாகும். இவர்களில் வவுணதீவு பகுதியிலிருந்து 14பேரும், ஏறாவூர், செங்கலடி சுகாதார பிரிவிலிருந்து 13பேரும் வாழைச்சேனை சுகாதார பிரிவிலிருந்து 12பேரும் பட்டிப்பளை சுகாதார பிரவிலிருந்து 07பேரும் களுவாஞ்சிகுடி, கிரான் பகுதிகளிலிருந்து 6பேரும் கோறளைப்பற்று மத்தி, செங்கலடி, ஆரையம்பதி போன்ற பகுதிகளிலிருந்து தலா ஐந்து பேரும் அடங்குகின்றனர்.

அத்துடன் காத்தான்குடி  காவல்துறை  நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 32 காவல்துறை உத்தியோகத்தர்கள் கோவிட் தொற்றுள்ளவர்களாக அடையாள் காணப்பட்டனர். காத்தான்குடி காவல்துறை நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வவுணதீவு பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 14பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் தனியார் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றுபவர்களாவர். கடந்த 14 நாட்களில் இந்த தனியார் ஆடைத் தொழிற்சாலையில் 71 கோவிட் தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இந்தத் தொழிற்சாலை ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும்போது எமது அணியினரால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் அதனை திறப்பதா அல்லது மூடுவதா என்ற முடிவிற்கு எம்மால் வரமுடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகின்றது. மக்கள் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அப்படி செயற்படும் பட்சத்தில் மட்டுமே கோவிட் 19 தொற்றினை கட்டுக்குள் கொண்டுவர முடியும். அதிக முக்கியமான தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம்.

இது ஒன்றே நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான கடமையாகும். சுகாதார நடைமுறைகளை பின்பற்றுங்கள். முகக் கவசத்தை அணியுங்கள். கைகளை கழுவுங்கள். சமூக இடைவெளியை பின்பற்றுங்கள்.

தற்போது அடையாளங்காணப்படும் கோவிட் தொற்றாளர்கள் அதிகமாக குணங்குறிகளுடன் அடையாளம் காணப்படுகின்றனர். குணங்குறிகளுடன் அடையாளம் காணப்படுபவர்கள் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மட்டுமே அனுமதித்து சிகிச்சை வழங்க முடியும். அங்கு காணப்படும் கட்டில்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுவதனால் தற்போது தொற்றாளர்களை வெளி மாவட்டங்களுக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. புதிய நோயாளர்களையும் குணங்குறிகளற்ற நோயாளர்களையும் வெளி மாவட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

காய்ச்சல் மற்றும் இருமல்,தும்மல் போன்ற சுவாச அறிகுறிகள் ஏற்படும்போது அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று உங்களை பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் உங்களுக்கு கொவிட் தொற்று உள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்பொழுது குணங்குறிகளற்ற மற்றும் சிறு குணங்குறிகளுள்ள நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு கரடியனாறு, காத்தான்குடி, பெரியகல்லாறு போன்ற வைத்தியசாலைகள் செயற்பட்டு வருகின்றன. தற்போது அம்மூன்று வைத்தியசாலைகளும் நோயாளர்களால் நிரப்பப்பட்டுள்ளது.

அடுத்ததாக வாகரை பிரதேச வைத்தியசாலையும் நாவற்காடு பிரதேச வைத்தியசாலையும் தொற்றுநோயாளர்களுக்கான வைத்தியசாலையாக மாற்றப்படவுள்ளது.இன்னும் சில தினங்களில் அதுமாற்றப்படும்.அத்துடன் குணம்குறியுள்ள நோயாளர்களை பராமரிப்பதற்காக களுவாஞ்சிகுடி வைத்தியசாலையும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையும் மாற்றப்பட்டுவருகின்றது”. என்றார்.

Exit mobile version