கங்கையில் மிதக்கும் கொரோனா சடலங்கள் – குற்றச்சாட்டை மறுக்கும் உத்தரபிரதேசம்

பீகார் மாநிலம் பாஸ்ர் மாவட்டத்தின் சவுசா நகர்பகுதியில், கொரோனா தொற்றால் மரணமடைந்தவர்களின் சடலங்கள், கங்கை ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பிகாரில் தினமும் 10,000 நோய்த்தொற்றுகள் பதிவாகின்றன, மேலும் 60 க்கும் மேற்பட்ட இறப்புகள் நிகழ்கின்றன. கொரோனாவால் பிஹாரில் இதுவரை 3,282 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலத்தில், கொரோனா தொற்றால் மரணமடைந்தவர்களை தகனம் செய்ய இடம் கிடைக்காததால், இறந்தவர்களின் உறவினர்கள் சடலங்களை கங்கை நதியில் விட்டுவிடுவதாகவும், இதன் எண்ணிக்கை சுமார் 40 முதல் 150 வரை இருக்ககூடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து சவுசா மாவட்ட அதிகாரி ஒருவர் கூறும்போது, காலையில் சவுசாவின் மகாதேவ் காட் பகுதியில் 40 முதல் 45 சடலங்கள் மிதந்தன. 100 சடலங்கள் கூட இருக்கலாம் எனச் சிலர் கூறுகின்றனர். சடலங்கள் எல்லாம் உப்பியுள்ளன. இவை எங்கிருந்து வந்தன என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் பராயிச், வாரணாசி அல்லது அலகாபாத்தில் இருந்தே வந்திருக்க வேண்டும். ஏனெனில் பிஹாரின் இப்பகுதியில் சடலங்களை நதியில் வீசும் பழக்கமில்லை. மேலும், அவை கொரோனாவால் உயிரிழந்தோர் சடலமா என்ற சந்தேகமும் உள்ளது. அதனால், கிராமவாசிகள் கொரோனா அச்சத்தில் உள்ளனர் என்றார்.

ஆனால், சடலங்கள் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தது அல்ல என்று  உத்திரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.

பிஹார் உத்தரப் பிரதேசம் ஆகிய இரு மாநில எல்லைகளை ஒட்டி அமைந்துள்ள நகரம் சவுஸா. இது பிஹாரில் இருந்தாலும் உத்தரப் பிரதேச எல்லையையும் ஒட்டி இருக்கிறது. இந்த நகரத்தின் வழியாகக் கங்கை நதி பாய்ந்து செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.