ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு; இதுவே எனது தீர்வு – சஜித்

334 Views

ஒற்றையாட்சி முறைக்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

‘ஒற்றை ஆட்சி’ என்பதில் மெய்யான அதிகாரப்பகிர்விற்கு இடமில்லை என தமிழ் மக்கள் உறுதியாக நம்முகின்ற நிலையில் ஐதே வின் முக்கிய பிரமுகரான சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்திருப்பது பேரினவாத கட்சிக்ள் அனைத்தின் கொள்கைகளும் ஒன்றே என்பதை காட்டுவதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அங்கு தொடர்ந்து பேசிய சஜித் பிரேமதாச,

ஒற்றையாட்சி என்பது வெறுமனே எழுத்துக்களில் மாத்திரம் இருக்கக் கூடாது. நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பினரும் பிரிக்கப்படாத ஒற்றையாட்சியுடைய நாட்டில் வாழ்கின்றோம் என்ற உணர்வு  ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“புதிய இலங்கைக்கு நவீன ஊடகம்” என்ற தலைப்பில் கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு, அங்கு எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதில் வழங்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அதிகாரப்பகிர்வு தொடர்பில் தனது நிலைப்பாடு வெளிப்படையானது எனக் குறிப்பிட்ட அவர், ஒற்றையாட்சி முறைக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் கூறினார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் இதுவே தமது நிலைப்பாடாக இருந்தது. இந்நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் இருக்கின்றேன் என்றார்.

சில அரசியலமைப்புக்களில் ஒற்றையாட்சிமுறை காணப்படுகிறது, சிலவற்றில் சமஷ்டிமுறை காணப்படுகிறது. ஒற்றையாட்சியுடைய இலங்கை பற்றிப் பேசும்போது அது வெறுமனே அரசியலமைப்பு மற்றும் ஆவணங்களினால் மாத்திரமான தகுதியாக அமையக்கூடாது. சகல மதங்கள் மற்றும் சகல இனங்களையும் சேர்ந்த இலங்கையர்கள் அனைவரும் ஒற்றையாட்சியின் குணாதிசயங்களை உணர்வதாக இருக்க வேண்டும். சகலருடைய மனங்களையும் வெல்லக் கூடிய வகையில் ஒற்றையாட்சியை அமைப்பதற்கு ஏதுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இதனை அடைவதற்கு இனவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்க வேண்டும். பாகுபாடுகளுக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும். சிறுபான்மை பெரும்பான்மை என்ற சொற்பதங்களைப் பயன்படுத்த நான் விரும்பவில்லை. நாட்டிலுள்ள ஏதாவது ஒரு தரப்பினர் தாம் தீங்கிழைக்கப்பட்டதாக உணர்ந்தால், அவர்களின் குறைகள் தீர்க்கப்பட வேண்டும். மனிதநேய கொள்கைகளின் அடிப்படையில் அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதன் ஊடாகவே அனைவரும் ஒற்றையாட்சியான நாட்டில் வாழ்கின்றோம் என்ற மனநிலையை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.

 

Leave a Reply