ஒற்றுமையை புறக்கணிக்கும் மலையக கட்சிகள் -மருதன் ராம்

தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலை யில், உள்ளூராட்சிமன்றங்களின் பதவிக்காலம் எதிர்வரும் 2ஆம் திகதி முதல் ஆரம்ப மாகவுள்ளது. மலையக பகுதிகளில் உள்ள பெரும்பாலான உள்ளூராட்சிமன்றங்களில் தனித்து ஒரு கட்சியினால் ஆட்சியமைக்க முடி யாத நிலை காணப்படுகிறது. அவ்வாறாயின் மலையக கட்சிகள் ஒன்றிணைந்தால் உள்ளூ ராட்சிமன்றங்களில் ஆட்சியமைக்க முடியும்.
பல சபைகளை இணைந்து கைப்பற்றும் சாத்தியங்கள் இருந்தாலும் கூட பல காரணங் களுக்காக மலையகக் கட்சிகள் தம்மிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தாமல் பிளவுபட்டு நிற்பது போன்று தெரிகின்றது. தேர்தல் முறைமை மற்றும் தனித்துவத்தை வெளிப்படுத்தவதற்காக மலையகத்தில் இயங்கும் பிரதான கட்சிகள் சில இடங்களில் பிரிந்தும் சில இடங்களில் இணைந்தும் இன்னும் சில இடங்களில் தேசிய கட்சிகளுடன் இணைந்தும் போட்டி யிட்டிருந்தன. இதன்படி, அந்த கட்சிகள் கணிச மான வாக்குகளை பெற்று பல ஆசனங்களை கைப்பற்றியுள்ளன.
அதேநேரம் தேசிய மக்கள் சக்திக்கு பெருந்தோட்ட மக்களின் ஆதரவு இல்லை என்று காண்பிப்பதற்கும் மலையக கட்சிகள் முயற்சித்திருந்தன. இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அதனை அடுத்து இடம்பெற்ற பொதுத் தேர்தலுக்குப்பிறகு தேசிய மக்கள் சக்தியின் வேகத்தை கட்டுக்குள் கொண்டு வந்த தேர்தலாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் விளங்குகின்றது.
பெருந்தோட்ட தமிழ் சமூகத்தினர் அதிக மாக வாழ்ந்து வரும் துவரெலியா மாவட்டத்தில் உள்ள முக்கிய உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறவில்லை. தேசிய மக்கள் சக்தி ஆட்சிய மைப்பதற்கு, மலையகக் கட்சிகள் மற்றும் அவை பெற்ற வாக்குகள் சவாலாக உள்ளன. எவ்வாறாயினும் மக்களிடம் இருந்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தும் சாணக்கிய அரசியல் நகர்வை மலையகக் கட்சிக ளிடத்தே காண முடியவில்லை. தொடர்ந் தும் தனித்து நின்று செயற்படுவதற்கே மலைய கட்சிகள் விரும்புவதாகத் தெரிகின்றது. இந்த விடயம் தொடர்பில் சில கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும் அவை வெற்றியளிக்கவில்லை.
சில சபைகளில் தீர்மானிக்கும் சக்திக ளாக சுயேட்சைக் குழுக்கள் இருப்பதால் அவர்கள் யார் பக்கம் தாவுவதற்கு தயாராக இருக்கின்றனர் என்ற எதிர்ப்பார்ப்பும் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.
பிரதான மலையக கட்சிகளான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலா ளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி என்பன சில சபைகளை கைப்பற்று வதில் இரகசியமான வியூகங்களை வகுத்து வருகின்றன. எனினும் தவிசாளர், பிரதி தவிசாளர் மற்றும் நகர முதல்வர் போன்ற பதவிகளுக்காக அந்த கட்சிகளுக்கிடையே பிளவுகள் உருவாகியுள்ளமை அறியமுடிகின் றது. சில நேரங்களில் ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக சபைகளில் செயற்படு வதற்கு சில கட்சிகள் முன்வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. மலையக அரசியலில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்ற வர லாறும் உண்டு.
இருப்பினும் இதற்கு முன்பு ஆட்சியமைத்த தேசிய கட்சிகளை விட, தேசிய மக்கள் சக்தியின் அரசியல் கொள்கைகள் வேறுபட்டவை என்பதை மக்களும் அரசியல் கட்சிகளும் ஏற்கனவே உணர்ந்துள்ளனர். அதனை கருத்திற் கொண்டு மலையக கட்சிகள் அடுத்த கட்ட திட்டங்களை வகுப்பது நல்லது. அதேநேரம் மக்களால் நிராகரிக்கப்பட்ட எந்த கட்சியுடனுடன் கூட்டிணைய போவ தில்லை என்று தேசிய மக்கள் சக்தி ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் நன்கு அறிந்துள்ள போதிலும் தேசிய மக்கள் சக்திக்கு மலையக கட்சிகள் ஆதரவளிக்க தீர்மானித்தால் அதற்கு பின்னால் வேறு சில காரணங்களும் இருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுகிறது.
அதன்படி, ஆளும் தரப்புக்கு ஆதரவாக செயற்பட்டு பிரதேச அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வதன் ஊடாக முன்னைய ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று மலையக கட்சிகள் நினைப்பதற்கும் இடமுண்டு. அதேநேரம் உள்ளூராட்சி சபைகளில் தமக்கு ஆதரவு கரம் நீட்டுமாறு தேசிய மக்கள் சக்தி திரைமறைவில் மலையகக் கட்சி களிடம் பேச்சு நடத்தி வருவது புதிய விடயமல்ல. ஆனால் கடந்தகால தவறுகளை மறைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி துணை போகுமாயின் அது தங்களுக்கு வாக்களித்த மக்களுக்குச் செய்யும் பெருந்துரோகமாகும்.
பல தேர்தல் மேடைகளில் கடந்த கால அரசியல்வாதிகளை குறை கூறும் கலாசாரம் உண்டு. ஆனால் அவ்வாறான குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறல் என்பது எந்த சந்தர்ப்பத்திலும் இடம்பெற்றதில்லை. அதற்காக எவரும் குரல் எழுப்புவதும் இல்லை. ஊழலுக்குகெதிராக செயற்படுதலே எமது ஆட்சியின் பிரதான குறிக்கோள் என்ற வாக்குறுதியுடன் மக்கள் வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது. தாம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கேற்ப முன்னாள் பிரபல அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரை இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளில் அரசாங்கம் கைது செய்து வருகின்றது. ஆனால் தேசிய மட்டத்தில் அவ்வாறு செயற்படும் தேசிய மக்கள் சக்தியானது உள்ளூரில் கறை படிந்த கரங்களையுடையவர்களுடன் கைகுலுக்கி உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரங்களை கைப்பற்றப் போகின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மலையக கட்சிகளின் இருப்பு?
இவை எல்லாவற்றையும் விட மலையகக் கட்சிகளின் எதிர்கால அரசியல் இருப்பு குறித்த கேள்வியும் இங்கு தவிர்க்க முடியாதது. நாட்டில் இடம்பெற்றுள்ள மூன்று தேர்தல்களுக்கு முகங்கொடுத்துள்ள மலையகக் கட்சிகள் கடந்த காலத்தில் தங்களின் வசம் வைத்திருந்த மக்களின் ஆதரவை கணிசமான அளவு இழந்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் மாத்திரமின்றி உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் பெருந்தோட்ட மக்களின் கணிசமான வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.
அடுத்து இடம்பெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறுவதனை அடிப்படையாகக் கொண்டே தேசிய மக்கள் சக்தி செயற்படுகிறது என்பது இதனூடாக புலனாகியுள்ளது. குறித்த சபைகள் சிலவற்றில் தனித்தோ அல்லது ஒன்றிணைந்தோ ஆட்சிய மைக்கப் போகும் மலையகக் கட்சிகள் தம்மை எவ்வாறு அடுத்த தேர்தலுக்கு தயார்ப்படுத்தப் போகின்றன என்பது முக்கிய விடயம். சில சபைகளை அமைப்பதற்கு தேசிய மக்கள் சக்திக்கு மலையக கட்சிகள் ஆதரவு வழங்குமாயின் அது அடுத்து இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் அந்த கட்சிகளின் இருப்பை பாதிக்கும்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்ட தமிழ் மக்கள் ஆர்வமாக வாக்களிக்கவில்லை. அடுத்த ஒரு வருட இடைவெளிக்குள் மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றாலும், என்ன வாக்குறுதிகளை முன்வைத்து மலையகக் கட்சிகள் அல்லது கூட்டணிகள் மக்களிடம் சென்று வாக்குக் கேட்டு நிற்கப்போகின்றன? அவற்றை கேட்பதற்கு எத்தனை பேர் தயாராக இருக்கப்போகின்றனர்? என்று கேள்விகளும் உள்ளன.
மாறாக பிரதான மலையக கட்சிகள் ஒன்றிணைந்து இடைப்பட்ட காலப்பகுதியில் உள்ளூராட்சிமன்றங்களின் ஊடாக குறிப்பிடத்தக்க வேலைத்திட்டங்களை முன்னெடுத்தால் அது சிறந்த முடிவாக இருக் கும். மறுபுறம் பெருந்தோட்ட மக்களின் பிரதான தெரிவாக மலையக கட்சிகள் மீண்டும் திகழ வேண்டுமாயின் போலி காரணங்களை துறந்து மலையகக் கட்சிகள் மக்களுக்காக ஒன்று படல் அவசியமான விடயமாக மாறியுள்ளது. இதேவேளை கட்சிகளுக்கு இடையே இடம்பெறும் பேச்சுவார்த்தைகளையும் பிளவுகளை யும் ஆளும் தேசிய மக்கள் சக்தி தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றது. எனவே சில சபைகளில் எதிரணிகள் கூட்டாக இணைந்து ஆட்சியமைக்காவிடின் தனக்கிருக்கும் பெரும் பான்மை ஆசனங்களால் தேசிய மக்கள் சக்திக்கு ஆட்சியமைக்க முடியும் என்பது முக்கிய விடயமாகும்.