ஒரு நீதியான தீர்வு சர்வதேசத்தின் ஊடாக கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது – கனகரஞ்சினி

345 Views

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி அவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல்

கேள்வி: தற்போது புதிய நாடாளுமன்றம் உருவாகியிருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையில் உங்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தின் எதிர்கால திட்டம் என்னவாக அமையும்?

பதில்: காலத்திற்குக் காலம் அரசும், ஆட்சியும் மாறிக் கொண்டு தான் இருக்கின்றது. எங்களுக்கான தீர்வு இலங்கை அரசால் ஒருபோதும் கிடைக்காது என்னும் பட்சத்தில் தான் நாங்கள் சர்வதேச விசாரணையைக் கோரி நிற்கின்றோம். இந்த ஆட்சி மாற்றங்கள் தமிழ் மக்களுக்கும், காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோருக்கும் எந்தவிதமான ஒரு பிரயோசனத்தையும் பெற்றுத் தரப்போவதில்லை என்பது உறுதி.

Dis 2020 08 30 11 12 33 ஒரு நீதியான தீர்வு சர்வதேசத்தின் ஊடாக கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது - கனகரஞ்சினிஏனென்றால், நாங்கள் தெருவிற்கு வந்து இன்று 11 வருடங்கள். இந்த பதினொரு வருடங்களிலும், பாராளுமன்றம் போன தமிழ்ப் பிரதிநிதிகள் எங்களுடைய பிரச்சினைகளை, தமிழர்களின் பிரச்சினைகளை கூறுகின்றோம் என்று கூறுகின்றார்களே தவிர, தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு இதுவரைக்கும் கிடைக்கவில்லை. இந்தச் சூழலால் நாங்கள் பின்னடைவையும், வேதனைக்குரிய நிலையையும் தான் அடைந்திருக்கின்றோம். எனினும் இலங்கை அரசிற்கு ஊடாக நீதி கிடைக்காத போது, சர்வதேசத்தின் ஊடாகத் தான் நீதியை எதிர்பார்த்திருக்கின்றோம்.

கேள்வி: புலம்பெயர்ந்து வாழ்கின்ற தேசங்களிலுள்ள தமிழ் சமூகமும், வெளிநாடுகளும் உங்களின் போராட்டங்களுக்கு எந்தவிதமான ஆதரவை வழங்க வேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில்: நாங்கள் எங்கள் போராட்டத்தை 2017 மாசி 20ஆம் திகதி ஆரம்பித்த போது நாங்கள் இத்தனை காலம் இந்தப் போராட்டத்தை நடத்திச் செல்வோம் என்று ஆரம்பிக்கவில்லை. நாங்கள் கையளித்த பிள்ளைகள், தாங்களாகவே சரணடைந்த பிள்ளைகள், வைத்தியசாலைகளிலிருந்து கடத்தப்பட்ட பிள்ளைகள், வீடுகளுக்குள்ளே இருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்ட பிள்ளைகள் போன்றோர் எங்கோ ஒரு தடுப்பு முகாமில் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையில் இன்று வரை போராடிக்கொண்டிருக்கின்றோம்.

இலங்கை அரசு எங்கள் நம்பிக்கையான இந்தப் போராட்டத்தைக் கண்டு கொள்ளாத போது, எங்களுக்கு அதற்கு ஊடான தீர்வைத் தராத போது, இனிமேல் அவர்கள் தருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது. நாங்கள் இதுவரை காலமும் ஐ.நா. கூட்டத்தொடரின் 36ஆவது கூட்டத்தொடரிலிருந்து நாங்கள் அங்கு சென்று எங்கள் உண்மைக்கும் நீதிக்குமான போராட்டத்திற்கு நீதி வேண்டும் என்று நாங்கள் கேட்டு நிற்கின்றோம். சர்வதேசமும் இவ்வளவு காலமும் இழுத்தடிப்பைத் தான் செய்கின்றது. இலங்கை அரசைக் காப்பாற்றுகின்றது. கால அவகாசத்தைக் கொடுக்கின்றது. எங்களுடன் போராடிக் கொண்டிருக்கும் உறவுகளை நாங்கள் இழந்து கொண்டிருக்கின்றோம்.

2020 ஓகஸ்ட் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்திலாவது எங்களுக்கான நீதியை சர்வதேசம் பெற்றுத் தரவேண்டும் என்று நாங்கள் சர்வதேசத்திடம் கேட்டு நிற்கிறோம். அதற்கான போராட்டம் வடக்கிலே யாழ்ப்பாணத்தில் பேருந்து நிலையத்திலிருந்து கச்சேரி வரைக்கும், கிழக்கிலே மட்டக்களப்பில் கல்லடிப் பாலத்திலிருந்து காந்தி பூங்கா வரைக்கும் எங்கள் போராட்டத்தை, எமக்கு நீதி கிடைக்கும் வரை போராடவுள்ளோம். எங்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி, இழிவுபடுத்தி நசுக்க முற்பட்டாலும்கூட, நாங்கள் அதிலிருந்து மீண்டெழுந்து எங்களுடன் உறவுகளுடன் வாழ்வதற்கு ஒரு தாய் இருக்கும் வரைக்கும் போராடுவோம்.

கேள்வி: 1200 நாட்களைக் கடந்தும் உங்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்தப் போராட்ட காலத்திலிருந்து நீங்கள் கற்றுக் கொண்டவை என்ன?

பதில்: நாங்கள் இலங்கை அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டோம். ஆட்சி மாற்றத்திற்கு முன்னர் சொன்னார்கள் 12,000 போராளிகளையும் புனர்வாழ்வளித்து அனுப்பி விட்டோம் என்று சொன்னார்கள். அப்படியாயின் அவர்களில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தில் பதிவில் உள்ளவர்கள்கூட இன்னும் தங்கள் குடும்பங்களுடன் சேராது உள்ளனர். அவர்களின் உறவுகள் அவர்கள் எங்கே என்று தெரியாது எங்களுடன் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை 3 தடவைகள் சந்தித்தோம். எங்கள் பிரச்சினைகளை, எங்கள் கோரிக்கைகளை முன்வைத்தோம். அதற்கு அவர் உங்கள் பிள்ளைகள் திருவிழாவில் காணாமல் போகவில்லை. அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். நாங்கள் காலம் தாழ்த்தி விட்டோம். நிச்சயமாக உங்களுக்கு ஒரு தீர்வு பெற்றுத் தருவோம், உங்களின் பிள்ளைகளை மீட்டுத் தருவோம் என்று கூறினார்.

dis 33 ஒரு நீதியான தீர்வு சர்வதேசத்தின் ஊடாக கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது - கனகரஞ்சினிஇன்றுவரை எதுவும் நடக்கவில்லை. அவரும் போய்விட்டார். OMP என்ற காணாமல் போனோர் அலுவலகம் என்று வந்தது. எங்கள் பிள்ளைகள் காணாமல் போகவில்லை. காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த அலுவலகத்தை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகமாக மாற்றியமைக்க வேண்டும். அதற்கான பொறிமுறை ஊடாக எங்களுக்கான நீதியை தரவேண்டும் என்று நாங்கள் கேட்டிருந்தோம். அதற்காக மாவட்ட செயலணி ஊடாக மக்களின் கருத்துக்களை வாங்கி அவர்களிடம் கையளித்திருந்தோம்.

அது முற்றுமுழுதாக ஒரு OMP அலுவலகமாக அது செயற்படுவதை நாங்கள் நிராகரித்தோம். ஆட்சி மாற்றத்தின் பின்னர் என்ன செய்வதென்று தெரியாது அவர்களே விலகி போகும் அளவிற்கு வந்து விட்டது. பாதிக்கப்பட்ட தாய்மார்களை விட, தமிழர்களையும் ஏமாற்றுகின்றார்கள். எங்களுடைய வாழ்வாதாரங்கள், பண்பாடுகள், கலாச்சாரங்களை சீரழித்து வருகின்றார்கள். மொழியாலும், இனத்தாலும் வீழ்த்தப்பட்டதாலேயே பிள்ளைகள் ஆயுதம் ஏந்தினார்கள். இன்று அதே நிலையை ஜனநாயக ரீதியாக அவர்கள் எங்களுக்கு செயற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஜனநாயகம் என்று பேசிக் கொண்டு அதன் ஊடாக எங்களை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள். எங்களை ஆயுதம் இல்லாமல் அழிக்கின்றார்கள்.

கேள்வி: உங்களின் இந்தப் போராட்டத்திற்கு வெளிநாடு, புலம்பெயர்ந்த தேசம் தவிர்ந்த எங்களின் தேசத்திலே, தாயகத்திலே மக்களின் ஆதரவு எப்படியிருக்கிறது?

பதில்: வடக்கு கிழக்கில் மட்டுமல்ல, தென்பகுதியிலுள்ள தமிழர்களும் எங்களுடன் தொடர்பு கொண்டு எங்களுக்கான நீதியைப் பெற்றுத்தர எங்கள் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக எங்களுடன் ஒன்றிணைகின்றார்கள். அதே போல 11 வருடமும் எங்களின் உறவுகளைத் தேடி நாங்கள் தெருவிலே இருக்கின்றோம். புலம்பெயர் தேசங்களிலுள்ள எங்கள் உறவுகள் இளைஞர்கள், யுவதிகள் எங்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காக அங்கே குரல் கொடுக்க முற்பட்டிருக்கின்றார்கள்.

கனடாவில் எதிர்வரும் 30ஆம் திகதி 500 கிலோமீற்றர் தூரத்திற்கு நீதிக்கான நெடும் பயணம் ஒன்றை ஆரம்பிக்கின்றார்கள். அவர்கள் வெறுமனே நடை பயணமாக இல்லாது, தாங்கள் செல்லும் வழிகளில் எங்களின் போராட்டங்களை மக்களுக்கு விளங்கப்படுத்தி அவர்களை இணைத்து செப்டெம்பர் மாதம் 15, 16ஆம் திகதியளவில் தங்கள் பயணத்தை நிறைவு செய்யவுள்ளனர். புலம்பெயர் நாடுகளில் உள்ள இளைஞர்கள், யுவதிகள் தாய்மார்களின் கண்ணீரைப் புரிந்து கொண்டு எங்களுக்காக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

நிச்சயமாக ஒரு நீதியான தீர்வு சர்வதேசத்தின் ஊடாக கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. கனடாவில் மட்டும் அல்ல பிரித்தானியா, ஜேர்மனி, சுவிற்சர்லாந்தில் வாழுகின்ற எங்கள் உறவுகள் இந்த சர்வதேச காணாமல் அக்கப்பட்டோர் தினத்திலே தாயகத்தில் வாழ்கின்ற எங்கள் உறவுகளுக்காக அவர்கள் அங்கே குரல் கொடுத்து போராட்டங்களை செய்கின்றார்கள். அவர்களுக்கு நாங்கள் எங்கள் கண்ணீருடன் நன்றியுடையவர்களாக இருக்கின்றோம்.

கேள்வி: இலங்கையைப் பொறுத்தவரையில் பல்கலைக்கழக மாணவர்களும், இளைஞர்களும் உங்கள் போராட்டத்திற்கு எவ்வாறு வலுச் சேர்க்கின்றார்கள்.

பதில்: பல்கலைக்கழக மாணவர்களின் பலம் எங்களிடம் நிறையவே இருக்கின்றது. வவுனியாவில் நடைபெற்ற போராட்டம் என்றாலும் சரி, கடந்த நான்கு

ஆண்டுகளாக நாங்கள் நடத்திய போராட்டங்கள் அனைத்திலும் பல்கலைக்கழக மாணவர்களின் பங்கு இருந்தது. எங்களின் மாணவர்கள், இளைஞர்கள், கிராம மட்ட அமைப்புக்கள் எங்களுடன் இருக்கின்றார்கள். மேலும் எமது தமிழ் உறவுகள் அனைவரும் இந்த 8 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு வலுச்சேர்த்து எங்களின் போராட்டத்திற்கு பலமாகவும், உறுதியாகவும், எங்களுக்கு நீதி கிடைக்கும் வகையிலும் அவர்கள் எங்களுடன் ஒன்றிணைந்து இந்தப் போராட்டங்களில் கலந்து கொள்கின்றார்கள் என்பது தான் உண்மை.

 

Leave a Reply