இலங்கையின் அரச தலைவர் தேர்தல் பிரச் சாரங்கள் இறுதி வாரம் மிகவும் கடுமையான மோதலாக மாற்றம் பெற்றிருந்தது. சிங்களக் கட்சிகளுக்கு இடையிலான பிரச்சார மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் என்ற போட்டி ஒருபுறம் இருக்க. தமிழர் தரப்புக்கும் சிங்களத் தரப்புக்கும் இடையிலான கடும் போட்டியாகவும் அது மாற்றம் பெற்றிருந்தது.
அதுமட்டுமல்லாது தமிழ் பொதுவேட்பா ளர் என்று களமிறக்கிய அரியநேந்திரனை எதிர்த்து சிங்களக் கட்சிகள் பிரச்சாரம் செய்ததைவிட அல்லது சிங்களவர்கள் தாக்கியதைவிட இதுவரை யில் தமிழ்த் தேசியம் என்று சாயம்பூசி உலாவிய ஒரு சில தமிழர்களின் தாக்குதல்கள் தான் அதிகம் என தளத்தில் இருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தபோது ஒரு தமிழனாக மனம் ஏதோ வேதனையை அனுபவித்தது.
தமிழ் பொதுவேட்பாளர் என்று தமிழர்கள் ஒருங்கிணைந்துவிடக் கூடாது என்பதில் சிங்களவர்களை விட ஒரு சில தமிழர்களும், இந்தியாவும் முனைப்பாக நின்றதை இந்த தேர்தல் ஈழத் தமிழர்களுக்கு தெளிவாக படம்போட்டு காண் பித்துள்ளது.
புலம்பெயர் தேசத்திலும் அதே நிலைமை தான் தேசியம் தமிழீழம் என்று பேசிய பல அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் சாயங்கள் அனைத்தும் வெளுத்துப்போன தேர்தலாக இந்த தேர்தல் அமைந்தது என்பது தமிழ் மக்களுக்கு மிகப்பெரும் அனுகூலமானது ஒன்றாகவே பார்க் கப்படுகின்றது.
தாயகத்தில் யாழ் பல்கலைக்கழகம் என் பது ஈழத்தமிழ் மக்களின் அறிவுத்திறனின் ஒரு இருப்பிடம். அந்த வளாகம் எமது அகிம்சைப்போரிலும் சரி, ஆயுதப்போரிலும் சரி தன்னிடம் உள்ள வளங்களை பயன்படுத்தி மிகப்பெரும் பங்களிப்பை எமது மக்களுக்கும் மண்ணுக்கும் அன்று வழங்கியிருந்தது. அதில் இருந்த எத்தனையே அற்புதமான மனிதர்கள் பேராசிரியர்கள், தமது அறிவையும், ஆற்றலையும் எமது போரட்டத்திற்கு வழங்கியிருந்தனர். அதில் ஒருவர் மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்கள். ஆனால் இன்று அதே பல்கலைக்கழகத்தில் இருந்து 15 பேராசிரியர்கள் என்ற போர்வையில் சிங்கள தேசத்தின் வேட்பாளர் ஒருவரை மறை முகமாக ஆதரித்து ஒரு குழுவினர் வெளியிட்ட அறிக்கை என்பது தமிழ் கல்விச் சமூகத்தை தலைகுனிய வைத்துள்ளதாகவே தோன்றுகின்றது.
இருந்தபோதும், இத்தனை இடர்களையும் தாண்டி கடந்த புதன்கிழமை(18) கேணல் கிட்டு பூங்காவில் இடம்பெற்ற தமிழ்வேட்பாளரின் தேர்தல் கூட்டத்தில் மக்கள் அலையாக திரண்டது என்பது அவர்களின் அரசியல் மற்றும் விடுதலை உறுதியை பறைசாற்றி நிற்கின்றது.
போலியாக ஏமாற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை நம்பாது, போலியான வாக்குறுதிகளை வழங்கும் பிராந்திய நாடு களை புறம்தள்ளி, தமக்கு ஒரு ஜனநாயகம், மற்றவர்களுக்கு ஒரு ஜனநாயகம் என உலகிற்கு பாடம் எடுக்கும் மேற்குலகத்தின் வலைக்குள் வீழாது. கடந்த 75 ஆண்டுகளாக போலியான வாக்குறுதிகளை வழங்கும் சிங்கள தேசத்தின் அரசியல்வாதிகளை புறம்தள்ளி தனது இனத்தின் ஒரு வேட்பாளருக்காக கிட்டுபூங்காவில் கால் பதித்த ஒவ்வொரு தமிழனும் எமது விடுதலையை வென்றெடுக்கும் அரசியல் போராளியாகவே இன்று தெரிகின்றான்.
இலங்கையில் இனப்பிரச்சனை இல்லை என்கிறது சிங்கள அரசு, சிங்கள வேட்பாளர்களும் இனப்பிரச்சனையில்லை என்றே கூவுகின்றனர். இந்தியாவும் அதனைத் தான் சொல் கின்றது. அதாவது இனப்பிரச்னை அல்லது இன இன முரண்பாடுகள் உள்ளதாக கூறினால் தானே அரசியல் தீர்வை முன்வைக்கவேண்டும். எனவே அவ்வாறு ஒன்று இல்லை என்று கூறிவிட்டால் அரசியல் தீர்வுக்கான பேச்சுக்கே இடமிருக்கப்போவதில்லை. அது தான் சிங்களத்தின் திட்டம். ஆனால் நாம் அப்படியல்ல, இலங்கைக்குள் இனமுரன்பாடுகள் உண்டு, இனப்பிரச்சனை உண்டு, நாம் தனியான தேசமாக இருந்தோம் என அடித்துக் கூறவேண்டியவர்கள். ஆனால் இந்த அடிப்படை அரசியல் அறிவுகூட இல்லாத சில தமிழர்கள் பொதுவேட்பாளர் மேடையில் இனவாதம் பேசப்பட்டதாக கொக்கரிப்பதைக் கண்டு நான் நினைக்கின்றேன் தியாக தீபம் திலீபனின் ஆத்மா கூட ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கலாம்.
பொதுவேட்பாளர் என்று களமிறக்கப்பட் டது என்பது தற்போதைய உலக ஒழுங்கையும், உலகில் ஏற்படுகின்ற பூகோள அரசியல், பொரு ளாதார மற்றும் படைத்துறை மாற்றங்களையும் சரியாக கணிப்பிட்டு எடுக்கப்பட்ட தமிழர்களின் ஆயுதம்.
அது எத்தனை தடைகள் வந்தாலும் தொட ரும், இது ஒரு ஆரம்பம் மட்டுமே, தமிழ் மக்களின் ஒருங்கிணைவு என்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்பதை காலம் விரைவில் உணர்த்தும். ஏனெனில் தற்போதைய புறக்காரணிகள் அப் படியுள்ளன. நமது ஒருங்கிணைவு என்பது தற்போதைய உலக ஒழுங்கில் ஏதோவொரு பிராந்திய அல்லது உலக வல்லரசுக்கு அத்தியா வசியமானதாக மாற்றம்பெறும் நிலை தான் தற்போது தோன்றியுள்ளது.
இலங்கையின் தற்போதைய தேர்தல் என்பது இலங்கைக்கான தேர்தல் அல்ல, அது அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் பலப்பரீட்சை, தேர்தலில் வெற்றிபெறும் அரச தலைவர் கூட எத்தனை காலம் நீடிப்பார் என்பதை அவர்கள் தான் தீர்மானிப்பார்கள். தேர்தலுக்கு முன்னரே இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சாங் இலங்கை அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்காவை பல தடவைகள் சந்தித்திருந் தார்.
அதுமட்டுமல்லாது அமெரிக்க இரஜதந்திரி களும் அடிக்கடி இலங்கைக்கு பயணம் செய்திருந்தனர். அதேபோல இந்தியாவின் இராஜ தந்திரிகள் பலர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டதுடன், இறுதியாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் அவசரமாக வந்து சென்றிருந்தார். அவர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக தகவல். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் சஜித்தை கடந்த ஜுன் மாதம் அவரின் இல்லத்தில் சந்தித்திருந்தார்.
அதேசமயம், சீனாவின் அதிகாரிகளும் பய ணங்களை மேற்கொள்ளத் தவறவில்லை. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்கள் திணைக்களத்தின் பிரதியமைச்சர் சன் ஹெயான் ஏப்பிரல் மாதம் இலங்கை வந்ததுடன் ஜே.வி.பியின் அலுவலகத்திற்கும் சென்றிருந்தார். ஆனால் இந்த மூன்று வல்லரசுகளுக்கும் வேண்டிய மூவர் இலங்கையின் அரச தலைவராக வரமுடியாது.
எனவே ஒரு இலங்கையினுள் அவர்கள் தமக்கான நலன்களைத்தேட முடியாது என்பதே இன்றைய பூகோள அரசியல் யதார்த்தம். அதனைத்தான் தமிழ் பொதுவேட்பாளரும் உணர்த்தி நிற்கின்றார். அதாவது ஒரு தேர்தல் இரு தேசங்கள். அந்த யதார்த்தத்தை நாம் சரியாக கையாளவேண்டும் என்றால் எமக்கான ஒருங்கி ணைவு தேவை. கிட்டுபூங்காவில் இடம்பெற்ற தமிழ்பொதுவேட்பாளரின் கூட்டத்தை ஆர்வத்து டன் பார்த்து நின்ற ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களின் ஆவலும் அதனை தான் மறைமுகமாக கூறி நிற்கின்றது.
எனவே தமிழால் ஒன்றிணைவோம், தமிழராக பலமாவோம். எமக்கான தேசத்தை கட்டியமைக்கும் முதல் வேலைத்திட்டத்தில் ஒன்றாக இணைந்து எமது ஒருங்கிணைவின் அடை யாளமாக சங்கிற்கு வாக்களிப்போம்.