‘ஒரு இனம் திட்டமிட்டு அழிக்கப் படுவதை ஒரு போதும் மனித வரலாறு மன்னிக்காது- பேராசிரியர் குழந்தை

யாழ்.நுாலக எரிப்பு நாள் குறித்து இலக்கு செய்தி நிறுவனத்திற்கு கருத்து தெரிவித்த பேராசிரியரும் அருட்தந்தையுமான  குழந்தை, “ஒரு இனம் திட்டமிட்டு அழிக்கப்படுவதை நம் கண் முன்னே காண்பதை  ஒரு போதும் மனித வரலாறு மன்னிக்காது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் “நுாலகம் என்பது பண்பாட்டு பாதுகாப்பு பெட்டகம், பண்பாடு என்பது மக்களுடைய அடையாளத்தையும் உரிமையையும் வாழ்க்கை நெறிமுறைகளையும் தாங்கள் வைத்துக்கொண்டிருந்த தொழில் முறையும் அரசியல் முறையும் பொருளாதார முறையும் என பல்வேறு வாழ்க்கை நிகழ்வுகளைப் பாதுகாத்து வைக்கக் கூடியது.

எனவே இந்த பண்பாட்டை நுாலகத்தில் தான் வைத்திருக்கிறார்கள். ஆக அவ்வாறான ஓர் நுாலகம் மக்களுடைய அடையாளமாக இருப்பதைப் பார்க்கின்றோம்.

ஏனென்றால் அடுத்த தலைமுறையினருக்கு தாங்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையையும் பண்பாட்டு முறையையும் கடத்துவதற்கு சொல்லிக்கொடுப்பதற்கு இந்த நுாலகம் பயன்படுகின்றது.

எனவே நுாலகம் மக்களுடைய ஆண்மாவாகவும், அவர்களுடைய உயிராகவும் இருப்பதைப் பார்க்கின்றோம். அதனால்தான் இந்த ஆண்மாவை அழித்தால் மக்களை அழிக்க முடியும் என ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கத்தினரும் தெளிவாக புரிந்து வைத்துள்ளனர்.

நீரோ மன்னன் ரோமில் கிருஸ்தவர்களை துன்புறுத்தி எரித்த பொழுது, அதில் அவன் அதிகமாக எரித்தது மக்களை விட, அவர்கள் பயன்படுத்திய ஓலைச்சுவடிகளையும் கிருஸ்தவ மதத்தை பரப்புவதற்காக வைத்திருந்த அனைத்து ஆவணங்களையும்தான். இதன் மூலம் கிருஸ்தவ மதத்தை அழிப்பதற்கு அவன் முனைந்தான்.

அது போல தமிழ்நாட்டில் கி.பி 8ம் நுாற்றாண்டில், சமணர்கள் எழுதி வைத்திருந்த ஓலைச்சுவடிகளையும் அவர்கள் வைத்திருந்த ஆவணங்களையும் சைவ சமையத்தை சார்ந்தவர்கள் அதை எரித்தார்கள்.

எனவே ஒரு இனத்தை அழிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய ஓர் ஆயுதமாக இந்த நுாலக எரிப்பை முன்னெடுத்திருக்கிறார்கள்.

அதே போலத்தான் 1981ம் ஆண்டு ஆசியாவில் மிகச் சிறந்த நுாலகமான யாழ்ப்பாண நுாலகம், சிங்கள அதிகார வர்க்கத்தினரால் எரிக்கப்பட்டது.

தமிழினத்தை அழிப்பதற்கு இது மிகச் சிறந்த உதாரணமாக இருப்பதை பார்க்கலாம்.

ஏனென்றால் தமிழ் இனத்தை அழிப்பதற்கு இந்த நுாலகத்தை அழித்தால் போதும், அவர்களுடைய பண்பாடுகளும் அடையாளங்களும் அழிந்து போகும் என்பதில் சிங்கள அரசு தெளிவாக இருந்தது.

தற்போது உலக நாடுகளை ஏமாற்றுவதற்காக எரிக்கப்பட்ட நுாகத்தை மீண்டும் புதுப்பித்து, பல தரமற்ற நுால்களை சேகரித்து இலங்கை அரசாங்கம் வைத்திருப்பதை காணலாம்.

இந்த நுாலக அழிப்பும் இன அழிப்பும் எப்பொழுதுமே ஒன்றாகத்தான் இருந்திருக்கின்றது. மேலும் நுாலகம் என்பது நான்கு சுவர்களுக்குள் இருக்கக்கூடிய நுால்கள் மட்டுமல்ல, மாறாக தொல்லியல் துறையில் இருக்கக் கூடிய அனைத்து ஆதாரங்களும் ஓர் நுாலகம். எனவே தமிழர்களுடைய பண்பாட்டை வெளிப்படுத்தக்கூடிய தொல்லியற் துறை அடையாளங்கள் தொல்லியற்துறை ஆதாரங்கள் எல்லாமே ஒரு நுாலகமாக இருப்பதைப் பார்க்கின்றோம்.

எதையெல்லாம் கற்றுக்கொடுகின்றதோ, தையெல்லாம் அடுத்த தலைமுறையினருக்கு கடத்தி செல்கிறதோ அவைகள் எல்லாமே நுாலகமாகத்தான் இருக்கிறது.

இந்நிலையில், இவ்வாறான ஒரு அழிப்பை பேரினவாத அரசு மிகத் தெளிவாக திட்டமிட்டு அரங்கேற்றிக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம். ஆக இது ஒரு இன அழிப்பு என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழின அழிப்பு அரசினுடைய அனுமதியுடனும் உலக நாடுகளின் அமைதியுடனும் திட்டமிட்டு செயல்படுத்தப் பட்டுக் கொண்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது.

ஒரு இனம் திட்டமிட்டு அழிக்கப்படுவதை நம் கண் முன்னே காண்பதை   ஒரு போதும் மனித வரலாறு மன்னிக்காது” என்றார்.