Tamil News
Home செய்திகள் ஒருமித்த நிலைப்பாட்டுடன் செயற்பட தமிழ்த் தேசிய கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு

ஒருமித்த நிலைப்பாட்டுடன் செயற்பட தமிழ்த் தேசிய கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு

“சர்வதேச சூழலிலேயே எமக்கு சார்பான பல விடயங்களுக்காக வல்லரசு நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் இவ்வேளையில் நாம் ஒருமித்த நிலைப்பாட்டில் அரசியல் விடயங்களை தாயகப் பரப்பில் கையாள்வதன் மூலம் சாதகமான உள்ளக அரசியல் சூழ்நிலை ஒன்றை ஏற்படுத்த முடியும்” எனச் சுட்டிக் காட்டியுள்ள ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநான், இது குறித்து நாளை ஞாயிற்றுக்கிழமை நடத்தவுள்ள மெய்நிகர் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை அழைத்துள்ளார்.

தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோருக்கே இந்த அழைப்பை அவர் அனுப்பியுள்ளார்.

இந்த அழைப்பில் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருப்பதாவது:

“கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலின் பின்னராக ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் அடிப்படையில் சிக்கல் மிகுந்த பிரச்சினைகளுக்கு தமிழ் மக்கள் முகம் கொடுத்து நிற்கிறோம்.

பல்வேறு காரணங்களின் அடிப்படையில் அரசாங்கம் எமது தாயக பரப்பில் காணி நிலங்களை அபகரித்து வருகிறது. தொல்லியல், அபிவிருத்தி, மாவலி திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என பல காரணங்களை கூறினாலும் அடிப்படையிலேயே திட்டமிட்ட குடியேற்றங்களை குறிவைத்த நடவடிக்கைகளாக இவை அமைந்திருக்கின்றன. அதேபோன்று மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அதிகாரங்களை மெதுவாக அரசாங்கம் கையகப்படுத்தி வருகின்ற சூழலையும் காண்கிறோம். இவற்றை தடுத்து நிறுத்தவும் இருக்கக் கூடிய அதிகாரங்களை பாதுகாக்க வேண்டிய கடப்பாடும் எங்களுக்கு இருக்கின்றது.

சர்வதேச சூழலிலேயே எமக்கு சார்பான பல விடயங்களுக்காக வல்லரசு நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் இவ்வேளையில் நாம் ஒருமித்த நிலைப்பாட்டில் அரசியல் விடயங்களை தாயகப் பரப்பில் கையாள்வதன் மூலம் சாதகமான உள்ளக அரசியல் சூழ்நிலை ஒன்றை ஏற்படுத்த முடியும்.

ஆகவே காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு எந்தெந்த விடயங்களில் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ்த் தேசிய கட்சிகள் ஆகிய நாங்கள் ஒருமித்த நிலைப்பாட்டில் வினையாற்ற முடியும் என்ற ஆரம்பகட்ட மெய்நிகர் இணையவழி ஊடான கலந்துரையாடலுக்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

தேர்தல் நோக்கங்கள், கட்சி நலன்கள் மற்றும் தனிப்பட்ட விரோதங்களை தாண்டி செயல்படும் நோக்கத்திலேயே இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது. நாளை ஞாயிற்றுக் கிழமை மாலை 5.00 மணிக்கு இச்சந்திப்பில் கலந்து கொள்ள உங்கள் சம்மதத்தை எதிர்பார்த்து இருக்கும்” என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version