Tamil News
Home உலகச் செய்திகள் ஒபாமாவை அடுத்து ஸ்டாலின்தான் – தேர்தல் மேடையில் வைகோ புகழாரம்

ஒபாமாவை அடுத்து ஸ்டாலின்தான் – தேர்தல் மேடையில் வைகோ புகழாரம்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்குப் பிறகு ஸ்டாலின்தான் தனது தொகுதிக்கு அடிக்கடி சென்று மக்களைச் சந்திக்கிறார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புகழாராம் சூட்டியுள்ளார்.

சென்னை கொளத்துார் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் அக் கட்சியின் தலைவர் ஸ்டாலின் போட்டியிடுகின்றார்.

அவரை ஆதரித்து பிரச்சாரப் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் பேசிய வைகோ, ”நான் உலக அரசியலை உற்று கவனிப்பவன். பாரக் ஒபாமா, அமெரிக்க அதிபர் ஆகும் முன்பு செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குப் பிறகு அவர் மாதம் இரண்டு முறை தனது தொகுதிக்குச் செல்வார். தன்னுடைய தொகுதிக்குச் சென்று அனைத்து மக்களையும் சந்திப்பார். அவர்களின் குறைகளைக் கேட்பார். அந்தக் குறைகளைப் போக்குவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பார்.

நான் அதன் பிறகு பார்க்கிறேன். வாரம் ஒரு முறையாவது தன்னுடைய தொகுதிக்கு வருகிற ஒரு அரசியல்வாதி இருக்கிறாரா என்று கேட்டால், அது ஸ்டாலின்தான். அவர் வீட்டில் இருக்கிறாரா? அல்லது தொகுதியில் இருக்கிறாரா? என்று தெரியவில்லை. அதுதான் மக்கள் பிரதிநிதியின் கடமை.

சென்னை மேயராக ஸ்டாலின் இருந்தபோது, 9 பாலங்கள் கட்டப்பட்டன. இந்தியாவில் இதுபோன்று வேறெங்கும் நடக்கவில்லை. அவரைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version