தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரம்: ஒன்ராறியோ மாகாணத்தில் சட்டமாக ஏற்பு

கனடா – ஒன்ராறியோ மாகாணத்தில் தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரம் ஆளுநரின் ஒப்புதலுடன் உத்தியோகபூர்வ சட்டமாக ஏற்று அங்கீகரிக்கப்பட்டது.

இதன்மூலம் மே-18 ஆம் திகதியுடன் முடிவடையும் 7 நாட்கள் ஒன்ராறியோவில் ஆண்டுதோரும் தமிழர் இனப்படுகொலை அறிவூட்டல் வாரமாக கடைப்பிடிப்பதற்கான சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அத்துடன், தமிழினப் படுகொலை குற்றச்சாட்டை வெளிநாடொன்றின் மாகாணம் சட்டரீதியாக ஏற்று அங்கீகரித்த முதல் சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரம் முன்மொழிவு (Bill 104) மூன்றாவது வாசிப்பு மே 06ஆம் திகதி ஒன்ராறியோ மாகாணச் சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

vijay4 தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரம்: ஒன்ராறியோ மாகாணத்தில் சட்டமாக ஏற்பு

தொடர்ந்து மாகாண ஆளுநர் ஒப்புதலுக்காக இது அனுப்பப்பட்டது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை வாரம் ஆரம்பமான முதல்நாளான நேற்று இந்த சட்டமூலத்துக்கு ஒப்புதல் அளித்து மாகாண ஆளுநர் கையெழுத்திட்டார்.

இதனையடுத்து தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச் சட்டம் ஒன்ராறியோவில் உத்தியாகபூா்வமாக நடைமுறைக்கு வந்தது. ஒன்ராறியோ சட்டமன்ற தமிழ் உறுப்பினர் விஜய் தணிகாலம் தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் என்ற தனிநபர் பிரேரணையை 2019ஆம் ஆண்டு சமர்பித்தார்.

இந்த தனிநபர் பிரேரணை மீதான மூன்றாம் வாசிப்பு கடந்த 6-ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. இதன் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட ஆளும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர்கள் தமிழர்கள் மீதான இனப்படுகொலை குறித்தும், தமிழர்கள் தொடர்ந்து எதிர் கொள்ளும் உரிமை மறுப்புகள் குறித்தும் பேசினர்.

தொடர்ந்து ஒளுநரின் ஒப்புதல் பெற Bill 104 என்ற இந்தத் சட்டத் திருத்தம் அனுப்பப்பட்டது. இந்நிலையிலேயே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வார ஆரம்ப நாளில் இதனை அங்கீகரித்து ஆளுநர் கையெடுத்திட்டார்.

ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘தமிழ் இனப்படுகொலைக் அறிவூட்டல் வாரம்’ (சட்டமூலம் 104) ஆளுநரின் அங்கீகாரத்தை பெற்று சட்டமாவதைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் மிகத் தீவிரமாகச் செயற்பட்டு வந்தபோதும் அந்த முயற்சி கைகூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தத் தீா்மானத்தை முன்வைத்து நிறைவேற்றியமைக்காக நான் பெருமையடைகிறேன் என விஜய் தணிகாசலம் கூறியுள்ளார்.

இந்தத் தீா்மானத்தின் மூலம் மே 12 – மே 18 வரையான காலப்பகுதி ஒன்ராறியோவில் இலங்கை தமிழர் இனப்படுகொலை அறிவூட்டல் வாரமாக பிரகடணப்படுத்தப்படுகிறது. தமிழ் இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான பிற குற்றங்கள் குறித்து பொதுமக்களை தெளிவுபடுத்த இதன்மூலம் சட்டரீதியான அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் குறித்த தீா்மானத்தை நிறைவேற்ற ஒன்ராறியோ தமிழ் சமூகத்துடன் ஒன்றிணைந்து நின்றமைக்காக மாகாண முதல்வர் டக் போர்ட், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து ஒன்ராறியர்களுக்கும் நன்றி கூறுகிறேன் எனவும் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.