ஐ.நா.மீது குற்றத்தை சுமத்தி, தனது பொறுப்பிலிருந்து ஒளிந்து கொள்ளப்பார்க்கிறார் ஒபாமா.

‘உறுதியளிக்கப்பட்ட நிலம்’ (A Promised Land) என்கிற தனது நினைவுகளின் தொகுப்பு நூலில், இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து எழுதும் போது, Ethinic Slaughter என்று குறிப்பிடுகிறார்.

இருப்பினும் ‘இனப்படுகொலை’ என்பதற்கு, Genocide என்று சர்வதேச அளவில் பயன்பாட்டிலுள்ள வார்த்தைப் பிரயோகத்தை ஒபாமா தவிர்த்துள்ளார்.

ஐ.நா சபையின் வீட்டோ அதிகாரம் கொண்ட பாதுகாப்புச்சபையின் உறுப்புநாடு அமெரிக்கா. அந்த சபை இயங்குவதற்கான அதிகளவு நிதி வழங்கும் முதன்மையான நாடு அமெரிக்கா. பின்னாளில் அதற்காக நிதிப்பங்களிப்பை டிரம்ப் குறைத்துக் கொண்டார் என்பது வேறு விடயம்.

இவரின் ஆட்சிக்காலத்திலேயே இது நடந்தது.

ஐ.நா சபை என்பது அமெரிக்காவைவிட பலம் பொருந்திய அமைப்பு என்று சொல்ல வருகிறாரா? அல்லது ஐ.நா.சபை என்பது எண்ணிக்கையில்  சிறுபான்மையாகவுள்ள தேசிய இனங்களை ஒடுக்கும் நாடுகளின் அதியுயர் சபை என்று நிறுவ வருகிறாரா?.

எதையும் மேலோட்டமாக சொல்லிவிட்டு, வரலாற்றின் இருண்ட பக்கங்களிலிருந்து தாம் அந்நியமாகி நிற்பது போல் ஒளிந்துகொள்ள முடியாது. 97 இல் விடுதலைப்புலிகள் மீது அமெரிக்க கொண்டு வந்த தடை, ஒபாமா காலத்திலும் நீக்கப்படவில்லை.

புலிகள் இருந்த சமாதான பேச்சுவார்த்தை மேடைகளில் பங்கு கொள்ளவும் அமெரிக்கா மறுத்தது. இந்த ‘பூகோள அரசியலுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை’ என்பது போலிருக்கிறது ஒபாமாவின் கதை.

அவர் கட்சி ஆட்சிதானே இனி அமெரிக்காவில் வரப்போகிறது.
பார்ப்போம்.

-இதயச்சந்திரன்-