ஐ.நா. மாந்த உரிமைப் பேரவையின் தீர்மானத்திற்கு சிறிலங்கா அரசு ஒத்துழைப்புத் தர வேண்டும்: ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு கோரிக்கை

ஐ.நா. மாந்த உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்படவுள்ள பொறுப்புக்கூறல் தீர்மானத்திற்கு  ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான சிறிலங்கா அரசு ஒத்துழைப்புத் தர வேண்டும் என ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர் தா.செ.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 2024 செப்டம்பர் மாதம் ஐ.நா. மாந்த உரிமைப் பேரவையில் சிறிலங்காவில் மீளிணக்கம், பொறுப்புக்கூறல், மாந்த உரிமைகள் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தின்படி, சிறிலங்காவில் இதன் தொடர்பில் நடந்தது என்ன? என்பதை ஆய்ந்தறிந்து மாந்த உரிமைகளுக்கான ஐ.நா. உயராணையர் வோல்கர் டர்க் சிறிலங்காவில் மாந்த உரிமைகளின் நிலை தொடர்பான தமது அறிக்கையை ஆகஸ்டு 22 அன்று வெளியிட்டார். செப். 9 இல் இருந்து பேரவையின் 57 ஆவது கூட்டத் தொடர் நடந்துவருகிறது, கூட்டத் தொடர் அக். 9 வரை நடக்கவுள்ளது.

இது அதிபர் தேர்தலுக்கு முன்பு வெளிவந்த அறிக்கை. புதிதாக தெரிவு செய்யப்படும் அரசாங்கத்தை நோக்கி இவ்வறிக்கையில் கருத்துகள் சொல்லப்பட்டிருந்தன. முன்னதாக ஐ.நா., இனப் பூசலின் போது மாந்த உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், மாந்தக் குலத்திற்கு எதிரானக் குற்றங்கள் நடந்துள்ளதற்கான அடிப்படைகள் உள்ளன என்று நிறுவியிருந்தது. இந்நாள்வரை, சிறிலங்கா அரசாங்கம் தீவிரமான மீறல்கள் நடந்திருப்பதை அறிந்தேற்கவும் இல்லை; பாதிக்கப்பட்டோருக்கு போதுமான இழப்பீடும் செய்யவில்லை. பன்னாட்டு அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் அடுத்தடுத்த அரசாங்கங்கள் உசாவலின் பொருட்டு அமைத்த பல்வேறு ஆணையங்கள் உண்மையை நிலைநாட்டி, பொறுப்புக்கூறலிலும் மீளிணக்கத்திலும் முன்னேற்றம் காண முற்றிலும் தவறிவிட்டன.

பூசல் தொடர்பான குற்றங்களைப் புலனாய்வு செய்து, விசாரணைக்கு உட்படுத்துவதற்காக சிறப்பு நீதிபதி அடங்கிய நீதிப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதாக 2015 ஆம் ஆண்டு அரசாங்கம் வழங்கிய உறுதிமொழி இப்போதுவரை செயல்படுத்தப் படவில்லை. ( பத்தி 36 ) 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, பேரவையால் பரிந்துரை செய்யப்பட்டு, தொடக்கத்தில் சிறிலங்கா அரசால் ஒப்புக் கொள்ளப்பட்ட, ஒரு சிறப்பு நீதிபதியை உள்ளடக்கிய நீதிப் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதை மறுபடியும் கருதிப்பார்க்க வேண்டும் ( பத்தி 50 ) பாதிக்கப்பட்டோரது துயரங்களை அறிந்தேற்பது, பெரும் மாந்த உரிமை மீறல்களில் படையினர் மற்றும் பாதுகாப்புக் குழுவினரின் பங்கை ஒப்புக் கொள்வது, கடந்த காலத்திலும் சம காலத்திலும் நடைபெற்றுவரும் மீறல்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஆகியவற்றில் சிறிலங்கா அரசு அடைந்துள்ள தோல்வி என்பது சட்டத்தின் ஆட்சிக்கும் சனநாயகத்திற்கும், நல்லாட்சிக்கும் முகாமையான தடைக்கற்களாகும்.

அரசின் பல்வேறு கட்டமைப்புகள், அரசு இயந்திரத்தில் உள்ள சில உறுப்பினர்கள் கொடுங் குற்றங்களிலும் மாந்த உரிமை மீறல்களிலும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் என்ற போதும் பொறுப்புகளில் நீடிப்பதால் பொருள்பொதிந்த பொறுப்புக்கூறலுக்கு தடையாக உள்ளனர்; மாந்த உரிமை மீறல்கள் நீடிக்கச் செய்கின்றனர். 51 ஆவது மாந்த உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் குறிப்பிடப்பட்டது போல், குற்றங்களுக்கு தண்டனையின்மை ஊழலுக்கும் அதிகார அத்துமீறலுக்கும் இட்டுச் சென்றதுதான் பொருளியல் நெருக்கடிக்கும் 2022 ஆம் ஆண்டின் மக்கள்திரள் போரட்டத்திற்கும் வழிவகுத்துள்ளது ( பத்தி 63 ) தேர்தலைத் தொடர்ந்து புதிதாக தெரிவு செய்யப்படும் அரசாங்கம் போர்க்கால அடிப்படையில் சிறிலங்காவில் அனைவரையும் உள்ளடக்கிய தேசிய தொலைநோக்கு ஒன்றை முன்னெடுக்க வேண்டும். அது பூசலுக்கான மூல காரணங்களைத் தீர்வுசெய்து, சனநாயகத்தைப் பலப்படுத்துவதற்கும் அரசியல் அதிகார பரவலாக்கத்திற்கும் பொறுப்புக்கூறலிலும் மீளிணக்கத்திலும் முன்னேற்றம் காண்பதற்கும் தேவையான அரசியலமைப்பு மற்றும் நிறுவன வகையிலான சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும். ( பத்தி 64) தமிழர்களைப் பொறுத்தவரை, தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள், மாந்த குலத்திற்கு எதிரானக் குற்றங்கள், இனவழிப்புக் குற்றங்கள் செய்த சிறிலங்கா அரசு மீது நம்பத்தகுந்த பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என்பதே கோரிக்கை. ஆனால், சிறிலங்கா அரசுக்கு மீண்டும் மீண்டும் கால அவகாசம் கொடுத்து உள்நாட்டுப் பொறிமுறையைப் பரிந்துரைக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

கடந்த 15 ஆண்டு காலமாக உள்நாட்டுப் புலனாய்வு எதையும் நடத்தாமல் உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவி வருகிறது சிறிலங்கா. இந்நிலையில் இப்போதும் ஐ.நா. மாந்த உரிமைப் பேரவை சிறிலங்காவுக்கு கால அவகாசம் கொடுத்து மீண்டுமொரு முறை உள்நாட்டுப் புலனாய்வை வலியுறுத்தப் போவதாக செய்திகள் வருகின்றன. வாக்கெடுப்பு எதுவும் இன்றி 51/1 தீர்மானத்தை ஒராண்டோ அல்லது ஈராண்டோ நீடிக்கப் போவதாகவும் செய்திகள் வருகின்றன. சிறிலங்காவைப் பொறுத்தவரை 30/1, 34/1, 40/1 தீர்மானங்கள் சிறிசேனா – ரணில் தலைமையிலான சிறிலங்கா அரசு தாமே முன்மொழிந்து அவை ஐ.நா. மாந்த உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டன.

கோத்தபய ஆட்சிக்கு வந்தவுடன் இதில் இருந்து வெளியேறியதோடு அதற்குப் பின்னர் இயற்றப்பட்ட 46/1, 51/1 தீர்மானத்தை சிறிலங்கா அரசு பேரவையில் எதிர்த்தது. இந்நிலையில் வழமையான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டு ஜேவிபியைச் சேர்ந்த அநுரகுமார திசநாயக்கா அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தேர்தலுக்கு முன்பு ஆணையர் அலுவகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தேர்தலுக்குப் பின்பு வரக்கூடிய புதிய அரசாங்கம் பொறுப்புக்கூறலில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. அதுபோலவே, அக்டோபர் 2 அன்று மனித உரிமை கண்காணிப்பகத்தால் (HRW) வெளியிட்டுள்ள அறிக்கையும் புதிய அரசாங்கம் மாந்த உரிமைப் பேரவைக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த கால அரசாங்கங்கள் போல் அன்றி, மாந்த உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வருவேன் என உறுதியளித்துள்ள அநுரகுமார தலைமையிலான புதிய அரசாங்கம், ஐநா மாந்த உரிமைப் பேரவையில் இயற்றப்படவுள்ள 57/1 தீர்மானத்திற்கு ஒப்புதல் தெரிவித்து அதை செயல்படுத்த முன்வர வேண்டும் என்று ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சாரபாக கேட்டுக்கொள்கிறேன் என்றுள்ளது.