ஐக்கிய நாடுகள் சபையில் இணைத்தலைமை நாடுகள் கொண்டுவந்த தீர்மானம் அப்படியே தான் உள்ளது. அதில் இருந்து சிறீலங்கா விலகினாலும் தீர்மானத்தில் மாற்றம் வராது.
எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறும் கூட்டத்தொடரில் அது விவாதிக்கப்படும். இனநல்லிணக்கப்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக உள்ளது என சிறீலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டெனிஸ் சையபி கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
”எமது தரப்பில் ஜேர்மனியே இந்த தீர்மானத்தின் பங்குதாரராக உள்ளது. நாம் அதில் பிரதான பங்கெடுக்கவில்லை. சிறீலங்கா அரசின் முடிவுக்காக நாம் காத்திருக்கின்றோம்.
சிறீலங்கா அரசின் தனிநபர் வருமானம் தற்போதைய நிலையில் வீழ்ச்சி காணும் என்பதால் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி வரிச்சலுகையை அது மேலும் 3 வருடங்களுக்கு பெறும் நிலையை எட்டலாம்.
சிறீலங்காவின் தென்கடல் பகுதியால் வரும்தோறும் 60,000 கப்பல்கள் செல்கின்றன. உலகின் எண்ணை தேவையின் மூன்றில் இரண்டு பங்கின் வழங்கல் பாதை அதுவே, உலகின் வர்த்தக விநியோகத்தின் 50 விகிதம் தென்னிலங்கை கடற்பகுதியை சார்ந்துள்ளது.
இதனால் தான் சிறீலங்கா இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. சிறீலங்கா சார்க் கூட்டமைப்பு மற்றும் இந்துசமுத்திர பிராந்தி வளைய அமைப்பு போன்றவற்றில் உறுப்பு நாடாக உள்ளது. இது அங்கு அமைதியை தோற்றுவிக்கும் என நம்புகிறோமே தவிர தப்பிப் பிழைப்பதற்கான வழியை அல்ல.
எனினும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நாம் கவனம் செலுத்தவில்லை ஏனெனில் இந்திய கடற்படை அல்லது சீனாவின் கடற்படையுடன் மோதுவதற்கு எம்மிடம் கடற்பைடையில்லை” என்று தெரிவித்துள்ளார்.