Tamil News
Home செய்திகள் ஐ.நா. தலையீட்டுடன் சுயாதீன பொறுப்புக்கூறல் பொறிமுறை – ஐ.நா. நிபுணர் குழுக்கள் பரிந்துரை

ஐ.நா. தலையீட்டுடன் சுயாதீன பொறுப்புக்கூறல் பொறிமுறை – ஐ.நா. நிபுணர் குழுக்கள் பரிந்துரை

இலங்கை தொடர்பில் ஐ.நாவின் தலையீட்டுடன், ஒரு பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை நிறுவவேண்டும் என ஐ.நா. நிபுணர் குழுக்கள் கூட்டாகப் பரிந்துரைத்துள்ளன.

அத்துடன், சர்வதேச பொறுப்புக் கூறல் பொறிமுறை உட்பட இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான அனைத்து வழிமுறைகளையும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் அதன் உறுப்பு நாடுகள் ஆராய வேண்டும் எனவும் ஐக்கியநாடுகள் நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

2015 முதல் 2019 வரை இலங்கைக்கு மேற்கொண்ட 10 உத்தியோகபூர்வ விஜயங்களின்போது அவதானித்த விடயங்களைக் கொண்டு ஐ.நா. சுயாதீன நிபுணர் குழுவினர் கூட்டாக இந்தப் பரிந்துரைகளை நேற்று முன்வைத்துள்ளனர்.

இலங்கையில் கடுமையாக போராட்டங்களின் மத்தியில் சமீபத்திய ஆண்டுகளில் ஜனநாயக கட்டமைப்புக்களை கட்டியெழும்புவதில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் பழைய நிலைக்கே திரும்பும் இலங்கையின் போக்கு நிறுத்தப்படவேண்டும் என ஐ.நா. மனித உரிமை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த கால குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும். அத்துடன் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றும் இலங்கைய ஐ.நா. மனித உரிமை வல்லுநர்கள் குழு வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கடந்த கால குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான கண்காணிப்பை அதிகரிப்பதற்கும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் மனித உரிமைகள் பேரவையின் முயற்சிகளைத் தொடருமாறு அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை மேம்படுத்தும் விடயங்களில் இலங்கை தோல்வி கண்டுள்ளது. அதேவேளை, குடிப்பரம்பலை மாற்றியமைத்தல், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முக்கியமான அமைப்புக்களை பாதுகாக்க தவறுதல், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளரால் இலங்கை தொடர்பில் எழுப்பப்பட்ட பிரச்னைகள் கவனத்தில் கொள்ளாமை உள்ளிட்ட இலங்கையில் வளர்ந்து வரும் எதிர்மறையான போக்குகள் குறித்து நாங்கள் திகைப்படைந்துள்ளோம் என அறிக்கையில் ஐ.நா. மனித உரிமை வல்லுநர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் அரசாங்கத்தின் பெரும்பான்மைச் சொல்லாட்சி அமைந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஏப்ரல் 2019 இல் நடந்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் ஆகியவை நாட்டிற்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆயினும் இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் சிவில் செயற்பாடுகளை இராணுவமயமாக்கும்போக்கு அதிகரித்துள்ளது. அத்துடன், சிவில் சமூகப் பணிகளில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னார் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளமை ஆபத்தானது என நிபுணர்கள் தெரிவித்தனர்.

இலங்கை அரசமைப்பில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட20ஆவது திருத்தம் உள்ளிட்ட அரசின் செயற்பாடுகள் இலங்கையின் சுயாதீன அமைப்புக்கள் மற்றும் நீதித்துறையின் சுயாதீனத் தன்மைக்கு அச்சுறுத்தலாகியுள்ளன. ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு அவசியமான அமைப்புக்களின் சுயாதீன தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.

நிலைபேறான அபிவிருத்திக்கான இலக்குகளை இலங்கை அரசாங்கம் தனது நிகழ்ச்சி நிரலில் முன்வைத்துள்ளது. இருப்பினும் வெளிப்படையான, பயனுள்ள மற்றும் பொறுப்புணர்வு கொண்ட நிறுவனங்கள் இல்லாமல் வறுமையை முடிவுக்குக் கொண்டுவருதல், கல்வி அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் போன்ற குறிக்கோள்களை முழுமையாக அடைய முடியாதுஎனவும் வல்லுனர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Exit mobile version