Tamil News
Home செய்திகள் ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றம் -இந்தியா நடுநிலை வகித்தமை ஈழத்தமிழர்களை வேதனைக் குட்படுத்தியுள்ளது

ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றம் -இந்தியா நடுநிலை வகித்தமை ஈழத்தமிழர்களை வேதனைக் குட்படுத்தியுள்ளது

ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டும் என்ற நிலையில், பல நாடுகளை திரைமறைவிலிருந்து இயக்கிய இந்தியா நடுநிலை வகித்தமை ஈழத்தமிழர்களை வேதனைக்குட்படுத்திய விடயம் என மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது இந்த நாட்டுக்கோ,பௌத்த மதத்திற்கோ,நாட்டின் ஒன்றுமைக்கோ எதிரானது அல்ல. இந்த நாட்டினையும் நாட்டு மக்களையும் நேசிக்கும் கட்சியாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அவலுகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ ஒரு தடைவ மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதந்து நிலமைகுறித்து பார்வையிடவேண்டும்.  இலங்கைக்கு எதிராக ஐநாவில் கொண்டுவரப்பட்ட பிரேரணை அமோக வரவேற்புடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

22நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாகவும் 11நாடுகள் எதிராகவும் 14 நாடுகள் நடுநிலையாகவும் வாக்களித்துள்ளது.இந்த நிலையில் இலங்கையின் வெளியிறவுதுறை அமைச்சர் மீசையில் மண் ஒட்டவில்லையென்ற வகையில் கருத்துகளை தெரிவித்துவருகின்றார்.

22நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில் ஏனைய நாடுகள் எதிராகவுள்ளதாக காட்டமுற்படுகின்றார். இலங்கை அரசாங்கமும் அவர்களின் அமைச்சர்களும் யாதார்த்ததினை புரிந்துகொள்ளாத நிலையிலேயே செயற்பட்டுவருகின்றனர்.

இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டும் என்ற நிலையில் பல நாடுகளை திரைமறைவிலிருந்து இயக்கிய இந்தியா,இந்த பிரேரணை வெற்றிபெறவேண்டும் இலங்கையில் சிறுபான்மையினத்தவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்,அவர்களுக்கு பூரண அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்றுகூறிய இந்தியா இந்த பிரேரணையில் நடுநிலைவகித்தது ஈழத்தமிழர்களை வேதனைக்குள்ளாக்கிய விடயமாகவே தமிழர்கள் பார்க்கின்றனர்.

ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகிய காலம் தொடக்கம் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் இந்த பிரேரணையை கொண்டுவந்த நாடுகளை கடுமையாக இனவாத ரீதியில் விமர்சனம் செய்துவந்தனர்.

ஆனால் இறுதி நேரத்தில் இவர்கள் வாய்கள் அடைக்கப்பட்டு மௌனிகளாக்கப் பட்டார்கள். இலங்கையினை பிரதிநிதித்துவப்படுத்தி ஐநா மனித உரிமைகள்பேரவையின் கூட்டத்தொடரில் பங்குபற்றியவர்கள் இங்குள்ள அமைச்சர்களை அடக்கிவாசிக்குமாறு கூறியதாகவும் அறிகின்றோம்.

அந்த பிரேரணையின் கனதியை,அதனை ஆதரிக்கும் நாடுகளின் கனதியை, அடக்கிவாசிக்காவிட்டால் எதிர்காலத்தில் இலங்கையில் ஏற்படப்போகும் துரதிர்ஸ்டவசமான சம்பவங்களை நிறுத்துவதற்காக குறித்த வேசங்களை கக்கிய அமைச்சர்களை அடக்கிவாசிக்குமாறு கூறப்பட்டதும் அவர்கள் அடக்கிவாசித்ததும் எமக்கு சாதகமானதாகவே இருந்தது.

இன்றுகூட வெளியிறவுதுறை அமைச்சர் மாகாணசபை தேர்தல் தொடர்பாகவும் 13வது திருத்தம் தொடர்பாகவும் அதிகார பரவலாக்கல் தொடர்பாகவும் பேசுகின்றார் என்றால் ஐநா தீர்மானத்தின் கனதியின் விளைவே அதுவாகும்.

மனித உரிமைகள்பேரவையின் கூட்டத்தொடர் முடிந்ததன் பின்னர் சிலவேளைகளில் இந்த அமைச்சர்கள் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது போன்று செயற்படுவார்கள் என்பது நாங்கள் யாவரும் அறிந்த விடயமாகும்.இருந்தபோதிலும் இலங்கை தொடர்பில் சர்வதேசம் கொண்டுள்ள நிலைப்பாட்டினை இலங்கை புரிந்து நடக்கும் என்று நாங்கள் கருதுகின்றோம்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையானது அப்பட்டமான மனித உரிமை மீறலாகவே இருக்கின்றது. ஜனநாயக போராட்டத்தில் பங்குபற்றியவர்களை அச்சுறுத்துவதும்,சட்டத்தின் முன்பாக அவர்களை நிறுத்துவதற்காக பொலிஸ் நிலையங்கள் ஊடாக நடவடிக்கைகள் முன்னெடுத்து நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சிகள்முன்னெடுப்பது எல்லாம் அராஜகமான செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

இலங்கையின் பல பாகங்களிலும் அரசியல் ரீதியான ஜனநாயக போராட்டங்கள்,பேரணிகள்,ஆர்ப்பாட்டங்கள் ஜனாதிபதிக்கு முன்பாகவே நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தவேளையில் தமிழ் மக்கள் தங்களது உரிமைகளை வலியுறுத்தி பேரணியை நடாத்தியதை விரும்பாமல் அவர்களை அச்சுறுத்துவது என்பது இந்த நாடு ஒரே நாடு ஒரே சட்டத்தின் கீழா இருக்கின்றது என்ற கேள்வி எழுகின்றது.

நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தான் ஒரு சுற்றாடல்காப்பான் வனவளத்தையும் நாட்டையும் பாதுகாப்பவன் என்று கூறுகின்றார். நான் உண்மையிலையே அந்த வார்த்தைகளை விரும்புகிறேன். ஆனால் செயல்வடிவத்தில் இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்பிற்கு ஒருதடவை வரவேண்டும் என்பதை நான் விரும்புகிறேன் வேண்டுகோள்விடுகின்றேன்.

மட்டக்களப்பின் வனவளம் எப்படி பாதுகாக்கப்படுகிறது, அத்துமீறப்படுகின்றது, சேனைப்பயிர்ச்செய்கை என்ற ரீதியிலே வனவளம் காவுகொள்ளப்படுகின்றது. இந்த மாவட்டத்தின் கனியவளங்களான இல்மனைட், மண் எப்படி அழிக்கப்படுகின்றன.

எதிர்காலத்திலே மட்டக்களப்பு மாவட்டம் மீண்டும் ஓர் அத்திப்பட்டி கிராமமாக மாறும் சூழ்நிலையில் இருப்பதை எமது ஜனாதிபதி இந்த நாட்டின் ஜனாதிபதி மட்டக்களப்பு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி இங்குவந்து மண்கொள்ளையர்கள் செய்யும் அநியாயத்தை பார்க்கவேண்டும்.

இந்த அரசின் அடி வருடிகளாக சில அரச அதிகாரி;கள் செயற்பட்டு இந்த மாவட்ட வளங்களை அழிப்பதை நேரடியாக பார்க்கவேண்டும். அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருப்பாரே ஒழிய இரு பிரதேசத்திங்கோ, ஒரு இனத்திற்கோ ஜனாதிபதியாக இருக்க கூடாது என்பது என்னுடைய வேண்டுகோளாக இருக்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது இந்த நாட்டிற்கோ,நாட்டின் ஒற்றுமைக்கோ பௌத்த மக்களுக்கோ எதிரானது அல்ல.இந்த நாட்டினையும் நாட்டு மக்களையும் நேசிக்கும் நேசிக்கும் கட்சிதான் தமிழ் தேசிய கூட்டமைப்பாகும்.

தமிழ்தேசிய கூட்டமைப்பானது பிரிவுபடாத இந்த நாட்டிற்குள் தமிழ் மக்கள் சிறுபான்மை மக்கள் சுதந்திரமாகவும் சுயநிர்ணயத்துடனும் வாழ்வதற்கு ஆசைப்படுகின்றார்கள்.முழுமையான அதிகார பரவலாக்கலை வேண்டி நிற்கின்றார்கள்.தமிழ் மக்கள் இந்த நாட்டில் இரண்டாம் தர பிரஜைகளாக வாழக்கூடாது,சமத்துவத்துடன் வாழவேண்டும் என்று நேசிக்கின்றவர்களேதவிர இந்த நாட்டிற்கோ,நாட்டு மக்களுக்கோ பௌத்ததிற்கோ எதிரானவர்கள் அல்ல என்பதை இந்த அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும்.

தமிழ்தேசிய கூட்டமைப்பானது அரசியல் ரீதியான ஒரு தீர்வினையே வேண்டி நிற்கின்றது.மாறிமாறி வந்து அரசுகள்தான் இந்த நாட்டினை சீரழிவுக்குள் கொண்டுசென்றுள்ளது.யானை தனது தலையில் மண்ணை அள்ளிக்கொட்டுவதுபோன்று அரசாங்கங்கள் மாறிமாறி விடும் பிழைகளினால் சர்வதேசத்திற்கு முன்பாக இன்று அவமானச்சின்னமாக அவமானப்பட்டு நிற்கின்றது.

இந்த நிலைமாறவேண்டும்.இந்த நிலைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்போ,தமிழ் மக்களோ காரணம் இல்லை.இதற்கு முற்று முழுதான காரணம் இந்த அரசாங்கமும் அதனை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதியும் அமைச்சர்களுமாகும்.

பந்து இன்று அரசாங்கத்தின் பக்கத்தில் நிற்கின்றது.அந்த பந்தினை தடுத்து ஆட முற்பட்டால் விபரீதமான விளைவுகளை சந்திக்கும் நிலையேற்படும்.அந்த பந்தினை நன்றாக அடித்து விளையாடினால் இந்த நாடு சுபீட்சமான,வளமிக்க நாடாக எதிர்காலத்தில் மிளிரும் என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.

Exit mobile version