ஐ.நாவில் ஈழத்தமிழர்களின் பங்களிப்பு -முனைவர் ஆ. குழந்தை

417 Views

2009 ஆம் ஆண்டுக்கு பிறகு இலங்கை அரசு தமிழரின் அரசியல் கட்சிகளை தங்களது பாதுகாப்புக் கவசமாக உலகிற்கு காட்டி, தமிழ் மக்களின் உரிமைகளையும், உயிர்களையும் பறித்தது. இப்போது நடைபெற்ற ஆட்சி மாற்றத்தில் குடும்ப ஆட்சி, இராணுவ ஆட்சி, வகுப்புவாத ஆட்சி, சர்வாதிகார ஆட்சி, சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சி, பிரிவினைவாத ஆட்சி, பாசிச ஆட்சி போன்ற ஆட்சிகள் பிறந்து வந்துள்ளன.

பசில் இராசபக்சே  கொடுத்த பணத்தால், ஈழத்தில் வடக்கு கிழக்கில் ஒரு சில தமிழ் ஆரசியல் கட்சிகள் பிரிந்து நின்று; நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்து பலவீனமாகின. இதனால் தமிழ் மக்கள் பேச்சுரிமையையும், நகர்வுரிமையையும் இழந்து உரிமையற்றவர்களாக தள்ளப்படுகின்றனர்.

thennaimavadi new3 ஐ.நாவில் ஈழத்தமிழர்களின் பங்களிப்பு -முனைவர் ஆ. குழந்தை

தமிழர்கள் தங்களது தொல்லியல் அடையாளங்களை இழந்து நாடற்றவர்களாக மாற்றப்படுகின்றனர். தொல்லியல் தமிழின அடையாளங்கள் பறிக்கப்பட்டு வந்தேறிகளாக தமிழர்கள் உருவாக்கப்படுகின்றனர். வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழர்கள் திறந்தவெளி சிறைகளில் அடைக்கப்படுவதுபோல, இராணுவம், காவல்துறையினர், நீதிமன்றம் ஆகியவற்றின் பிடியில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அதனால் தேசியத் தலைவரின் உரத்த சிந்தனையின்படி ஈழத்தமிழர்களின் விடுதலை, புலம்பெயர்ந்த தமிழர்களது கரங்களில் இருக்கிறது என்பதை நம்புகிறோம். உள்நாட்டில் தமிழர்களை பிளவுபடுத்தி, அடக்கியாளும் சிங்கள பௌத்த பேரினவாத அரசு, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களை பிரித்துவைக்க, கொலைசெய்ய, மிரட்டிவைக்க, குற்றப்படுத்த, பலவீனமாக்க அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றது.

உலக நாடுகளின் ஆதரவோடு தமிழர்கள் தங்களது தமிழீழத்தையும், விடுதலையையும், உரிமையையும் பெறவேண்டிய நிலையில் வாழ்கின்றனர். உலக நாடுகளின் ஆதரவைப்பெற, உலக நாடுகளை ஒருங்கிணைக்கும் அமைப்பாக ஐக்கிய நாடுகளின் அவை இருக்கிறது. எனவே அந்த அவையில் ஈழத்தமிழர்கள் பல அமைப்புகளாக பணியாற்றுகின்றனர். உதாரணமாக: பசுமைத் தாயகம், btf. Ctc. Ustpac போன்ற தமிழ் அமைப்புகள் ஐ.நாவிற்குள் வந்து செல்கின்றன. ஆனால் தமிழர் இயக்கத்தின் வழியாக நாடுகடந்த தமிழீழ அரசு போன்ற 26 தமிழ் அமைப்புகளும், பாதிக்கப்பட்டவர்களும் மனித உரிமை போராளிகளும் தமிழ் அரசியல்வாதிகளும் பல்வேறு அமைப்பு சார்ந்த மக்களும் ஐ.நாவின் மனித உரிமை ஆணையத்தின் பொது அமர்வுகளில் வாய்மொழி உரைகளை நிகழ்த்துகின்றனர். அதற்கு வேண்டிய அனுமதியையும், வாய்ப்புகளையும் தமிழர் இயக்கம் வழங்குகிறது.

இதனால் தமிழீழ உரிமை உயிரோடு ஐ.நாவில் வாழ்கின்றது. தமிழின அழிப்பு என்று ஐ.நாவில் உரக்கச் சொல்லி ஈழத்தமிழரின் நயன்மைக்காக (நீதிக்காக) போராடிக் கொண்டிருக்கின்றது. ஐ.நாவிற்குள் வர இயலாத தமிழ் அமைப்புகள் ஐ.நாவிற்கு முன் உள்ள முருகதாசு திடலில் நிழல்பட கண்காட்சி, கண்டன கூட்டங்கள் நினைவுநாள் கொண்டாட்டங்கள் ஆகியவற்றை நடத்துகின்றன. இந்த ஐ.நாவின் பொது அமர்வுகள், பக்க அமர்வுகள், நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்தல், சிறப்பு அறிக்கையாளர்களை சந்தித்தல், பல நாட்டுத் தலைவர்களை சந்தித்தல் ஆகியவை நடைபெறுகின்றன. இந்த நிகழ்வுகளின் வழியாக வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய தமிழீழம், தமிழர்களின் தாயகம் என்றும், ஈழத்தமிழர்கள் தன்னாட்சி கொண்ட தேசிய இனம் என்றும், ஈழத்தில் சிங்கள பௌத்த பேரினவாத அரசால் இனப்படுகொலை நடந்ததென்றும், அதற்கு பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டுமென்றும், பன்னாட்டு குற்றவியல் நடுவர் மன்றத்தில் இனவழிப்பு செய்த இலங்கை அரசை நிறுத்த வேண்டுமென்றும், சிறப்பு அறிக்கையாளரை இலங்கைக்கு அனுப்பி, நடந்த உண்மைகளை உலகுக்கு அறிவிக்க வேண்டும் என்றும், தமிழர்களின் தன்னாட்சி உரிமையை நிலைநிறுத்த வேண்டுமென்றும் தமிழர் இயக்கமும் அதன் இணை இயக்கங்களும் ஐ.நாவில் போராடிக் கொண்டிருக்கின்றன.

geneva 1 ஐ.நாவில் ஈழத்தமிழர்களின் பங்களிப்பு -முனைவர் ஆ. குழந்தை

முன்னிருக்கும் இயக்கப் பணிகள்

போராட்டம் ஒன்றுதான்; அதன் வடிவங்கள் பலவாகும் என்று தேசியத் தலைவர் கூறுவதுபோல, இனவிடுதலை என்னும் இலக்கு நோக்கி பல தளங்களில் பல வகையான போராட்டங்கள் நடைபெற வேண்டும். போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் இலக்கு ஒருபோதும் மாறக்கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அந்த ஓர் இலக்கை அடைய வேண்டுமென்றால், களச்செயல்பாடுகளும் அறிவார்ந்த செயல்பாடுகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய முறையில் செயல்பட வேண்டும். தமிழீழ நாட்டையும், உரிமையையும், நன்மையையும் பெறவேண்டுமென்றால், கீழ்கண்ட செயற்பாடுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.

தமிழீழ நாட்டின் தன்னாட்சிக்காகவும், உரிமைக்காகவும் போராடி, தங்களது இன்னுயிரை ஈந்த அனைத்து ஈகியரையும், சிங்கள பௌத்த பேரினவாத அரசு செய்த இனப்படுகொலையையும், ஏமாற்றியதையும், துரோகத்தையும் முன்னிறுத்தி, தமிழீழம் என்ற ஒற்றை இலக்குடன் செயல்பட வேண்டும்.

 1.  ஈழத்தமிழர்களது வரலாற்றில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகளை நினைவுபடுத்தி கொண்டாட வேண்டும்.
 2.  அடுத்த தலைமுறையினர்களாகிய குழந்தைகளுக்கு தமிழ்மொழி, ஈழத்தமிழ் வரலாறு, விடுதலை வரலாறு, கலை, பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றை சொல்லிக் கொடுக்க வேண்டும்.
 3.  ஈழத்தமிழர்கள் பல்வேறு அமைப்புகளாக பிரிந்து சண்டைபிடிப்பதை நிறுத்த வேண்டும். தங்களது வீரத்தையும் அறிவையும் தமிழர்கள்முன் நிலைநிறுத்துவதைவிட சிங்கள பேரினவாதத்திற்குமுன் நிலைநிறுத்த வேண்டும். இந்தச் சண்டை நமது எதிரிகளிடம் நம்மவரை காட்டிக் கொடுப்பதாகவும், நன்மை நோக்கிய பயணத்தை தடுத்து நிறுத்துவதாகவும் இருப்பதை நாம் மறுக்கவும்-மறக்கவும் முடியாது.
 4.  ஈழத்தமிழர்களிடையே பிரிவினைவாதம் என்ற பலவீனம் இலங்கை அரசுக்கு பலமாக மாறுகின்றது. இந்த பிரிவினையைப் பயன்படுத்தி சிங்கள பௌத்த பேரினவாத அரசு தமிழீழத்தில் உள்ள தமிழர்களையும், புலம்பெயர்ந்த தமிழர்களையும் பிரித்து, பலவீனப்படுத்துகின்றது. அதை எதிர்கொள்வதற்கான மாற்று வழிமுறைகளைக் கையாண்டு முறியடிக்க வேண்டும்.
 5.  தமிழர்கள் வாழும் நாடுகளில் ஒன்றிணைந்து இன அழிப்புக்கான ஆதாரங்களையும், தரவுகளையும் ஆவணப்படுத்தி அந்தந்த நாட்டு ஆட்சியாளர்களிடம் தொடர்ந்து கொடுத்து, தமிழர்களுக்கு நடந்தது இன அழிப்பு என்று இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை எடுக்கவைக்க வேண்டும்.  ஈழத்தமிழர்கள் சார்பாக எட்டு நபர்கள் கொண்ட குழுவை அமைத்து ‘அரசு சந்திப்பு’ (State Visit) செய்யவைக்க வேண்டும். இந்தக் குழு, நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நாடாளுமன்றத்தில் சந்திக்க வேண்டும்.
 6.  இன அழிப்பினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பொருளாதார உதவி செய்ய ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்தில் உள்ள வளங்களைப் பயன்படுத்த, ஒரு திட்டக் குழுவை அமைத்து பெல்சியத்திலுள்ள புருசெல்சில் பணிசெய்ய அனுப்ப வேண்டும்.
 7.  தமிழ்ப் பள்ளிக் கூடங்களை நடத்துவதுபோல, தமிழ்க் கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் நடத்த வேண்டும். அவ்வாறு நடத்த முடியாதபோது, தமிழர்கள் வாழும் நாடுகளில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களில் தமிழாய்வுத் துறைகளை உருவாக்க வேண்டும்.
 8.  தமிழர்களுக்கு புரியவைப்பதைபோல, சிங்களவர்களுக்கும் புரியவைக்க சிங்கள பகுத்தறிவாளர்களை அறிவுடனும் ஆதாரத்துடனும் நாட வேண்டும்.
 9.  தமிழ்ச் சட்டதரணிகள் பன்னாட்டு நடுவர் மன்றத்தில் தமிழின அழிப்பை ஆவணப்படுத்தி வழக்காக 10, 000 வழக்குகளைப் பதிவுசெய்ய வேண்டும். அதற்கு போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குமூலங்களை பதிவு செய்து, பன்னாட்டு குற்றவியல் நடுவர் மன்றத்தின் சட்டதரணிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
 10.  ஐ.நாவில் உள்ள பல்வேறு அமைப்புகளில் தமிழர்கள் ஊடுருவி, தங்களுக்கு நடந்தது இனஅழிப்பு என்று பதிவு செய்ய வேண்டும்.
 11.  வளர்ச்சி என்ற பெயரில் பல்வேறு நாடுகள் பேரினவாத இலங்கைக்கு பணம் கொடுப்பதையும், அதை வாங்கி தங்களது வகுப்புவாத அரசியலுக்கும் தமிழின அழிப்புக்கும் பயன்படுத்தப்படுவதை தோலுரித்து காட்ட வேண்டும்.
 12. உலகமயமாக்கலின் பின்புலத்தில் மண் விடுதலைக்காக போராடும் நாம் கல்வி, பொருளாதாரம், அரசியல் போன்ற நம்மை பலப்படுத்தும் காரணிகளை அந்த விடுதலையை நோக்கி வளர்த்து பலப்படுத்த வேண்டும்.

ஐ.நா.,வில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: பிரான்ஸ் | Dinamalar

ஐ. நாவில் நமது பணி…

ஐ.நாவில் கதைத்து உரிமை பெற முடியாதென சிலர் தவறான கருத்தை பரப்பி வருகின்றனர். இது நமது அறியாமையை வெளிப்படுத்துகிறது. ஐ.நாவில் மட்டும் அல்ல, வாய்ப்புகள் உள்ள இடங்களை நாம் பயன்படுத்தி, உரிமைக்காக போராட வேண்டும். ஐ.நா மனித உரிமை ஆணையம் இலங்கைக்கு கொடுக்கப்பட்ட காலம் வரும் மார்ச் திங்களோடு முடிவடைகிறது. வருகின்ற 46 ஆவது மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை அரசு ஐ.நா மனித உரிமை ஆணையம் கொடுத்த பரிந்துரைகளை செயல்படுத்தியதா? இல்லையா? என்பதற்கு பதில் கூறவேண்டும். ஆனால் நாம் செய்யவேண்டிய பணிகளை இங்கு பட்டியலிடுகிறேன்.

 1. இலங்கை அரசு செயல்படுத்தவில்லை என்பதை தரவுகளுடன் நிரூபிக்க வேண்டும். இனப்படுகொலை செய்தது, செய்கிறது, செய்யும் என்று புள்ளிவிபரங்களுடன் பதிவு செய்தாக வேண்டும்.

2. பொது அமர்வுகளிலும், பக்க அமர்வுகளிலும் நாம் பதிவுசெய்கின்ற கருத்துகள்      முரண்பட்டதாக இருக்கக் கூடாது. அதுபோல, அங்கு வருகின்ற அமைப்புகள் முரண்பட்டு நிற்காமல் விட்டுக்கொடுத்து, இணைந்து செயல்படுகின்ற மனநிலையை பெற்றிருக்க வேண்டும்.

3. ஈழமண்ணில் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல் செயல்பாடுகளையும், படுகொலைகளையும், மிரட்டல்களையும், துன்புறுத்துதல்களையும் பேரினவாத செயல்பாடுகளையும் அவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் அவற்றை பார்த்தவர்களும், கேட்டவர்களும் அவற்றை தரவுகளுடன் பதிவுசெய்து ஐ.நாவிற்குள் பதிவுசெய்கின்ற அமைப்புகளிடமும் சிறப்பு அறிக்கையாளர்களிடமும் இங்கிலாந்து, பிரான்சு, கனடா போன்ற நாடுகளின் தூதரகங்களில் பதிவுசெய்ய வேண்டும்.

4.இனப்படுகொலையை சந்தித்த நாடுகளின் ஆட்சியாளர்களையும், பிரதிநிதிகளையும் ஐ.நாவிலோ அந்தந்த நாடுகளிலோ சந்தித்து ஆதரவை திரட்டவேண்டும்.

5. ஆங்கிலம், பிரெஞ்சு, இசுபானியா ஆகிய மொழிகளில் கதைக்கத்தெரிந்த, புலமைபெற்ற 16 அகவை(வயது) நிறைவுற்ற இளைஞர்கள் ஐ.நாவிற்கு வரவேண்டும் அல்லது அனுப்பபட வேண்டும்.

6. ஐ.நாவிற்குள்ளேயோ வெளியேயோ ‘இனப்படுகொலை’ என்ற ஒற்றைச் சொல்தான் ஓங்கி ஒலிக்கப்பட வேண்டும்.

7.விடுதலைப்போருக்கு முன், போரின் பொழுது, போருக்குபின் சிங்கள பாசிச இராணுவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கடிதங்களாக உலக குற்றவியல் நடுவர் மன்றத்திற்கு – அந்த நடுவர் மன்றத்தின் சட்டத்தரணிக்கு நேரடியாக அல்லது தமிழர் இயக்கம் வழியாக இந்த சனவரிக்குள் அனுப்ப வேண்டும்.

8.பேராசிரியர்கள், அறிஞர்கள் ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை தரவுடன் கட்டுரைகளாகவும், நூலாகவும், ஆவணமாகவும் ஐ.நாவிற்குள், நமக்கு ஆதரவு தருகின்ற நாடுகளிடமும், இங்கிலாந்து, பிரான்சு, கனடா ஆகிய நாடுகளின் ஆட்சியாளர்களிடமும், தூதரகங்களிடம் கொடுத்து பதிவுசெய்ய வேண்டும்.

9.ஊடகங்கள் வழியாக தமிழர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, பொருளாதார ஆதரவு தருதல், மக்கள் வந்து பணிசெய்ய அனுப்புதல் ஆகியவற்றை செய்ய தூண்ட வேண்டும்.

10.கால அளவை முடிவு செய்து, பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை பதிவுசெய்து உலக குற்றவியல் நடுவர் மன்றத்திற்கு அனுப்ப தனிநபர்கள் அல்லது இயக்கங்கள் முன்வந்து செயல்பட வேண்டும்.

11.நாம் செல்ல முடிந்த ஐ.நாவின் அனைத்து அமைப்புக்குள் (செனீவா, அமெரிக்கா), ஐரோப்பிய பாராளுமன்றத்திற்குள் (புரூசல்சு) நாம் சென்று நமது இன விடுதலைக்காக குரல் எழுப்புவது, விளக்கம் தருவது, சிங்களவர்கள் முன்வைக்கும் தவறான தரவுகளைச் சுட்டிக்காட்டி, உண்மையான தரவுகளைக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு செயல்பட்டால், நமது இனத்தின் விடுதலையை வென்றெடுக்க பாதை அமைக்கலாம். இலக்கு நோக்கிய நமது போராட்டங்களைத் தொடரலாம்.

Leave a Reply