Home ஆய்வுகள் ஐநா அனைத்துலக கல்வித் தினமும் ஈழத் தமிழர் அவலநிலையும் -பற்றிமாகரன

ஐநா அனைத்துலக கல்வித் தினமும் ஈழத் தமிழர் அவலநிலையும் -பற்றிமாகரன

1989ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை குழந்தைகளின் உரிமைகள் குறித்த மரபுசாசனத்தைப் பிரகடனப்படுத்தியது. இருந்த போதிலும் 2020இல் உலகில் 265 மில்லியன் சிறுவர்களும் இளம்பருவத்தினரும் பள்ளிக்கல்வியில் சேரவோ பள்ளிப் படிப்பை முடிக்கவோ சந்தர்ப்பம் இல்லாமலும்,617 மில்லியன் சிறுவர்களும் இளம்பருவத்தினரும் ஆரம்ப வாசிப்போ ஆரம்பக் கணிப்புகளோ செய்யத் தெரியாதிருக்கும் சூழலிலும், 4மில்லியன் அகதிக் குழந்தைகள் படிப்பதற்குப் பள்ளி இல்லாது இருக்கின்ற நிலையில்,ஐக்கிய நாடுகள் சபை இரண்டாவது முறையாக அனைத்துலக கல்வித்தினத்தை 24.01.2020இல் உலகெங்கும் முன்னெடுத்தது.

இந்நேரத்தில் இலங்கையிலும் சரியான புள்ளிவிபரங்கள் கூட இல்லாத நிலையில் ஈழத்தமிழ் மாணவர்களும் தங்களின் அடிப்படை மனித உரிமையாம் கல்வி உரிமை பலவிதங்களில் மறுக்கப்பட்ட நிலையில் வாழ்வதை ஐ.நாவுக்கும் உலக மக்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை புலம்பெயர் தமிழர்களுடையதாக உள்ளது என்பதை வலியுறுத்திக் கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

“கல்வியினை மதித்து, அதன் மனித நலத்திற்கான மையத்தன்மையை உணர்ந்து,நீடிப்புத் திறனுள்ள வளர்ச்சியை” 2030 ஐ இலக்காண்டாக வைத்து உலக மக்கள் பெற வேண்டும்” என்ற கருத்து ஐ.நாவால் முதன்மைப்படுத்தப்பட்டது. ‘மக்களுக்காகவும், வாழும் கோளுக்காகவும்,வளர்ச்சிக்காகவும்,அமைதிக்காகவும் கற்றல்’ என்ற மையக்கருவின் மூலம் கல்வியின் ஒன்றுபடுத்தும் இயல்பை வெளிச்சப்படுத்தி,அதன் மனிதம் நோக்கிய இலக்குகளை எடுத்துரைத்து, கல்வி எல்லோரதும் கூட்டான அபிவிருத்திக்கான ஆவல்களை நிறைவேற்ற உதவவேண்டும் எனவும் இவ்வாண்டில் ஐ. நா. அழைத்துள்ளது. ஈழத்தமிழர்கள் இந்த அழைப்பை இன்றையக் காலத்தின் தேவையாகவே உணர்கின்றனர்.

கல்வியும் கற்றலும் மனிதத்தின் மிகப்பெரிய மூலவளம் என்பதை மீண்டும் புதுப்பித்து, கல்வி அடிப்படை மனித உரிமையாகவும்,பொதுநன்மையாகவும், 2030ம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் நீடிப்புத் திறனுள்ள நிலையான வளர்ச்சி என்பதற்கு கல்வியின் பங்களிப்பு முக்கியமானது எனவும் இந்த அனைத்துலகக் கல்வித் தினம் வலியுறுத்தி உள்ளது.

‘எல்லோரையும் உள்ளடக்கிய நியாயமான தரமுள்ள கல்வி, வாழ்நாள் முழுவதும் பெறத்தக்க கல்வியாக” 2030 இல் நீடிப்புத் திறனுள்ள வளர்ச்சி என்ற எதிர்பார்ப்புக்காக முன்வைக்கப்பட்டுள்ள 17 இலக்குகளையும் அடையக் கூடிய முறையில் இன்றைய கல்வி அமைய வேண்டுமென்பது ஐக்கிய நாடுகள் சபையின் விருப்பாக உள்ளது.

ஐ.நா வின் இந்த இலக்குகள் நோக்கிய பயணத்தில் புலம்பெயர் தமிழர்கள் தங்கள் பங்களிப்பை அளிப்பார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் ஈழத்தில் அவர்களது உடன்பிறப்புகள் இதனை அனுபவிப்பதற்கு ஐ.நா தான் உதவவேண்டும்.
“கல்வி ஒருவரின் சமுதாய வாழ்வினதும் தனிமனித வாழ்வினதும் வளர்ச்சிக்கான இதயமாக உள்ளது.

கல்வி எல்லா மக்களுக்கும் அவரவர் திறன்களை வளர்க்கவும் அதன் வழி அவர்கள் தங்களின் படைப்பாக்க ஆற்றல்களை உணரவும்,இதன் வழியாக அவர்கள் தங்களின் வாழ்வின் பொறுப்புக்களை நிறைவேற்றவும், தாங்கள் சமுதாயத்திற்கு அளிக்க வேண்டிய பங்களிப்புக்களுக்கான கொள்ளவுகளைப் பெருக்கவும் உதவ வேண்டும். வறுமைக்கும் சமத்துவமின்மைக்கும் எதிராகப் போராடவும்,உடல் நலங்களையும் பொருள் வளங்களையும் முன்னேற்றவும், ஒதுக்கல்களை வெற்றி கொள்ளவும், கல்வி பலம் வாய்ந்த ஊக்கியாகத் திகழ வேண்டும். கல்வி சனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும்,உறுதிப்படுத்தவும்,பாதிப்புக்கள் அடைந்துள்ள மக்களுக்கான சக்தியூட்டல்களை வழங்கி சமத்துவத்தன்மையை அதிகரிக்கவும் செய்ய வேண்டும்.

இறுதியாக பன்முகப்பட்ட பரிமாணங்களில் உள்ள சமுகத்திற்கான சவால்களான வறுமை,பாலினச் சமத்துவமின்மை,மற்றும் சமுகநிலைத் தனிமைப்படுத்தப்படல் என்பவற்றுக்கு எதிராக எழச்செய்யவேண்டும்” என “மக்களுக்கான கல்வி என்பது குறித்து ஐ;.நா விளக்கியுள்ளது. தமிழ்ப்பெற்றோர்கள் சிலர் பதவிக்கும் பணத்திற்கும் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் கல்வி எனக் கருதும் அறியாமையை ஐ.நாவின் மக்களுக்கான கல்வி என்ற இவ்விளக்கம் நிச்சயம் மாற்றியமைக்கும் எனலாம்.

தனிப்பட்டதும், பொதுவானதுமான மனித நடவடிக்கைகள் நாம் வாழும் கோளின் இயற்கையின் மேல் அளப்பரிய தகைப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அறிவறிஞர்கள் உடனடியாக தற்போதைய வளர்ச்சி முறைகளில் உரிய மாற்றங்களை ஏற்படுத்தத் தவறினால் சுற்றுச்சூழல் சீரழிவுகளும்,சீரான உயிரியல் மாறுபாட்டு இழப்புகளும், காலநிலை மாற்றங்களும் மனித வாழ்வினையே முற்றாக அழித்துவிடும் என எச்சரித்து வருகின்றனர்.unnamed 1 1 ஐநா அனைத்துலக கல்வித் தினமும் ஈழத் தமிழர் அவலநிலையும் -பற்றிமாகரன

இவற்றை உணரவும் ஏற்ற நடவடிக்கைகளை எடுக்கவும் கல்வி உதவ வேண்டும் என்பதை “வாழும் கோளுக்கான கல்வி” என்பதனால் ஐ.நா. வலியுறுத்துகிறது. ஐ.நாவின் இந்த விளக்கத்தை ஒவ்வொருவரும் மனதிருத்திச் செயற்பட வேண்டிய காலமிது.

நீடிப்புத் திறனுள்ள வளர்ச்சிக்கு, தொழிற் திறன்களை வளர்க்கும் கல்வி மூலம் யாருமே பின்தள்ளப்படாத அனைவரையும் உள்வாங்கக் கூடிய கல்வி அவசியம் என்பதை வளர்ச்சிக்கான கல்வி என்பதன் மூலம் ஐ.நா. எடுத்து விளக்கியுள்ளது. ஐ. நா சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களின் கல்வித் திறனைத் தள்ளி வைத்துச் செயற்படும் போக்கை மாற்றியமைக்க வேண்டும் என்பது இதனைப் படிக்கும் ஒவ்வொரு ஈழத்தமிழன் மனதிலும் தோன்றும் கருத்தாக உள்ளது.

“தொடர்ச்சியான வன்முறைகளும், ஆயுதப் போராட்டங்களும் எல்லா மனித உரிமைகளையும் கல்வி கற்பதற்கான உரிமை உட்பட வன்முறைப்படுத்தி விடுகிறது. வன்முறைகளைத் தடுத்து நீடிப்புத் திறன் கொண்ட அமைதியை உருவாக்குவதற்கு சனநாயகமும், பிரதிநிதித்துவ நிறுவனங்களும்,நன்கு திறமையுடன் செயற்படும் நீதி முறைமையும் தேவையாக உள்ளது. கல்வி அரசியல் பங்கேற் புகளுக்கும்,உள்வாங்குதல்களுக்கும், துணை வலிமை கொடுப்பதற்கும் சனநாயகத்திற்கும் முன்நிபந்தனையாக உள்ளது.

நியாயத்தை நிலைநிறுத்தி அமைதியைத் தாங்குகின்ற தூணாகவும் ஊக்கியாகவும் கல்வி உள்ளது. 100 நாடுகளில்; 50 ஆண்டுகாலத்தை எடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கல்வியில் இடைவெளி ஏற்பட்ட நேரங்களில் எல்லாம் போராட்டங்கள் உருவாகியுள்ளமை கண்டறியப்பட்டது. கல்வி அமைதியைக் கட்டி எழுப்புவதிலும் மறுசீரமைப்புக்கும் முக்கியமான பங்கிளை வகிக்கின்றது. விளிம்பு நிலையில் வாழும் மக்களுக்கு கல்வி நீதியை அடையவும், அமைதியான சமுதாயமாக அவர்கள் வாழவும் உதவுகிறது. இவற்றை அமைதிக்கான கல்வி என்பதன் வழி ஐ.நா எடுத்து விளக்கியுள்ளது.

இக்கட்டத்தில் ஈழத் தமிழர்களின் கல்வியில் சிறிலங்கா நீதியற்ற முறையில் ஏற்படுத்தியமை குறித்த வரலாற்று எண்ணங்களும் எழுகின்றன. ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை சிறிலங்கா அவர்களின் அடிப்படை மனித உரிமையான கல்வியைத் தொடர்ச்சியாக வன்முறைப்படுத்தியே அவர்களை இரண்டாந்தரக் குடிகளாக ஒடுக்கியது. 1956ம் ஆண்டின் சிங்களம் மட்டும் சட்டத்தின் மூலம் ஈழத்தமிழர்களின் தாய் மொழி உரிமையைப் பயன்படுத்தி அவர்கள் இலங்கை அரசாங்கத்திலும் அதன் நிர்வாக கட்டமைப்புக்களிலும் வேலை பெறும் உரிமை மறுக்கப்பட்டு,சிங்களவர்கள் நாட்டின் அனைத்துக் கட்டமைப்புக்களிலும் பெரும்பான்மையாக வேலை பெறுவதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டது.

இதனால் இரண்டாம்நிலை உயர்தரக் கல்வியை முடித்த தமிழ் மாணவர்கள் பெருமளவில் வேலையின்மைக்குள் சிக்கினர். அதே வேளை கடல் மற்றும் நிலப்பயன்பாடுகளிலும்,சுதந்திரமாக நாடெங்கும் தனி நிலையிலும் பொது நிலையிலும் வர்த்தக முயற்சிகளில் ஈடுபடுவதிலும், கனிம வளங்களை மற்றும் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வடக்கு கிழக்கில் தொழிற்சாலைகள் அமைப்பதிலும், சிங்கள பௌத்த பேரினவாத அரசுக்கள் தொடர்ச்சியாக மறுப்புக்களையும் கடும்போக்குகளையும், அரசஆதரவுடன் கூடிய பயங்கரவாதச் செயல்களையும் செய்து வந்தமையால் பள்ளிக் கல்வி முடித்த ஈழத்தமிழ் மாணவர்கள் இயல்பாகவே வேலையற்ற வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் சமுதாயமாக மாறினர்.

தமிழர்கள் வேலைப்பறிப்பால் ஒடுக்கப்பட்ட புள்ள்ளி விபர நூற்று வீதம்
1956 1965 1970

இலங்கை நிர்வாக சேவை 30 20 05
எழுதுவினைஞர் சேவைகள் 50 30 05
ஆயுதப்படைகள் 40 30 01
தொழிலாளர்கள் 40 20 05
துறைசார் பதவிகள் 60 30 10
(வைத்தியர்,கள்,பொறியியவாளர்கள்
விரிவுரையாளர்கள்)

தொடர்ந்து 1965இல் ஐக்கிய தேசியக் கட்சியி அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் ஐ.எம். ஆர்.ஏ. ஈரியக்கொல்லை தமிழ் மாணவர்களின் பல்கலைகழக அனுமதிக்கு எதிராக தரப்படுத்தல் முறைமையை அறிமுகம் செய்தார். அடுத்து வந்த 1970இல் ஆட்சிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்களின் தலைமையிலான சுதந்திரக்கட்சி மற்றும் இடதுசாரிக்கட்சிகளின் கூட்டாட்சியின் கல்வி அமைச்சர் பதியுதீன் முகமத் அவர்கள் தமிழ் மாணவர்களுக்கு எதிரான தரப்படுத்தல் என்பதை பல்கலைகழகத் தெரிவுக்கான என்றும் தொடரும் முறைமையாகவே மாற்றினார் இதனால் பெருந்தொகையான இரண்டாந்தரக் கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி என்பனவற்றில் அதி திறமையான கல்வித் திறன் உள்ள ஈழத்தமிழ் மாணவ சமுதாயத்தின் அடிப்படைக் கல்வி உரிமை மறுக்கப்பட்டது. அன்று தொடங்கப்பட்ட தரப்படுத்தல் முறைமை காலத்துக்குக் காலம் புதுப்புது வடிவில் புதிய பெயர்களுடன் இன்றுவரை தொடர்கிறது.

உயர்தரத்தேர்வுப் புள்ளிகளைத் தரப்படுத்தியதால் ஒடுக்கப்பட்டமை 1971
சிங்கள மாணவர்க்கான தமிழ் மாணவர்க்கான புள்ளிகள் புள்ளிகள்

மருத்துவம் ரூ பல்வைத்தியர்கள் 229 250
பௌதிக விஞ்ஞானம் 183 204
உயிரியல் விஞ்ஞானம் 175 184
பொறியியல் 227 250
கால்நடை வைத்தியர் 181 206
கட்டிடக் கலைஞர் 180 194

இவ்வாறு இலங்கையில் அடிப்படை மனித உரிமையான கல்வி உரிமை தமிழர்களுக்கு மறுக்கப்பட்டமையே தமிழ் இளைஞர்கள் தங்களின் அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே நிர்ணயிக்கும் உரிமையின் அடிப்படையில் முதலில் ஈழத்தமிழகம் என்ற பெயரிலும் பின்னர் தமிழீழம் என்ற பெயரிலும் தங்கள் தாயகத்தை வெளிப்படுத்தி ஈழத்தமிழர்கள் எனவும் பின்னர் தமிழீழ மக்கள் எனவும் தங்களின் சொந்த மண்ணில் தாங்கள் பாதுகாப்பான அமைதியான வாழ்வில் வாழ உயிர் உடல் உடமை அர்ப்பணிப்புகளுடன் முயற்சித்து வருகின்றனர்.

எனவே இலங்கைத் தமிழர் பிர்ச்சினை என்பதற்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரை ஈழத்தமிழர்களுக்கு ஐ.நா. வின் அனைத்துலக கல்வித்தின எதிர்பார்ப்புகள் எதுவுமே என்றுமே இல்லாத அவலநிலையே தொடரும் என்பதே நடைமுறை எதார்த்தமாக உள்ளது.

Exit mobile version