ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு கப்பலுக்கு இலங்கை அனுமதி மறுப்பு

இலங்கையின் கடற்பரப்பில் நீண்டகால உணவுப் பாதுகாப்பை மதிப்பிடும் ஆய்வு கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2025ஆம் ஆண்டின் ஜூலை 15ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த கப்பல் ஆய்வு பணிகளை மேற்கொள்ளவிருந்தது. எனினும் வெளிநாட்டு ஆய்வு கப்பல்களுக்கான நிலையான செயற்பாட்டு நடைமுறைகளை இறுதி செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே குறித்த கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆவணம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஆய்வு கப்பல்களை அனுமதிப்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட நிலையான செயற்பாட்டு முறைமை இல்லாததால் ஆய்வு கப்பலான எஃப். நான்சனின் இலங்கை வருகை ரத்தானதாக குறித்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நேரடியாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக இழப்புகள் ஏற்படக் கூடும் எனவும், கப்பலின் தரவுகளை நம்பியிருக்கும் பசுமை காலநிலை நிதி திட்டங்கள் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே, இந்த விடயம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்து, ஐக்கிய நாடுகள் சபையின் கொடியின் கீழ் குறித்த பணியை தொடர அனுமதிக்குமாறும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.