எழுவோம் தமிழாய்! உயர்வோம் தமிழராய்! – பனங்காட்டான்

எழுக தமிழ் பேரெழுச்சியை தமிழ் மக்களின் ஒன்றுபட்ட உணர்வெழுச்சியாக்க வேண்டியது அனைவரதும் கடமை. இதனை புகலிடத் தமிழர் பூரணமாக உணர்ந்து செயல்வடிவம் கொடுக்கின்றனர். இந்தச் செயற்பாடு ஒதுங்கி நிற்கும் தமிழ் அரசியல் கட்சிகளையும் அவைகளின் தலைமைகளையும் சிந்திக்க வைப்பதாக அமைய வேண்டும். எழுவோம் தமிழாய்! உயர்வோம் தமிழராய்! என்பது இவ்வருட ”எழுக தமிழ்” தாரக மந்திரமாகட்டும்!

தென்னிலங்கையின் பிரசித்தமான சிங்களத் தலைவர் யார் என்பதைத் தெரியப்படுத்தும் ஜனாதிபதித் தேர்தல் டிசம்பர் மாத முற்பகுதிக்குள் நடைபெறுமென்பது நிச்சயமாகிவிட்டது.

இது தொடர்பான சில முக்கிய விடயங்களை இங்கு அலச வேண்டியது கட்டாயமாகவுள்ளது.

இருபதாண்டுக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜே.வி.பி.யின் நிலைப்பாடு, ராஜபக்ச குடும்பத்தின் பிரதிநிதியாகப் போட்டியிடும் கோதபாயவின் நிலைப்பாடு என்பவை ஒருபுறம்.

தமது சுதந்திரக் கட்சியும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமென்ற மைத்திரியின் நம்பமுடியாத அறிவிப்பும், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக தாமே போட்டியிடக்கூடியதாக காய்களை சாமர்த்தியமாக நகர்த்திவரும் ரணிலின் அரசியல் சதுரங்கமும் மற்றொருபுறம்.

இவற்றுக்கிடையே, பருவமறிந்து பயிர் செய் என்ற வாக்குக்கிணங்க தாயகத் தமிழருடன் இணைந்து புகலிடத் தமிழரும் உலகளாவிய ரீதியில் இவ்வார இறுதியில் நடத்தும் எழுக தமிழ் என்ற பெருநிகழ்வு வரலாற்றுச் சிறப்புப் பெறுகிறது.

இவ்விடயங்களை இவ்வாரப் பத்தியில் மேலெழுந்தவாரியாகப் பார்க்கலாம்.

Dissapeared எழுவோம் தமிழாய்! உயர்வோம் தமிழராய்! - பனங்காட்டான்ஜே.வி.பி.யுடன் இணைந்த தேசிய மக்கள் சக்தி இயகத்தினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். ஊடக மையத்தில் ஊடகர் சந்திப்பொன்றை நடத்தினர்.

சுமார் இரண்டரை டசின் அமைப்புகளைக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த இயக்கம், ஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசநாயக்கவை ஆதரித்து பரப்புரையை ஆரம்பித்துள்ளது.

வடக்கு கிழக்கு இணைக்கப்பட்ட சுயநிர்ணய உரிமையைக் கொண்ட அரசியல் தீர்வை தாங்கள் முன்னெடுத்துள்ளதாக இங்கு குறிப்பிட்ட இந்த இயக்கத்தினர், இதற்காக அனுர குமார திசநாயக்கவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் மக்கள் மன்னிக்கத் தெரிந்தவர்கள் மட்டுமன்றி, மறக்கவும் தெரிந்தவர்கள் என்று எண்ணியோ என்னவோ, இப்படியொரு பச்சைப் பொய்யை தங்கள் வாக்குறுதியாக தமிழரின் கலாசார மண்ணில் நின்றே இவர்கள் அவிழ்த்து விட்டது அதிர்ச்சியளிக்கிறது.

இவர்களிடம் இரண்டு கேள்விகள் மட்டுமே கேட்பதற்கு உள்ளது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பதின்மூன்றாம் பிரிவின் கீழ் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு, ஒரேயொரு மாகாணசபை உருவாக்கப்பட்டு நிர்வாகம் இடம்பெற்ற வேளையில், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து வடக்கையும் கிழக்கையும் சட்டத்தின் துணைகொண்டு பிரித்தது யார்?

இலங்கை இந்திய ஒப்பந்த காலத்தில் இந்தியப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாதென தடைவிதித்து, அதனைப் பொருட்படுத்தாது இந்திய திருநீறு, சந்தனம், குங்குமம், உடுபுடவைகளை விற்ற தமிழ் வணிகர்களை தெற்கில் படுகொலை செய்தது யார்?

இவைகளுக்கான பதிலை ஜே.வி.பி. சார்பு தேசிய மக்கள் சக்தி இயக்கம் முதலில் தெரிவித்துவிட்டு, பின்னர் தங்கள் வேட்பாளருக்கு தமிழரிடம் ஆதரவு கேட்பதே நியாயம்.

அடுத்து, கோதபாயவுக்கு ஆதரவாக மேடையேறி அருகமர்ந்து உரையாற்றிய கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின், சிங்கக் கர்ச்சனை போன்ற உரை கவனிக்கப்பட வேண்டியது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தமது வாழ்க்கையின் முக்கியமான நாள் என்று முரளிதரன் இங்கு உரையாற்றியதை ஊடகங்கள் அம்பலப்படுத்தின.

இதன் எதிரொலி என்ன நெருக்கடியைக் கொடுத்ததோ தெரியாது, அவர் ஒரு மறுப்பறிக்கை வெளியிட நேர்ந்தது.

2009இல் யுத்தம் நிறைவடைந்த பின்னரே நாட்டு மக்கள் அச்சமின்றி நடமாடும் நிலை உருவானதென்றே தாம் உரையாற்றியதாகவும், விடுதலைப் புலிகள் பற்றி தாம் எதுவுமே குறிப்பிடவில்லையென்றும் இவரது மறுப்பறிக்கை தெரிவிக்கிறது.

எந்த மேடையில் நின்று இதனை இவர் கூறினார் என்பதைப் பார்க்கின் அந்தக் கூற்றின் மறைபொருள் தெரியவரும்.

JVP 1 எழுவோம் தமிழாய்! உயர்வோம் தமிழராய்! - பனங்காட்டான்யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த மகாவீரர் என்று புகழப்பட்ட கோதபாயவின் ஆதரவு பரப்புரை மேடையில் நின்றே இதனைச் சொன்னார் என்பதையும், விடுதலைப் புலிகளை அழித்தொழித்தது கோதபாயவின் இராணுவமே என்பதை மகிந்த ராஜபக்ச அறிவித்தாரென்பதையும் நினைவிற்கொண்டால், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தமக்கு முக்கிய நாளென்று முரளிதரன் கூறியிருப்பதை மறுக்க இடமில்லை.

வார்த்தை ஜாலங்களால் சொன்னதன் கருத்தை மறைக்கவோ மறுதலிக்கவோ முடியாது.
இவ்விடத்த்தில் சில கேள்விகளை முரளிதரனிடம் நாம் வைக்க வேண்டியுள்ளது.

சிங்கள அராஜகம் மேற்கொண்ட இனவழிப்பு நாட்களில் இவரது தந்தை மலையகத்தில் நீண்டகாலம் நடத்திவந்த பிஸ்கட் தொழிற்சாலையை எரியூட்டியது யார்?

இவரும் இவரது பெற்றோரும் சகோதரர்களும் சில நாட்கள் அகதி முகாமில் தங்கக் காரணமாக இருந்தது யார்?

சர்வதேசப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரராகவிருந்து இலங்கை அணிக்குப் பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்த போதிலும், இவர் ஒரு தமிழர் என்பதால் கப்டன் அல்லது உபகப்டன் பதவி வழங்கப்படவில்லையென்பதை மறுக்க முடியுமா?

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னி இளையோருக்கு மாங்குளத்தில் கிரிக்கெட் அரங்கொன்று அமைக்கப்படுமென, இங்கிலாந்தின் வீரர் இயன் போதமுடன் அங்கு சென்று வழங்கிய வாக்குறுதி என்னானது?

மகிந்த ஆட்சிக் காலத்தில் தெற்கில் விளையாட்டு அரங்கொன்றுக்கு இவரது பெயரை வைத்ததற்காக, தமிழரைக் கொன்றொழித்த கோதபாயவுக்கு ஆதரவு வழங்குவது மனசாட்சிக்கு விரோதமானது என்பதை இவரால் ஏன் அறிய முடியவில்லை.

இனி, சுதந்திரக் கட்சியின் நிலைமையைப் பார்ப்போம். மகிந்தவும் தாங்களும் இணைவதற்கு பொதுவானதொரு சின்னத்தைக் கேட்கும் நிலைக்கு மைத்திரி தரப்பு இறங்கியுள்ளது.

இவ்விடயத்தில் தங்களுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வராவிட்டால் சுதந்திரக் கட்சி எதிர்பாராத பெரும் பிளவுகளைச் சந்திக்க நேரிடுமென மகிந்தவின் பொதுஜன பெரமுன எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையில் அவன்கார்ட் ஆயுதக் கொள்ளை வழக்கில் மைத்திரியின் செல்வாக்கால், கோதபாய உட்பட 13 பேரும் விடுதலையாகியுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் முரண்பாடும் இணக்கப்பாடும் மாறி மாறி ஏற்படுகிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், மனோ கணேசனின் தமிழர் முன்னணி ஆகிய சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவு தமக்கேயுண்டு என்ற நம்பிக்கையில், தம்மைத்தாமே ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க ரணில் தயாராகி வருகிறார்.

முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேனென்ற அறைகூவலுடன் ஏட்டிக்குப் போட்டியாக சஜித் பிரேமதாசவை களமிறக்க அவர் பின்னால் நிற்கும் ரணில் எதிரப்புக்குழு தூண்டி வருகிறது. இதனை விரும்பாத சஜித்தின் தாயார் ரணிலுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருகிறார்.

தெற்கின் அரசியல் போக்கு இவ்வாறிருக்கையில், தமிழர் தாயகம் அதற்குரிய வேளையில் அதற்குத் தேவையான எழுக தமிழ் நிகழ்வுக்கு ஆயத்தமாகி வருகிறது.

கனடா, பிரித்தானியா, அமெரிக்கா, ஜெனிவா உட்பட தமிழர் வாழும் இடமெங்கும் இந்த மாதம் 16ஆம் திகதி எழுக தமிழ் உணர்வலை எழுச்சி கொள்ளவுள்ளது.

தமிழ் மக்களின் அத்தியாவசியமான ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இது ஏற்பாடாகியுள்ளது.

அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில், சகலரையும் பங்கேற்கச் செய்யும் முறையில், பல அரசியல் விடயங்களுக்கு முடிசூட்டிய யாழ். முற்றவெளி மைதானத்தில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு அனைவரையும் அணி திரளுமாறு பல பொது அமைப்புகளும் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளன. யாழ். புல்கலைக்கழக மாணவர் அமைப்பு இதற்காக ஊர் ஊராகச் சென்று பொது அமைப்புகளைச் சந்தித்து இந்திழ்வுகளின் தாற்பரியத்தை விளக்கி வருகிறது.

ஆனால், இரு தரப்பினர் மட்டும் இவ்விடயத்தில் மௌனம் சாதிக்கின்றனர். எழுக தமிழ் வெற்றி பெற்றுவிட்டால் அது தங்களின் வாக்கு வங்கியை கவிழ்த்துவிடும் என்ற தேர்தல் காய்ச்சல் கூட்டமைப்பினருக்கு. குளத்துடன் கோபித்துக் கொண்டு…. என்ற பழமொழிபோல கஜேந்திரகுமாரின் தமிழ்த் தேசிய முன்னணி.

இவைகளை பெரிதுபடுத்தாது தமிழ் மக்களின் தீப்பந்தமாக சுடர்விடும் பிரச்சனைகளை உலகறியச் செய்ய எழுக தமிழ் எழுந்துள்ளது.

2009க்கு முன்னைய பொங்கு தமிழுக்கு நிகராக, 2009க்குப் பின்னரான மூன்றாவது எழுக தமிழ் இது.

இந்தப் பின்னணியில் எழுக தமிழ் பேரெழுச்சியை தமிழ் மக்களின் ஒன்றுபட்ட உணர்வெழுச்சியாக்க வேண்டியது அனைவரதும் கடமை. இதனை புகலிடத் தமிழர் பூரணமாக உணர்ந்து செயல்வடிவம் கொடுக்கின்றனர்.

இந்தச் செயற்பாடு, ஒதுங்கி நிற்கும் தமிழ் அரசியல் கட்சிகளையும் அவைகளின் தலைமைகளையும் சிந்திக்க வைப்பதாக அமைய வேண்டும்.

எழுவோம் தமிழாய்! உயர்வோம் தமிழராய்! என்பது இவ்வருட எழுக தமிழ் தாரக மந்திரமாகட்டும்!

நன்றி: பதிவு இணையம்