எல்லைதாண்டும் மீனவர் பிரச்சினையை இலங்கை எவ்வாறு கையாளப் போகிறது?-அகிலன்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான தமிழக படகோட்டிகளுக்கு ஒன்பது மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஆறு கடற்தொழிலாளர்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, விடுவிக்கப் பட்டுள்ளனர்.

கடந்த 8 ஆம் திகதி எட்டு கடற்தொழிலாளர் கள் கைது செய்யப்பட்டு , மறுநாள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இவா் கள் மீதான வழக்கு கடந்த வியாழக்கிழமை பருத்தித்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்தத் தீா்ப்பு வழங்கப்பட்டது.

வழக்கு விசாரணைகளை அடுத்து, பட கோட்டிகள் இருவருக்கும் தலா ஒன்பது மாத சிறை தண்டனை விதித்த நீதிமன்றம், தலா 40 இலட்ச ரூபாய் தண்டமும் விதித்தது. ஏனைய ஆறு கடற்தொழிலாளிகளுக்கும் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பருத்தித்துறை நீதிமன்றத்தின் இந்தத் தண்டனை, தமிழக மீனவா்கள் மத்தியில் கொந்தளிப்பை நிச்சயமாக ஏற்படுத்தும். கடந்த சில மாதங்களாகவே இவ்வாறு எல்லை தாண்டும் மீனவா்கள் மீதான தண்டனையை இலங்கை யிலுள்ள நீதிமன்றங்கள் அதிகரித்துள்ளன.

இலங்கை சிறைகளில் தற்போது 141 இந்திய மீனவர்கள் உள்ளனர்; அவர்களில் 45 பேரின் வழக்குகள் விசாரணையில் உள்ளன, 96 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில், 3,288 தமிழக மீனவர் கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப் பட்டுள்ளனர், மேலும் 558 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சமீபத்தில், பறிமுதல் செய்யப்பட்ட 13 தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற் படையினர் பயன்படுத்த இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் மட்டும் தமிழக மீனவா்களின் சுமாா் 200 படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவா்களின் ஊடுருவல் விவ காரத்தில் இலங்கை அரசாங்கம் சட்டரீதியாக கடுமையாக நடந்துகொள்ளப் போகின்றது என் பதற்கான ஆதாரமாகத்தான் இவை உள்ளன. கடற்றொழில் அமைச்சா் இராமலிங்கம் சந்திர சேகரும், பிரதி அமைச்சா் ரத்ன கமகேயும் இது தொடா்பில் இலங்கை அரசின் அணுகுமுறை கடுமையானதாகத்தான் இருக்கும் என்பதைத் தெளிவாகவும், உறுதியாகவும் கூறிவிட்டாா்கள்.

சென்னையில் இவ்வார ஆரம்பத்தில் நடை பெற்ற அயலக தமிழா் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகம் சென்ற கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவா் சிவஞானம் சிறிதரன் ஆகியோா் அங்கு தெரிவித்த கருத்துக்கள் இந்தப் பிரச்சினை குறித்த தமிழகத்தின் அக்கறை எவ்வாறு உள்ளது என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றது.

சிறீதரன் எம்.பி. இந்தப் பிரச்சினை தொடா் பாக தமிழக முதலமைச்சருடன் பேசுவதற்கு நேர ஒதுக்கீட்டைக் கேட்டுள்ளாரே தவிர, அது தொடா்பாக தமிழகத்தில் இருந்த போது முக்கிய பேச்சுக்கள் எதிலும் ஈடுபடவில்லை. கருத்துக் களையும் வெளியிடவில்லை. “மீனவர்கள் பிரச் சினை தொடர்பாக தமிழக முதலமைச்சருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கேட்டுள்ளேன். வெகு  விரைவில் இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான சந்திப்பு நடைபெறும்” என்றும் சிறீதரன் கிளிநொச்சி திரும்பிய பின்னா் தெரி வித்தாா்.

தமிழக சட்டப் பேரவைக்கான தோ்தல் அடுத்த வருடத்தில் நடைபெறவிருக்கும் நிலையில், இவ்வாறான பேச்சுக்கு முதலமைச்சா் முன்வருவாா் என்பது எதிா்பாா்க்கக்கூடியதல்ல. தமிழக அரசியல் தலைவா்களைப் பொறுத்தவரையில் அவா்களுக்கு தென் தமிழகத்தின் வாக்குவங்கி பிரதானமானது. ராமேஸ்வரம், கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் உள்ள மீனவா்களின் வாக்குகள் தீா்மானம் மிக்கவை.

இந்தியப் பொதுத் தோ்தல் காலத்தில் இந்த வாக்குகளை இலக்கு வைத்து இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி கூட, ராமேஸ்வரத்தில் முக்கியமான உரைகளை நிகழ்த்தியிருந்தமை கவனிக்கத்தக்கது. அதனால், சிறீதரனின் கோரிக் கையை ஏற்று பேச்சுவாா்த்தை ஒன்றுக்கு தமிழக முதலமைச்சா் முன்வருவாா் என்பது எதிா்பாா்க் கக்கூடியதல்ல.

சென்னை மாநாட்டுக்கு தமிழகப் பிரதி நிதிகள் பயணமாகும் போதே இது தொடா்பில் வடபகுதியில் உள்ள மீனவா் அமைப்புக்களால் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தது. தமிழக மீனவா்களின் ஊடுருவல்களால் வட பகுதி மீனவா்கள் எதிா்கொள்ளும் பிரச்சினை கள் தொடா்பாக இந்த சந்தா்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழக முதலமைச்சருடனும், தி.மு.க. உட்பட முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகளுடனும் இலங்கையிலிருந்து செல்லும் பிரதிநிதிகள் பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று கடற்றொழிலாளா் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பகிரங்கமாகவே கோரிக்கைகளை முன்வைத்திருந்தாா்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் மீனவா் பிரச்சினை ஒரு உணா்வுபூா்வமான விவகாரம். அதுவும் தோ்தல் சட்டமன்றத் தோ்தல் எதிா்கொள் ளப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்துமே இதனை தமது அரசியலுக்குத்தான் பயன்படுத்திக்கொள்ள முற்படுவாா்கள். வடபகுதி மீனவா்கள் எதிா்கொள்ளும் பிரச்சினைகள் தமிழ கத்தின் “தமிழ்த் தேசிய“ அரசியல் கட்சிகளின் தலைவா்களுக்குத் தெரியாதவையல்ல. ஆனால், அவா்கள் அதனைப் பேசமாட்டாா்கள்.

மீன்பிடிப் படகுகளில் எல்லை தாண்டி வந்து பிடிபடுபவா்கள் அப்பாவி மீனவா்களாக இருக்கலாம். ஆனால், அவா்களை இயக்குபவா்கள் தமிழகத்தின் அரசியல் செல்வாக்கு மிக்க பெரும் முதலாளிகள். அவா்களிடம்தான் பெறுமதிவாய்ந்த  ட்ரோலா் படகுகள் பெருமளவுக்கு உள்ளன. மீன்வளத்தையும், கடல் வளங்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதையும்விட உடனடியாக இலாபம் பெறுவதுதான் அவா்களுடைய இலக்கு. அவா்களுடைய நலன்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை தமிழக அரசியல் தலைவா் களுக்கும் உள்ளது. இந்த நிலையில்தான் தமிழக முதலமைச்சரும் இருக்கிறாா்.

முதலமைச்சர் ஸ்டாலின், இந்திய – இல ங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில், இலங்கை அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்க இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

“தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிவிவ கார அமைச்சர் ஜெய்சங்கருக்கு அனுப்பும் கடிதத்தில் தமிழக மீனவர்களின் அத்து மீறிய செயல்பாடுகள் குறித்து குறிப்பிடுவதில்லை. யுத்தத் தால் நீண்டகாலம் பாதிக்கப்பட்ட மக்கள் தற் போதுதான் ஓரளவு மீண்டெழும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்” என்றும் தெரிவித்திருக்கும் சந்திரசேகா், “அவர்களின் வாழ்வாதாரம் சுரண்டப் படுகின்றது அவர்களால் அடுத்த கட்டமாக என்ன செய்ய முடியும்?” என்றும் அவா் கேள்வி எழுப்பி யிருக்கின்றாா்.

“பொட்டம் ட்ரோலிங் முறைமை எனப் படும் ட்ரோலர் படகுகளில் சட்டவிரோதமாக மீன்பிடியில் தமிழக மீனவர்கள் ஈடுபடுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ள அமைச்சா் சந்திரசேகா், “அந்த முறையை தடை செய்ய வேண்டும்” என்றும், “இலங்கையில் சட்டவிரோத மீன்பிடி முறை தடைசெய்யப்பட்டுள்ளது. எமது எதிர்கால சந்ததியினருக்கு கடல்வளத்தை பாதுகாத்து கொடுக்க வேண்டும். அதனையே இந்தியாவிடமும் தமிழக முதல்வரிடமும் கோருகிறோம்” என்றும் சென்னையில் வைத்து தமிழக ஊடகங்களில் கூறி யிருக்கின்றாா்.

இந்தப் பரச்சினைக்குத் தீா்வைக்காண் பதற்கு, இழுவை மடி வலைகள் மீதான தடையை கடுமையாக அமுல் செய்வது. எல்லைதாண்டும் மீனவா்களை கைது செய்வது. படகுகளைத் தடுத்து வைப்பது என்பவற்றை தொடா்ந்தும் நடைமுறைப்படுத்துவதுதான்  அரசாங்கத்தின் தீா்வாக இருக்கும் என்றே தெரி கிறது. பேச்சுவாா்த்தைகள் மூலமாக இந்தப் பிரச்சினையைத் தீா்க்க முடியாது என்பதை அரசாங்கம் உணா்ந்திருப்பதாகவே தெரிகின்றது. அதனால்தான், தமிழக மீனவா்களுடன் இனிமேல் பேசப்போவதில்லை என்று அமைச்சா் சந்திரசேகா் பகிரங்கமாகவே சொல்லியிருக்கின்றாா். சட்டத் தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.