எரிபொருள் விலை ஏற்றத்தின் ஊடாக மக்களை தற்கொலைக்குத் தள்ளுகின்றது இந்த அரசு -முகம்மட் ஆலம் 

எரிபொருள் விலையேற்றத்தின் ஊடாக அனைத்து மக்களையும் தற்கொலைக்கு தள்ளக் கூடிய சூழ்நிலையை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது என மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாச செயலாளர் முகம்மட் ஆலம்  குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக மன்னார் மாவட்ட தேசிய மீனவர் ஒத்துழைப்பு சங்கங்களின் சமாச கட்டிடத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது  அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ”கடந்த மாதம் இறுதி பகுதியில் கொழும்பு கடற்பரப்பில் தீப்பிடித்த நிலையில் மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் இருந்து வெளியாகும் இரசாயன கழிவுகளால்  கடல்வாழ் உயிரினங்களுக்கு பாரிய பாதிப்பு  ஏற்பட்டுள்ளதனால்  அனைத்து மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இரசாயன கழிவுகளால் கடலாமைகள் திமிங்கலங்கள் போன்றவை வங்காலை முள்ளிக்குளம் போன்ற பகுதிகளிலும் உயிரிழந்த நிலையில்  கரையொதுங்கி கொண்டிருக்கின்றன. இன்னும் எவ்வளவு காலத்திற்கு எமது கடல் வளங்கள் பாதிக்கப் போகின்றது. இதனால் மீனவர்களின் நிலை என்ன என்பதை பற்றி சிந்திக்காமல்  இந்த அரசாங்கம் மெத்தனப் போக்கை கடைபிடித்து கொண்டிருக்கின்றது. அத்துடன் இந்தப் பயணத்தடை மூலம் பாதிப்பிற்கு உள்ளான மக்களை பாதுகாப்பதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எரிபொருள் விலை ஏற்றத்தால் சிறு மீனவர்களும் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இந்த நிலையில் மேலும் பல அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு ஆலோசனை நடந்து வருவதாகவும்  அறிகிறோம்.இந்த விலையேற்றத்தின் ஊடாக அனைத்து மக்களையும் தற்கொலைக்கு தள்ளக் கூடிய சூழ்நிலையை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது”. என்றார்.