எம் உறவுகளுக்கு அஞ்சலி செய்வதை தடுக்க முடியாது- கா.ஜெயவனிதா

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளை அஞ்சலி செய்து நினைவு கூருவதனை யாராலும் தடுக்க முடியாது என  காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக் கண்டறியும் சங்கத்தின் தலைவி காசிப்பிளை ஜெயவனிதா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 “இம்மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வருகின்றது. அங்கு படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளுக்கு அஞ்சலி செய்வது எமது கடமை. நாம் நினைவு கூருவதனை யாராலும் தடுக்க முடியாது. நாங்கள் ஒவ்வொரு வருடமும் முள்ளிவாய்க்காலுக்கு சென்று இறந்தவர்களை நினைவு கூருவோம். ஆனால் இவ் வருடம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருப்பதனால் என்ன செய்வதென முடிவு செய்யவில்லை.

கடந்த 2017 ஆம் ஆண்டு தை மாதம் 23ஆம் திகதி சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்து நான்கு நாட்கள் கடந்த நிலையில் அப்போதைய இராஜாங்க அமைச்சராக இருந்த ருவான் விஜயவர்த்தன,   காணாமல் போன உறவுகளுக்கான  தீர்வினை 02 ஆம் மாதம் 09ஆம் திகதி  அரசாங்கத்திடம்  பெற்றுத் தருவதாகக் கூறியதையடுத்து, நாம் முன்னெடுத்திருந்த சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது.

ஆனால் எமக்கான தீர்வு கிடைக்கவில்லை. எனவே தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு மாசி மாதம் 24ஆம் திகதி சுழற்சி முறையிலான தொடர் போராட்டத்தை ஆரம்பித்தோம். இப்  போராட்டம் இன்றுடன் (09.05.2021) 1540 நாட்களை கடந்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா,  இந்தியா,  ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்,   தமிழ் மக்களுக்குமான தீர்வினை பெற்றுதரும் என்ற நம்பிக்கையில் எமது போராட்டம் தொடர்கின்றது“ என்றார்.