Home செய்திகள் எமது போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்த்து வருகின்றது-கே.ராஜ்குமார்

எமது போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்த்து வருகின்றது-கே.ராஜ்குமார்

எமது போராட்டத்தினால் அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியாக அழுத்தங்கள் இருப்பதால்,அரசாங்கம் எமது போராட்டத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வருகின்றது. எமது போராட்டம் சரியான பாதையில் செல்கின்றது என்பது எங்களுக்குத் தெரியும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பின் வவுனியா மாவட்ட செயலாளர் திரு கே. ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

இலக்கு வார இதழ் மற்றும் இணையத்தளம் ஆகியவற்றிற்கு அவர் வழங்கிய நேர்காணலின் முழுமையான வடிவம் வருமாறு:

 கேள்வி:வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தமிழ் மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டம் ஆயிரம் நாட்ளைத் தாண்டி நடைபெற்றுவருகின்றது.இந்த நிலையில்.இந்த போராட்டங்கள் எந்த வகையில் சிறீலங்கா அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்துள்ளது?

பதில்: இன்று  1027ஆவது நாளாக தொடர்  போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றோம்.  எமது போராட்டத்தினால் அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியாக அழுத்தங்கள் இருப்பதால்,அரசாங்கம் எமது போராட்டத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வருகின்றது. எமது போராட்டம் சரியான பாதையில் செல்கின்றது என்பது எங்களுக்குத் தெரியும். அத்துடன் சங்கங்களை பிரித்து கையாள்வதும், உடைக்க முற்படுவதும், சில சங்கங்களின் போராட்டங்களை மூவினப் போராட்டமாகச்  செய்வதும் அறியக்கூடியதாக உள்ளது.

அத்துடன் ஐ.நா.பாதுகாப்பு சபையில் கடந்த வருடம் மே மாதம் 22ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இது எமது போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாகவே நாங்கள் பார்க்கின்றோம். இரண்டாவதாக சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும், உலக நாடு எங்கிலும் காணாமல்  ஆக்கப்பட்டோரின் பெற்றோரின் போராட்ட செய்திகள் முன்னணியாக வந்துள்ளது. இந்தப் போராட்டம் அரசியலில் மிகப் பெரியதொரு மாற்றத்தைக் கொண்டு வரும்.vavuniya demo 30011 எமது போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்த்து வருகின்றது-கே.ராஜ்குமார்

புகைப்படம் ஒன்றின் மூலமாகவேதான் வியட்நாமின் யுத்தம் முடிவிற்கு கொண்டு வருமளவிற்கு உலக ஆதரவு பெருகியது என கூறப்படுகிறது. இந்த வகையில் எங்கள் போராட்ட செய்திகள் உலகம் எங்கும் பரவி, தீர்விற்கான ஒரு சூழ்நிலையை உருவாக்கி வருகிறது என நம்புகிறோம்.

கேள்வி: சிறீலங்கா அரசு வலிந்து காணாமல் போகச்செய்யப்பட்ட எம்முறவுகளை கண்டுபிடித்து தரும் என்றோ, குற்றம் புரிந்தவர்களை நீதியின் முன் நிறுத்தும் என்றோ நம்புகிறீர்களா ?

பதில்: காணாமல் ஆக்குவதில் முன்னின்றவர்களை தலைமை பொறுப்புக்களில் அமர்த்தும் புதிய அரசாங்கம் தீர்வு தரும் என்று எங்களுக்கு நம்பிக்கையில்லை. அதற்காகத் தான் வெளிநாடுகளிடம் உதவி கோருகின்றோம்.நாம் சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கும் போது,அலரி மாளிகையில் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில்,உங்கள் அரசாங்கத்தை நம்பி நாங்கள் இருக்கின்றோம். ஐந்து அரசியல் கைதிகளையாவது விடுதலை செய்யும்படி கோரியிருந்தோம். ஆனால் இதுவரை அது நடைபெறவில்லை.புதிய அரசாங்கமும் இதை செய்யவில்லை.இதுவே எதிர்வரும் தேர்தல்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் நாங்கள் அறிந்து கொள்கின்றோம். இது தமிழ் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்.

 கேள்வி:இந்த போராட்டத்தை சிறீலங்கா அரசு உதாசீனப்படுத்தி வருவதால் அதனை நாம் அனைத்துலக சமூகத்திடம் கொண்டுசெல்ல வேண்டும்.அதற்கான பொறிமுறைகள் உங்களிடம் உண்டா?

பதில்: புலம்பெயர் தமிழர்கள் ஏற்கனவே இந்தப் போராட்டத்திற்கு உறுதுணையாகவே இருக்கின்றார்கள்.ஆட்சி மாற்றத்தின் பின்னர் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில்,புலம்பெயர் தமிழர்கள் வந்து பெருமளவில் கலந்து கொண்டதானது,உலகத்திற்கு ஒரு செய்தியைச் சொல்லியிருக்கின்றது.புலம்பெயர் மக்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.எமது போராட்டத்தில் நாம் தொடர்ந்து போராடினால் நிச்சயம் ஒரு வெற்றியை அடையலாம். இன்றைய போராட்டம் 1027ஆவது நாளாகத் தொடர்கின்றது.

அதேவேளை பாதுகாப்புச் செயலாளரான கமால் குணரட்ண யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கின்றார்.இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாம் வியாழக்கிழமை(12)ஒரு போராட்டத்தை மேற்கொண்டிருந்தோம்.போர்க் குற்றவாளி கமால் குணரட்ண, பாதுகாப்புச் செயலாளராக மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளார். இது அவர்களின் தமிழினப் படுகொலையைத் தொடர்ந்து ஊக்குவிக்கும்.

யுத்தக் குற்றவாளிகளிலிருந்து தமிழர்களைப் பாதுகாக்க அமெரிக்கா,ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா எங்களுக்குத் தேவை. 1987ஐ விட 2019 தான் இந்தியா தன்னை பாதுகாக்க ஒரு சிறந்த உண்மையான தருணம். அதை உணர்ந்து இந்தியா செயற்படும் என நாம் நம்புகின்றோம்.

Exit mobile version