என்னை கொலைசெய்ய முயற்சி நடக்கின்றது: மேற்குலகத்தின் மீது குற்றம் சுமத்துகின்றாரா மைத்திரி?

தன்னை படுகொலை செய்ய முயற்சி நடைபெறுவதாகவும், அதனை புலனாய்வு அதிகாரிகள் தனக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேன தெரிவித்துள்ளார்.

பொலநறுவைப் பகுதியில் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சிங்கள மக்களுக்கு காணிகளுக்கான பத்திரங்களை வழங்கும் விழாவில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நான் போதைப் பொருள் கடத்துபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோன். எனவே தான் அவர்கள் என்னைக் கொல்ல முயற்சிக்கின்றனர். இந்த முயற்சிக்காக அவர்கள் பெருமளவான பணத்தைச் செலவிட்டுள்ளனர்.

சமூகவலைத்தளங்களும் போதைப் பொருள் கடத்துபவர்களுக்கும், அதனை பயன்படுத்துவோருக்கும் ஆதரவாக பிரச்சாரங்களை மேற்கொள்கின்றன. எனது முயற்சியை முறியடிப்பதற்கு நீதிமன்றத்திற்கும் பலர் செல்கின்றனர்.

ரணில் தலைமையிலான அரசும், எதிர்க்கட்சியும், அரசசார்பற்ற நிறுவனங்களும் என்னைக் குறிவைக்கின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, போதைப்பொருள் பாவனக்கு எதிராக மரணதண்டனை சட்டத்தை மைத்திரி பிரகடனம் செய்தபோது அதனை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமே கடுமையாக எதிர்த்து வந்தது. இந்த நிலையில் மைத்திரி மீதான கொலைக்குற்றசசாட்டுக்கள் சிறீலங்காவின் நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது.