Home செய்திகள் “எனது மக்களின் விடுதலைக்காக “ –சுவிற்சலாந்தில் மீள்வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

“எனது மக்களின் விடுதலைக்காக “ –சுவிற்சலாந்தில் மீள்வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

635 Views

சுவிஸ்  பேர்ண் மாநிலத்தில் “எனது மக்களின் விடுதலைக்காக – தலைவர் பிரபாகரனின் கருத்துத் தொகுப்பு” எனும் நூல், 04.08.2019 அன்று, தமிழர் களறியில் மீள்வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தால் 1993ம் ஆண்டு, செப்டெம்பர் மாதத்தில் இந்நூல் உத்தியோகபூர்வமாக வெளியிடு செய்யப்பட்டிருந்தது

காலத்தின் தேவைகருதி, உலகத் தமிழர் ஆவண மையத்தின் உதவியுடன் , அக்கினிப் பறவைகள் அமைப்பினரால் இந்நூல் மீள்வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மீள்பதிப்பு செய்யப்பட்ட இந்நூலின் முதற் பிரதி மாவீரர்களின் திருவுருவப்படத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும், திருமதி மணிமொழி அவர்கள் இந்நூலின் அறிமுகவுரையை நிகழ்த்தினார். இவ்வுரையின்போது தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் எமக்குக் கிடைத்த ஒரு ஒப்பற்ற தலைவர் என்பதனையும், „எனது மக்களின் விடுதலைக்காக“ எனும் நூல் ஓர் வரலாற்றுமறை என்றும் எடுத்து விளக்கியதோடு, தலைவர் அவர்களுடனான சந்திப்பின் அனுபவங்கள் சிலவற்றையும் பகிர்ந்து கொண்டார். அத்தோடு விடுதலைப் பாதையில் நடைபயிலும் ஒவ்வொருவரும் எம்மைநாமே மீள உறுதிப்படுத்திக்கொள்ளவும், புடம்போடவும் இன்றைய நிகழ்வானது காலம் இட்ட கட்டளையாக அமைந்திருக்கிறது என்றே கருதுகிறேன் என்றும் அவர் தனது உரையிலே தெரிவித்தார். மேலும் அடுத்தடுத்த சந்ததி தமிழீழ விடுதலைப்பாதையில் உறுதியுடன் நடைபோட்டு தமிழீழத்தை வென்றடையும், அதற்கு அக்கினிப்பறவைகள் அமைப்பே எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்றும் அவர் கூறினார்.

அடுத்து இந்நிகழ்வில் நூலின் வெளியீட்டுரை இடம்பெற்றது. இவ்வெளியீட்டுரை அக்கினிப் பறவைகள் அமைப்பின் சார்பில் நிகழ்த்தப்பட்டது. இந்நூலின் மீள்பதிப்பு உருவாக்கத்தின் தற்போதைய தேவை இவ்வுரையினூடாக விளக்கப்பட்டது.

அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் வல்லாதிக்கச் சக்திகளின் முயற்சிகள் தமிழீழத் தேசியத் தலைவரின் நெறியாள்கையில், முறியடிக்கப்பட்டமை யாவரும் அறிந்ததே. சிங்களத் தேசியவாததின் சித்தாந்தமாகிய தமிழினவழிப்பின் ஓர் கருவியாகவே இலங்கையின் ஒற்றையாட்சி வடிவம் திகழ்கிறது. இந்து சமுத்திரத்தின் பூகோள அரசியல் இக்கருவியில் முழுமையாகத் தங்கியிருக்கின்றது. பூகோள அரசியலின் வடிவங்கள் மாறிக்கொண்டிருந்தாலும், அதன் நலன் தங்கியிருக்கும் ஒற்றையாட்சி வடிவம் மாறப்போவதில்லை. அத்தோடு போராட்டத்தினை முன்னகர்த்தும் பலர் வழிதவறி நிற்கிறார்கள். அவர்களுக்கு வழிகாட்டியாகத் தொடர்ந்தும் எம் தலைவரும், அவரது அடிபணியாச் சித்தாந்தங்களும் இருக்க வேண்டும் என்பதினை உறுதி செய்யும் வகையில் இம்மீள்பதிப்பு அமைந்துள்ளதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

2009ம் ஆண்டில் தங்களது கூட்டு முயற்சியால் தமிழீழ நடைமுறை அரசினை அழித்த வல்லாதிக்க சக்திகள், ஒரு தசாப்தத்திற்குப் பின்னரும் பூகோள அரசியலின் அடிப்படையில் இலங்கைத் தீவினை தங்களின் நலன்களுக்காகப் பயன்படுத்த நினைக்கின்றனர். இவர்களை எவ்வாறு கையாள்வது என்பதனை தலைவரின் கருத்தியலினூடாக இந்நூல் வழிகாட்டுவதோடு, இறைமையுள்ள தமிழீழதிற்கான விடிவு எமது மக்களின் கைகளில் தங்கியிருக்கின்றது என்பதையும் இவ்வுரை தெளிவாக விளக்கியது.

இறுதியாக நன்றியுரையினைத் தொடர்ந்து, இந்நூலை மக்கள் ஆர்வத்துடன் பெற்றுச் சென்றனர்.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version