எனது மகனை அரசியலிற்குள் கொண்டுவரும் நோக்கம் இல்லை – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

தனது மகனை அரசியலிற்குள் கொண்டுவரும் நோக்கம் எதுவும் தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தனது மகனை அரசியலில் ஈடுபடுத்துவதற்கு முயற்சிகளை அவர் மேற்கொண்டுள்ளதாக வெளியான தகவல்களை அவர் நிராகரித்துள்ளார்.

யூடியுப் சனல் ஒன்றிற்கான தனது பேட்டி தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், சமூக ஊடகங்கள் அதனை பயன்படுத்துகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

“நான் அவ்வாறான அறிக்கையொன்றை வெளியிடவில்லை. நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கு இளைஞர்கள் முன்வந்தால் அதற்கு நான் எனது பங்களிப்பை வழங்குவேன். எனக்கு எந்த எதிர்ப்புமில்லை என்றே தான் தெரிவித்திருந்தேன். இது அரசியல் தலைமைத்துவத்தை எடுக்கும் முயற்சியில்லை.

இந்த நாட்டு மக்களிற்காக நேர்மையாக பணியாற்ற முயன்றமைக்காக பல விடயங்களை நாங்கள் இழந்துள்ளோம், சமீபத்தில் ஒரு சமூகபிரச்சினைக்காக குரல்கொடுத்த பின்னர் எனது ஹொரகொல்ல வீட்டில் மர்மமான முறையில் திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. எனது தந்தை கணவர் எனது ஒரு கண்ணை இழந்தது போல எனது ஒரேயொரு மகனை இழக்கவேண்டியதில்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.