கல்முனையில் கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்றுவரும் உண்ணாவிரத போராட்டம் சட்டப்படி பிழையான ஒன்று.எனக்கோரி கல்முனை பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களால் ஒரு சத்தியாகிரக போராட்டம் ஐக்கிய சதுக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதிகளில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த போராட்டத்தில் உலமாக்கள், கல்முனை பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் வைத்தியர் அஸீஸ்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஏ.எல்.தவம், கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.ரகீப், காரைதீவு பிரதேச சபை பிரதி தவிசாளர் எ.எம்.ஜாஹீர், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்,கல்முனை அபிவிருத்தி குழு இணைத்தலைவர் எம்.எஸ்.ஏ.ரஸாக், மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை, பிரதேசங்களை சேர்ந்த பொதுநல அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
காலையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் கல்முனை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்றுவரும் உண்ணாவிரத பந்தலில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சத்தியாகிரக போராட்டக்கார்களை சந்தித்து பேச்சுவார்த்தை செய்த பொலிஸாரின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றது. இப்போது உண்ணாவிரதம் மற்றும் சத்தியாகிரகம் இடம்பெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றபோது முஸ்லிம் மக்களின் சத்தியாகிரக பந்தலை அந்த போராட்டம் நெருங்கிய சமயம் சிறு சலசலப்பு வந்ததையடுத்து கல்முனை பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
முஸ்லீம் மக்களின் போராட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது, மாளிகைக்காடு அரசியல் பிரமுகர்கள்,பொது அமைப்புக்கள் சத்தியாகிரக பந்தலில் அமர்ந்து தமது ஆதரவை தெரிவித்துவருகிறார்கள்.ஆனால் இப்போது கல்முனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கலந்து கொள்ளும் பிரமுகர்கள் எல்லோரும் இப்போது ஊடகங்களை சந்தித்து தமது பக்க நியாயங்களை முன்னிறுத்தி பேசிவருகிறார்கள்.