Tamil News
Home செய்திகள் ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான தகவல்.

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான தகவல்.

கொரோனா இடர் வலயங்கள் தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 19 மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் நாளை பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேநேரம், கொரோனா தொற்று பரவல் இடர் வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதனால் ஏற்படும் கஷ்டங்களை புரிந்துணர்வுடனும் பொறுப்புடனும் பொறுத்துக்கொள்ளுமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொருட்களை கொள்வனவு செய்யும்போது, அத்தியாவசிய பொருட்களுடன் மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுககு இடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில், நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை வீடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக விநியோகிக்க அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தேயிலை தோட்டங்கள், ஏற்றுமதி பயிர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version