Tamil News
Home ஆய்வுகள் உள நோயாளர்களின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும்

உள நோயாளர்களின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும்

உள நோயாளர்களின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும். உளநோய் தொடர்பாக எங்கள் மத்தியில் இருக்கின்ற களங்கம் அகற்றப்பட வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மனநல வைத்திய நிபுணர் டாக்டர் த.கடம்பநாதன் ‘இலக்கு’ வார இதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலே தெரிவித்தார். ஒக்டோபர் 10ஆம் திகதி உலக உளநல தினம் அனுஷ்டிக்கப்படுவதையொட்டி அவரின் செவ்வியை வழங்குகின்றோம்.

கேள்வி:

போர் நிறைவுபெற்று 11 வருடங்கள் கடந்து விட்டன. இச்சூழலில் போரால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்ட எமது மக்கள் சந்திக்கும் உளப் பிரச்சினைகளை எப்படி விபரிப்பீர்கள்?

பதில்:

போரால் பாதிக்கப்பட்ட அந்த நேரத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட உளப்பிரச்சினைகள் மனச்சோர்வாக இருக்கலாம். அல்லது மனவடுவோடு தொடர்பான மனவடுவுக்குப் பின்னரான நெருக்கடி நோயாக இருக்கலாம். அந்த மாதிரியான நோய் ஏற்பட்டவர்கள் அடையாளங் காணப்பட்டு அவர்களுக்கான சிகிச்சைகள் ஓரளவு கொடுக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. நேரடியாக பாதிக்கப்பட்டு அந்த நேரத்தில் உளரீதியாக பாதிக்கப்பட்டு உளப்பிரச்சினைக்கு உள்ளான மக்கள் பலரைப்  பார்க்கலாம்.

அதைவிட அந்த காலத்தில் சிறுவர்களாக இருந்து, அசாதாரணமான சூழ்நிலைகளுக்கு, பாதகமான சூழ்நிலைகளுக்கு உள்ளாகிய சிறுவர்கள் இன்று வயது வந்த பொழுது அவர்களில் ஏற்படக்கூடிய உளநலத் தாக்கங்கள், உடல்நலத் தாக்கங்களின் வெளிப்பாடுகள் இன்றும்கூட அடையாளங் காணப்படாததாக இருக்கின்றன. பாதகமான சூழ்நிலைகளுக்கு உள்ளாகிய சிறுவர்கள், குறிப்பிட்ட ஒரு வயதை சார்ந்த நபர்களுக்கு நாங்கள் செய்ய வேண்டிய ஒரு விடயம் அவர்களின் உளநலத்தை மேம்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. அவர்களுக்கு அழுத்தங்களுக்கு, மாற்றங்களுக்கு, பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கக்கூடிய தன்மை மிகக் குறைந்தளவில் காணப்படுகின்றது. வெளியில் பார்க்கும்பொழுது, அவர்கள் சுகதேகியாக இருந்தாலும், இப்படியான சம்பவங்களுக்கு முகங்கொடுத்த சிறார்கள் வயதுவந்த பின்னர் அவர்களுக்கு தாங்குகின்ற தன்மை மிகவும் குறைந்தளவில் காணப்படுகின்றது. இதனால் அவர்களுக்குள் உள்ள முழு ஆற்றலையும் வெளிப்படுத்துவதற்கு தேவையான சக்தி, அதற்கான இயலுமை அவர்களிடத்தில் இல்லாது காணப்படுகின்றது.

பல தவறான முடிவுகளை நோக்கி அது தற்கொலை முயற்சியாக இருக்கலாம், போதைவஸ்து பாவனையாக இருக்கலாம், குடும்பத்தில் ஏற்படுகின்ற முரண்பாடுகளாக இருக்கலாம். பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு உள்ளாகுபவர்களாக இருக்கலாம். அல்லது அதனை செய்பவர்களாக இருக்கலாம். இப்படியாக பல்வேறு மட்டத்தில் அவர்களுடைய நடத்தைக் கோலங்கள் மாறுபடுவதை நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது. இப்படியானவர்களை நாங்கள் அடையாளங்கண்டு அவர்களுக்கான உளநல மேம்பாடுகளை செய்ய வேண்டிய பரவலான தேவையுண்டு.

ஆரம்ப கட்டத்தில் ஏதோவொரு வகையில் பாரிய உளப்பிரச்சினைக்கு உள்ளாகி அதனூடாக வளர்ந்து சவால்களை எதிர்நோக்குகின்ற மக்கள் கூட்டத்தை பொறுத்தவரையில் அவர்களுக்கான ஆற்றுகை என்பது இன்னும் முழுமையடையவில்லை என்பதே எனது கருத்தாகும். அதற்கான சந்தர்ப்பங்களும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன.

இந்தப் பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு இன்று பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் பின்னடைவை எதிர்நோக்கிக்கொண்டு அவர்கள் நகர முயற்சிக்கின்றனர், முன்னேற முயற்சிக்கின்றனர், ஆனால் அவர்களுக்கான ஆதரவுத் தளம் என்பது குறைவாக இருக்கின்றது. கல்வியாக இருக்கலாம், பொருளாதார வளர்ச்சியாக இருக்கலாம், சமூகத்தோடு ஒன்றிணைவதாக இருக்கலாம், இழந்த வளங்களை பெறுவதாக இருக்கலாம். இந்த முயற்சிக்கான சரியான ஆதரவு கிடைக்காதவிடத்து, அதை பெற முடியாதவிடத்து மிகவும் சிக்கலுக்குள் தள்ளப்படுகின்றார்கள். அந்த சிக்கல் காரணமாகவும், அவர்கள் மத்தியில் விரக்தி, தோல்வி மனப்பாங்கு, தன்னம்பிக்கை இழந்த நிலைமை ஏற்படுவதை அவதானிக்கலாம்.

கேள்வி:

கோவிட் – 19 உலகை ஆட்டிப்படைக்கும் தற்போதைய சூழலில் வடகிழக்கில் வாழும் எமது மக்களின் உளநிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்:

எங்களுடைய பிரதேசங்களை பொறுத்தவரை ஏற்கனவே நாங்கள் எதிர்கொண்ட அனர்த்தங்கள் காரணமாக ஒருசில குடும்பங்கள் பிரச்சினைக்குரிய அல்லது பிரச்சினைகளை சுமக்கின்ற குடும்பங்களாக மாறியிருக்கின்றன. பிறழ்வு நிலையில் இயங்குகின்ற குடும்பங்களாக இவர்களை நாங்கள் அடையாளங் காணலாம்.

இந்த கோவிட் – 19 பெருந்தொற்று நிலைமை இப்படியான குடும்பங்களை மேலும் சவாலுக்கு உட்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. சரியான நிலையில் இயங்கிக்கொண்டிருக்கின்ற குடும்பங்களைக்கூட பிறழ்வு நிலைக்கு தள்ளிவிடக்கூடிய ஆரம்பமாகக்கூட அது அமைந்து விடும்.

உளநலத்தை பொறுத்தவரை கோவிட் – 19 பெருந்தொற்று நிலைமை ஏற்கனவே இருக்கின்ற பிரச்சினையை அதிகரிப்பதாக, ஏற்கனவே இயல்பாக இருக்கின்ற நலிவுற்ற நபர்களில் உளநலப் பிரச்சினையை உருவாக்குகின்றதாக அமைவதை நாங்கள் பார்க்கின்றோம்.

கோவிட் – 19 பெருந்தொற்று காரணமாக ஏற்படுகின்ற அச்ச நிலைமை, சமூகத் தொடர்புகள் குறைக்கப்படுகின்ற நிலைமை குறிப்பாக வளர்ந்த நாடுகளை விட எங்களுடைய நாடுகளை பொறுத்தவரை கூடிக்கதைப்பது மனநிறைவை தரக்கூடிய விடயமாக இருக்கின்றது. எங்களுடைய கலாசார சமூக நிகழ்வுகள் கோயிலுக்கு போவதாக இருக்கலாம், சந்தைக்கு போவதாக இருக்கலாம், கூட்டங்களுக்கு போவதாக இருக்கலாம், நாங்கள் கூட்டாக வாழ்ந்து பழக்கப்பட்ட ஒரு கலாசார பின்னணியை கொண்டவர்கள். அந்தவகையில் கோவிட் – 19 தொற்று நிலைமை காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டி ஏற்பட்ட நிர்ப்பந்தம் காரணமாக சமூகங்களுக்கிடையிலான தொடர்பாடல் குறைந்துகொண்டு செல்கின்ற நிலைமை காணப்படுகின்றது. இந்த நிலைமை எங்களுக்குள் இருக்கின்ற மனமகிழ்வு, மனநிறைவு என்பதை இல்லாமல் செய்வதாகவும், குறைப்பதாகவும் அமைந்து விடுகின்றது. இது உளநலப்பிரச்சினைக்கு தோற்றுவாயாகவும் அடிப்படையாகவும் அமைந்து விடுகின்றது.

கேள்வி:

உளநோயாளருக்கான சிகிச்சை வசதிகள் வடகிழக்கில் தற்போது எப்படியிருக்கின்றன?

பதில்:

ஏற்கனவே அடையாளங் காணப்பட்ட உளநல நோயாளர்கள் என்று கூறும்பொழுது, கடந்த பத்து வருட காலத்தை பார்க்கின்றபோது அவர்களில் இரண்டு விதங்களில் மிகுந்த அபிவிருத்தியை நாங்கள் பார்க்கின்றோம். அவர்களுக்கான வசதிகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. அவர்களுக்கு தேவையான மருந்துகளை வழங்கக்கூடிய நிலையில் இருக்கின்றோம். அவர்களுக்குரிய சிகிச்சைகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்ற அதே நேரத்தில், அவர்கள் சிகிச்சை பெறுகின்ற இடங்கள் அவர்களுடைய பிரதேசத்தை அண்டியதாக அமைகின்ற நிலைமையை நாங்கள் பார்க்கின்றோம். உளநலத் தேவைகள் பரவலாக்கப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டு தங்களுக்கு அருகிலுள்ள வைத்தியசாலையில்கூட உளநல சேவைகளை பெறக்கூடிய சந்தர்ப்பங்கள் உளநல நோயாளர்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

கேள்வி:

நீண்ட காலமாக உளநோயாளருக்கான சிகிச்சையில் நீங்கள் ஈடுபட்டிருக்கிறீர்கள். இந்த அனுபவத்தில் இருந்து எமது மக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

பதில்:

உள நோயாளர்களின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும். உளநோய் தொடர்பாக எங்கள் மத்தியில் இருக்கின்ற களங்கம் அகற்றப்பட வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது. உளநோயாளர் ஒருவரை இதய நோயாளர் ஒருவரை பார்ப்பதைப்போல, சிறுநீரக நோயாளர் ஒருவரை பார்ப்பதைப்போல சமனாக பார்க்க வேண்டிய தேவை இருக்கின்றது. உளநோய் என்பது களங்கமல்ல. அது யாருக்கும் எப்போதும் வரக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. அது அவர்களுடைய பலவீனத்தை காட்டுகின்ற ஒரு விடயமாக இல்லை. அது அவர்கள் கடந்த காலத்தில் செய்த பாவங்களின் வெளிப்பாடல்ல. யாருக்கும் எந்த நேரத்திலும் அது வரலாம். உளநோய் ஏற்பட்டவர்களை மிகவும் கண்ணியமாக, பாரபட்சம் காட்டாது அவர்களையும் எங்களோடு இணைத்து நாங்கள் பயணிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. உலகில் நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்களாகக்கூட இவற்றைப் பார்க்கலாம். பெரும்பாலான உளநோய்க்கு உட்பட்ட நபர்கள்கூட நாட்டின் அதிபர்களாக, உலகம் வியக்கும் ஓவியர்களாக, பல்வேறு விற்பன்னர்களாக ஒருசிலர் நோபல் பரிசுகூட பெற்றுக்கொள்ளும் அளவிற்கு முன்னேறிய சந்தர்ப்பங்கள் உலகளாவிய ரீதியில் மிகவும் அதிகளவில் இருக்கின்றது.

எங்கள் நாட்டில் இப்போதிருக்கின்ற இந்த களங்க மனப்பாங்கு என்பது பல்வேறுபட்ட உளநோயாளர்களின் முன்னேற்றத்தை விரும்பியோ விரும்பாமலோ தடைப்படுத்துகின்ற ஒரு விடயமாக இருக்கின்றது. அவருடைய திருமணமாக இருக்கலாம், தொழில் பெறும் தகவாக இருக்கலாம், சமூகத்தில் அவர்கள் செய்யக்கூடிய பங்களிப்பாக இருக்கலாம், இவை முடக்கப்படுகின்ற நிலைக்கு காரணமாக சமூக களங்கம் இருக்கின்றது. ஆகவே நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து சமூக களங்கத்தை அகற்றுவதற்கு முனைவது ஒரு ஆரம்பமாக இருக்கும். அதேபோல உளநலன் பாதிக்கப்பட்டவர்கள் என நாங்கள் அடையாளப்படுத்திக் கொண்டு தொடர்ச்சியாக இருக்காமல், எங்களுக்குள் இருக்கின்ற திறமைகளை நாங்கள் தேடி, எங்களுடைய வளங்களை நாங்கள் தேடி அந்த வலுக்களுக்கூடாக நாங்கள் இன்னும் மேம்படுவதற்கான முயற்சிகளை செய்வோமானால், எங்கள் பயணமானது மிகவும் ஆரோக்கியமாக அமையும்.

கேள்வி:

உளநோயை ஒரு களங்கமாக (stigma) பார்க்கும் தன்மை உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறது. தமிழ் மக்கள் நடுவில் இப்பார்வை சற்று அதிகமாக இருப்பது போல தோன்றுகிறது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:

உலகளாவிய ரீதியில் இருக்கின்ற உளநோய் தொடர்பான களங்கம் என்பது எமது நாட்டிற்கு பொருத்தமானது. எமது நாட்டில் இருக்கின்ற எம்மவர் மத்தியில் இருக்கின்ற சில சமூக கலாசாரம் சார்ந்த நம்பிக்கைகள் கூட இந்த களங்கத்தை அதிகரிப்பதாக இருக்கின்றது. ஒருவருக்கு உளநோய் வந்தால் அதை நாங்கள் அவருடைய பலவீனமாகப் பார்க்கின்றோம், போனபிறப்பில் அவர் செய்த பாவத்தின் வெளிப்பாடாக பார்க்கின்றோம்,அவர்களுடைய மனம் வலுவற்றதாக பார்க்கின்றோம். இந்த வகையில் நாங்கள் பார்ப்பதை தவிர்த்து, ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் அந்த குறிப்பிட்டநபர் அந்த பிரச்சினையை எதிர்கொள்ளும்பொழுது அவரில் ஏற்படுகின்ற உடல் சார்ந்த மூளைசார்ந்த ஒரு நோய்தான் உளநோயாகும். இது யாருக்கும் எப்பொழுதும் வரலாம்.

எங்களுக்குள் இருக்கின்ற பரம்பரையலகு ஓரளவிற்கு காரணமாக இருந்தாலும், அந்த குறிப்பிட்டநபர் வாழுகின்ற சூழல் அவருடைய குடும்பத்தின்சூழல், சமூக சூழல், அவருக்கு கிடைக்கக்கூடிய தொழில் வாய்ப்புகள், அவருடைய முன்னேற்றத்திற்கு கிடைக்கின்ற ஆதரவு என்பன அவருக்கான பரம்பரையலகு சிலவேளைகளில் உளநோய்களை ஏற்படுத்துவதாக இருந்தாலும் அந்த நபர் சுகதேகியாக இருப்பதற்கு நிறையவே சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

அதேபோல மிகவும் கூடிய அழுத்தமுள்ள ஒருவரில் குடும்பத்தின் ஆதரவு குறைந்த ஒருவரில் சிறுசிறு பிரச்சினைகள்கூட உளநோயை ஏற்படுத்துவதாக உள்ளது. நலிவுற்ற குடும்ப அமைப்புக்களில் பிறழ்வு இயக்கப்பாட்டை கொண்டிருக்கின்ற குடும்ப அமைப்புகளில் பலப்படுத்தவேண்டிய ஒரு தேவை, அதனை அடையாளங் காணவேண்டிய தேவை, அவர்களை மற்றைய குடும்பங்களோடு ஒன்றிணைத்து ஒரே சமூகமாக பயணிக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

கேள்வி:

எமது மக்களின் உளமேம்பாட்டுக்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் எப்படி உதவலாம்?

பதில் :

புலம்பெயர் சமூகத்தால் பல்வேறுபட்ட முதலீடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. கல்வியை மையமாகவும், சுகாதாரத்தை மையமாகவும் வைத்துக்கொண்டு பல முதலீடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. சுகாதாரம் என்று சொல்லும்பொழுது உடல் சுகாதாரத்தை மையமாகவும் வைத்துக்கொண்டு முதலீடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் இந்த உலக உளநல தினத்தின் தொனிப்பொருளான உளநலத்தில் முதலீடு செய்யவும் புலம்பெயர்ந்தவர்கள் அக்கறை காட்ட முடியுமாக இருந்தால், அந்த முதலீடானது மிகவும் பெறுமதி வாய்ந்ததாக இருப்பதுடன் எங்களுடைய மக்கள் மத்தியில் இருக்கின்ற உளநலத்தை மேம்படுத்துவதாக அமைவதுடன் எங்களுக்குள் இருக்கின்ற எங்களுடைய சமூகத்தின் கலாசாரத்தின் மிகவும் பெரிய சொத்தான பெறுமானங்களை நிலைநிறுத்தவும் மேம்படுத்தவும் உதவியாக இருக்கும். பரந்துபட்ட ரீதியில் உளநலத்திற்கான முதலீடுகளையும் செய்வது கல்வியோடு சேர்த்து அல்லது கல்விக்குள்ளும் இதனை உள்வாங்க முடியும். எம்மவரின் உளநலத்தை மேம்படுத்துவதோடு அவர்களுடைய கல்வி முன்னேற்றத்திற்கும் தொழில் முன்னேற்றத்திற்கும் அவர்கள் வாழ்க்கையில் கூடுதலாக பிரகாசிக்கவும் நிச்சயமாக வழிசமைக்கும். உளநலத்திற்கான முதலீடுகளை செய்வதற்கான உறுதிமொழியை உளநல தினத்தில் எடுப்போம். அதன் மூலம் எம்மவரின் முன்னேற்றத்தை அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

Exit mobile version