ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுக்கு இடையிலான இருவேறு சந்திப்புகள் யாழ்ப்பாணத்தில் இன்று (16) நடைபெற்றுள்ளன
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் இல்லத்தில் நடைபெற்றது
அதேநேரம், இலங்கை தமிழரசு கட்சிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணம் – நல்லூரில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் அதன் இணைத் தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் பங்கேற்றதுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பில் உள்ளூராட்சி அதிகார சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந்த இரு வேறு சந்திப்புகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துரைத்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார்.
ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியுடனான சந்திப்பின் போது உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சியமைப்பது குறித்து கலந்துரையாடப்பட்ட போதிலும், யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு வெளியே தங்களுடன் இணைந்து ஆட்சியமைக்கும் வகையிலான ஆசனங்கள் அவர்கள் பெறவில்லை என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், தமிழரசு கட்சியுடனுடன் கலந்துரையாட வேண்டும் என குறிப்பிட்டதாகவும், அனைவரும் இணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் பிரதிநிதிகளுக்கு அறியப்படுத்தப்பட்ட நிலையில் இந்த விடயம் தொடர்பில் தங்களின் மத்தியக் குழுவில் ஆராய்ந்து பதிலளிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இலங்கை தமிழரசு கட்சிக்கு ஆதரவளிப்பதாயின் மன்னாரில் ஒரு சபையையும் யாழ்ப்பாணத்தில் 3 சபைளையும் தங்களுக்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறியுள்ளார்.