உள்ளூராட்சி மன்றத்தேர்தலும் !  உரிமைக்கான தமிழ்தேசிய கட்சிகளும்!- பா.அரியநேத்திரன்

நீண்ட இடைவெளிக்கு பின்னர் கல்லில் நார் உரித்தாற்போல் உள்ளூராட்சி சபை தேர்தல் 2018 பெப்ரவரி 10ல் இறுதியாக நடைபெற்ற கலப்பு முறை உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு பின்னர் தற்போது ஏழு வருடங் களுக்கு பின்னர் நடைபெறவுள்ளது. எதிர் வரும் 2025, மார்ச் 17, தொடக்கம் மார்ச் 20 வரை வேட்பு மனு ஏற்றுக்கொள்வதாகவும் கடந்த மார்ச் 03 தொடக்கம் எதிர்வரும் மார்ச் 19 வரை கட்டுப்பணம் செலுத்தும் காலம் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசின் 159 பெரும்பான்மை ஆசனங்களுடன் ஆட்சியில் உள்ள அநுர அரசின் செல்வாக்கு மீண்டும் இலங்கையில் உறுதிப்படுத்தப்படுமா இல்லையா என்பது ஒருபுறம் இருக்க வடகிழக்கு தமிழ்மக்கள் எந்தவகையில் இந்த தேர்தலை பயன்படுத்துவார்கள் என்பதையும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பதாவது ஜனாதிபதியாக 2024 ல் தெரிவான அநுராகுமார திசநாயக்கா இதுவரை பாராளுமன்றத்தில் ஆற்றிய அக்கிராசன உரையாக இருக்கலாம், விசேட உரையாக இருக்கலாம் இறுதியாக சமர்பித்த 2025 ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையாக இருக்கலாம், யாழ்ப் பாணத்துக்கு சென்றுவல்வெட்டித்துறையில் வகுப்பு நடத்திய பாடமாக இருக்கலாம் எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கையில் இனப்பிரச்சனை ஒன்று உள்ளது தமிழ் மக்களுக்கு நீண்டகாலமாக அவர்கள் போராடியுள்ளனர் அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என்று இவர் பேசியது இல்லை. ஏற்கனவே ஜனாதிபதிகளாக இருந்த ஜே ஆர், பிரமதாச, சந்திரிகா, மகிந்த, மைத்திரி, கோட்டா, ரணில் ஆகியவர்கள் ஒரு சாட்டுப்போக்கிற்காக என்றாலும் இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கா விட்டாலும் இல்லாவிட்டாலும் அப்படி ஒரு பிரச்சினை நாட்டில் உண்டு என்பதை குறிப்பிட்டே பேசியதை காணலாம்.
தேசிய மக்கள் சக்தி அரசானது அரசியல் தீர்வு விடயத்தில் முற்றாக மௌனம் காப்பது என்பது அவர்களுக்கு வடகிழக்கு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கவேண்டும் என்ற அக்கறை அறவே இல்லை என்பதையே காட்டுகிறது. இப்படி அவர்கள் அக்கறை காட்டாவிட்டாலும் வடகிழக்கில் உள்ள தமிழர்கள் பலர் அவர்கள் மீது அக்கறை காட்டுவது குறையவில்லை. இதேவேளை 2024 பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்தேசியகட்சிகள் கற்றுக்கொண்ட பாடத்தில் இருந்து இன்னும் திருந்தியதாகவும் இல்லை. ஒற்றுமை என்பதை பேச்சில் உச்சரித்துக்கொண்டு செயலில் வேற்றுமையாகவே தமிழ்த்தேசிய கட்சிகளின் செயல்பாடுகள் உள்ளன. இந்த உள்ளூராட்சி சபை தேர்தல்களிலும் இதுதான் நிலைமை தொடரப்போகிறது. தற்போது அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி சபை தேர்தல் தமிழ்தேசிய அரசியலில் ஒரு சவால் மிக்க தேர்தலாகவே அமையப்போகிறது குறிப்பாக தமிழ்த்தேசிய கட்சிகளின் போக்கு ஒருமித்து ஒரு சின்னத்தில் போட்டியிடக்கூடிய நிலை இல்லை.
ஏறக் குறைய தம்மை தமிழ்த்தேசிய கட்சிகள் என அடையாளப்படுத்தும் கட்சிகள் ஐந்தாக பிரிந்து உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டி யிடக்கூடிய சந்தர்ப்பமே உள்ளது. அதைவிட பல சுயேட்சை குழுக்களும் களமிறங்கப் போகின் றது. தேசிய மக்கள் சக்திக்கு பின்னாலும் வட கிழக்கில் பல தமிழ் இளைஞர்கள் செல்வது குறையவில்லை, ஏற்கனவே வடகிழக்கில் பொதுத்தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆளும்தரப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்ட வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஈபிடிபி, கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் ரி எம் வி பி கட்சிகளும் உள்ளூராட்சி சபை தேர்தலை இலக்கு வைத்துள்ளன. அதேபோல் ரணிலின் சிலிண்டர், சஜீத்தின் ரெலிபோன், மகிந்தவின் மொட்டு என பலதரப்பட்ட கட்சிகள் வடகிழக்கிலும் தமிழர்க ளின் வாக்குகளை சிதறடிக்கப்போகின்றன. இந்த நிலையில் கலப்பு தேர்தல் முறை என்பதால் வடகிழக்கில் இறுதியாக 2018 ல் இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் வடக்கு கிழக்கில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பெற்ற ஆசனங்களை விட இம்முறை பாரிய வீழ்ச்சியை சந்திக்கும் கள நிலவரமே உண்டு. குறிப்பாக இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியில் உள்ள சிலரின் தனிமனித ஆதிக்கம், தலைக்கனம், நீண்ட காலம் தமிழரசுகட்சியில் செயல்பட்டவர்களை ஓரம் கட்டும் போக்கு என்பன இந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு சபையும் தனித்து ஆட்சி அமைக்க எந்த கட்சிகளாலும் முடியாமல் தொங்கு சபைகளாகவே அமையப்போகின்றது.
2024 ஜனாதிபதி தேர்தலில் தமிழ்பொது வேட்பாளரை ஆதரித்த தமிழரசுக்கட்சி உறுப் பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை, கட்சியில் இருந்து நீக்குதல், அவ்வாறானவர்கள் உள்ளூராட்சி சபைகளில் வேட்பாளர்களாக போட்டியிட கூடாது என்ற நிபந்தனைகள் தனிமனித தமிழரசுகட்சி நிலை தொடர்வதும் தமிழரசுகட்சிக்கு எதிர்பார்த்த ஆசனங்களை பெறுவதில் சிக்கல் நிலை உண்டு. தமிழரசுகட்சி மத்தியகுழுவில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்த தமிழ் அக்கட்சி உறுப்பினர்களுக்கு மட்டுமே ஒழுக்காற்று நடவடிக்கை கையாளப்படுகிறது கடிதங்கள் அனுப்பப் படுகிறது. ஆனால் ஜனாதிபதி தேர்தலில் சிங்கள வேட்பாளர்களான ரணிலை ஆதரித்தவர்கள், அநுராவை ஆதரித்தவர்கள் தமிழரசுகட்சி உறுப் பினர்கள் சிலர் உண்டு. அப்படியான எவருக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை விளக்கம் கோரி கடிதங்களும் அனுப்பபடவில்லை. சுருக்க மாக சொல்வதானால் சிங்களத்தேசியத்தை ஆதரித்தவர் கள் தியாகியாகவும், தமிழ்த்தேசியத்தை ஆதரித்தவர்கள் துரோகியாகவும் தமிழ் அரசுக்கட்சியில் மத்திய குழுவில் உள்ள சிலர் கருதுவதை காணலாம்.
வழமைக்கு மாறாக கொழும்பு மாவட் டத்திலும் உள்ளூராட்சி தேர்தலில் தமிழரசுக்கட்சி இம்முறை தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவதாக கூறப்படுகிறது. இது வடகிழக்கு தமிழ் தேசிய கொள்கை அரசியல் வடகிழக்கு தவிர்ந்த மாவட்டங்களில் விரிவு படுத்துவதால் இணைந்த வடகிழக்கிற்கான சமஷ்டி அடிப்படையிலான கொள்கை மாறி ஒரே நாடு ஒரே தேசத்தை அங்கீகரிப் பதாக அதை தமிழரசுகட்சி ஏற்றுள்ளது என்பதை காட்டும் என்பதே உண்மை. உள்ளூராட்சி தேர்தல் முறையானது கலப்பு தேர்தல் முறை என்பதால் கட்சிகளில் செல்வாக்கை விட அந்த வட்டாரத்தில் மக்கள் செல்வாக்கை பெற்றவர்களே எந்த கட்சி யில் போட்டியிட்டாலும், சுயேட்சை குழுவில் போட்டியிட்டாலும் தனிமனித செல்வாக்கும் இந்த தேர்தலில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய வாய்புகள் உள்ளதால் தமிழ்த்தேசிய கட்சிகள் வேட்பாளர் களை தெரியும்போது இதனை கருத்தில் கொள்ளவ தில்லை.
விகிதாசாரத்தேர்தல் எனின் கட்சிகள் செல்வாக்கை முதன்மைபடுத்தும் சந்தர்ப்பம் மாகாணசபை தேர்தல், பாராளுமன்ற தேர்தல்களில் காணப்பட்டாலும் உள்ளூராட்சி சபை தேர்தல் கலப்பு முறை என்பதால் ஊர் வட்டாரம் பிரதேசத்தில் பிரபல்யம் உள்ளவர்களுக்கு சந்தர்ப்பம் அதிகம் உண்டு. உள்ளூராட்சி தேர்தல் என்பது இம்முறை வடகிழக்கு தாயகத்தில் தமிழ்தேசிய கட்சிகளுக்கு படிப்பினையை தரக்கூடிய முடிவாகவே அமையும் என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை.