உள்ளூராட்சித் தேர்தல் 2025 ‘எமது ஊர் நம்மோடு’  வெறும் கோசமல்ல (பகுதி 2) – விதுரன்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக் கான தேர்தலானது வடக்கு, கிழக்கைப் மையப்படுத்தியதாக பார்க்கையில் வழக்கத்துக்கு மாறான நிலைமையொன்றே ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக, இதுகால வரையிலும் வட கிழக்கில் தமிழ்த் தேசிய சிந்தனையுள்ள கட்சிகளே கோலோச்சி வந்திருக்கின்றன..
ஆனால் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளில் அவ்விதமான நிலைமைகள் நீடிக்குமா என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. இதற்கு பல்வேறு விதமான அகப்புறக்காரணிகள் செல்வாக்குச் செலுத்துவதாக இருக்கின்றன.
முதலாவதாக, தேசிய மக்கள் சக்தியின் ஆதிக்கம் தொடர்வதற்கான சூழமைவுகள் காணப்
படுகின்றதாகும். நடைபெற்று நிறைவடைந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் அக்கட்சியானது, 12 பாராளுமன்ற உறுப்பினர் களை நேரடியாக மக்கள் தெரிவு மூலம் பெற்றுக் கொண்டுள்ளதோடு தேசியப்பட்டியல் ஊடாக மூன்று உறுப்புரிமைகள் வழங்கப்பட்டு 15பேர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர்.
இந்த உறுப்பினர்கள் ‘அதிகாரம் எங்களி டம் உள்ளது. எங்களுக்கு வாக்களித்தால் தான் உங்களது ஊர் வளர்ச்சி அடையும். இதுகால வரையில் இருந்தவர்களால் எந்தப்பயனையும் அடையவில்லையே’ என்று அழுத்தமாக மக்கள் மத்தியில் தெரிவிக்கும் கூற்றுக்கள் தமிழ் பேசும் மக்களிடையே தாக்கத்தை செலுத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.
குறிப்பாக, வடக்கின் மொத்த வாக்கா ளர் தொகையில் மூன்றிலொரு பங்கினர் கரை யோரத்தினை அண்மித்திருப்பவர்களாக உள்ளனர். அவர்களை மையப்படுத்தி ‘தமிழக மீனவர்கள் ஆக்கிரமிப்பு, அவர்களின் வாழ்வாதார ஈடேற்றம், சாதிய, சமூக அங்கீகாரத்தை வழங்கும் தரப்பு’ ஆகிய விடயங்களை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தியின் பிரசாரம் மிகத் தீவிரமாக உள்ளது.
இதனைவிடவும், ஜனாதிபதி அநுரகுமார திசாநா யக்க கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி வெலிகம பகுதியில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ‘ஊழல், மோசடியற்ற குழுவினர் வெற்றிபெறும் பிரதேச சபைகளுக்கு மாத்திரமே, மத்திய அரசாங்கத்தினால் மானியங்கள் ஒதுக்கப்படும். அவ்வாறான குழு தேசிய மக்கள் சக்தியிடமே உள்ளது’என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூற்றானது, நாட்டின் நிறைவேற்றுத் துறை அதிகாரமிக்க ஜனாதிபதி தனது அதிகாரத்தை நேரடியாக பயன்படுத்தி மத்திய அரசாங்கத்தால் மானியங்கள் வழங்குவது குறித்து தீர்மானிப்பது தேர்தலுக்கு அழுத்தம் பிரயோகிக்கும் ஒரு செயற் பாடாகும்.
அதுமட்டுமன்றி, சாதாரண மக்கள் மத்தியில் மத்தியில் ஆட்சி அதிகாரம் உள்ள தரப்புக்கே உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரத்தினையும் வழங்குவதன் ஊடாக வினைத் திறனாக செயற்படுத்த முடியும் என்ற கருத்தியலை ஆழமாக விதைப்பதை மையமாக கொண்டதாகும்.
இரண்டாவதாக, வடக்கு,கிழக்கு பகுதிகளில் உள்ள தமிழ் கட்சிகள் கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் பாடங்கற்றுக் கொள்ளாத நிலைமை நீடிக்கின்றமையாகும்.
குறிப்பாக, ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ முழுமையாக சிதைக்கப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து உதிரிகளாகி தனியாகவும், கூட்டாக வும் இருக்கும் அரசியல் அணிகளுக்குள் காணப் படுகின்ற தனிநபர், மற்றும் குழுக்களுக்கு இடை யிலான குத்துவெட்டுக்கள் தமிழ் மக்கள் மத்தியில் பொதுப்படையில் ‘அரசியல் மீதான நாட்டத்தில்’ வெகுவாகத் தாக்கம் செலுத்துகின்றது.
உதாரணமாகக் கூறுவதாக இருந்தால், இலங்கைத் தமிழரசுக்கட்சிக்குள் காணப்படுகின்ற சிறிதரன், சுமந்திரன் அணி மோதலை மக்கள் எள்ளளவும் ஏற்றுக்கொள்ளவில்லை. அது தமிழரசு மீதான வெறுப்பினை ஆழப்படுத்துகின்றது.
அதேபோன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து  கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெளியேறி யதிலிருந்து, பின்னர் ஜனநாயக தேசியக் கூட்ட மைப்பு உருவாக்கப்பட்டு அதில் பங்கேற்றிருந்த காலம் வரையில் மிகக் கடுமையாக விமர்சித்து வந்திருந்த என்.சிறிகாந்தா இப்போது கஜேந்திர குமார் தரப்புடன் கூட்டணியில் பங்கேற்றுள்ளார்.
அக்கூட்டில் ஐங்கரநேசன் தலைமையிலான தமிழ்த் தேசிய பசுமைத்தாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையிலான ஜனநாயக இலங்கைத் தமிழரசுக்கட்சி ஆகிய சிறிய அணிகளும் உள்ளடங்கியுள்ளன.
மறுபக்கத்தில் அதிக கட்சிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்படுகின்ற ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் சிறிகாந்தா, சிவாஜிலிங்கத்தின் வெளியேற்றத்துடன் பிளவுகள்; ஏற்பட்டுள்ளமை வெளிப்படையானவிடயம். எனினும் சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக் கட்சி அக்கூட்டில் உள்ளீர்க்கப் பட்டுள்ளது. அதன் இலாப,நட்டங்களை பொறுத்தி ருந்தே பார்க்க வேண்டியுள்ளது.
அதுமட்டுமன்றி, குறித்த கூட்டில் வழக்க மான பரம்பரிய தலைவர்களின் கீழ் புதியவர்களை உள்ளீர்ப்பதில் ‘வரட்சியான நிலைமை’ காணப் படுகிறது. இந்த நிலைமையானது, குறித்த அரசியல் தரப்பினை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதில் சவால்களை உருவாக்கியுள்ளது.
இந்த மூன்று பிரதான தமிழ்த் தரப்புக்களைத் தவிரவும், சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.டி.பி, ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜனபெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உள்ளிட்டவையும் களத்தில் உள்ளன. அவற்று டன் பல்வேறு சுயேச்சைக் குழுக்கள் களமிறக் கப்பட்டிருக்கின்றன. அவை ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இல்லாது விட்டாலும் வாக்குச் சிதறல்களுக்கு இயல்பாகவே வழிசமைக்கும்.
மூன்றாவதாக, வடக்கு,கிழக்கில் அதிகளவில் தமிழ்க் கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிரகாரிக்கப்பட்டுள்ள விடயம் தமிழ்த் தரப்புக்குள்ளான போட்டித்தன்மைச் சூழலை இல்லாதொழித்து தமிழ்க் கட்சிகளுக்கும் தேசிய கட்சிகளுக்கும் இடையிலானதாக போட்டியாக மாற்றியிருக்கின்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்.மாநகர சபை உட்பட 9உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக 148 கட்சிகளும் 27 சுயேட்சைக் குழுக்களுமாக கட்டுப்பணத்தை செலுத்தியிருந்த நிலையில் 136 கட்சிகளும் 23 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன. ஆதில் 136 கட்சிகளுடைய நியமனப்பத்திரங்களும் 10 சுயேட்சைக் குழுக்க ளுடைய நியமனப்பத்திரங்களும் ஏற்றுக் கொள்ளப்
பட்டுள்ளதோடு, 22 கட்சிகளுடைய நியமனப் பத்திரங்களும் 10 சுயேட்சைக் குழுக்
களுடைய நியமனப்பத்திரங்களும் நிராகரிக்கப் பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப் பள்ளி பிரதேச சபைக்கு ஏழு அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேட்சைக்குழுக்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவில் ஒரு சுயேட்சைக்குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. கரைச்சி பிரதேச சபைக்கு பத்து அரசியல் கட்சிகளும் மூன்று சுயேட்சைக்குழுக்களும் வேட்பு மனுவில் மூன்று அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்களும் இரண்டு சுயேட்சைக்குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காக 38 தரப்பினர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அதில்  34 தரப்பின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோடு, 2 அரசியல் கட்சிகளின தும் 2 சுயேட்சை குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனமன்னார் மாவட்டத்தின் 4 உள்ளூ ராட்சிமன்றங்களுக்கு 38வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள்  உள்ளடங்களாக 8 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
தொடரும்…