Home செய்திகள் உளரீதியாக இளைஞர்கள் அழிக்கப்படட்ட ஒரு  நாட்டுக்கு விமோசனம் கிடையாது-இந்திக்க சம்பத்

உளரீதியாக இளைஞர்கள் அழிக்கப்படட்ட ஒரு  நாட்டுக்கு விமோசனம் கிடையாது-இந்திக்க சம்பத்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் ” அரகலய  ” போராட்டத்தில் கலந்து கொண்ட  இந்திக்க சம்பத்துடன் ஒரு  கலந்துரையாடல்,

 கேள்வி:-
 இலங்கையில் இனவாத சிந்தனையாளர்களின் செயற்பாடுகள் தொடர்பாக  உங்கள் கருத்து என்ன?

பதில்:-
இனவாதம் என்பது மிகவும் கொடியதாகும்.இது இலங்கையின் சாபக்கேடோ என்று கூட சில சந்தர்ப்பங்களில் எண்ணத் தோன்றுகின்றது.இலங்கையின்   இனவாதம் இந்த நாட்டை கெடுத்து குட்டிச்சுவராக்கிய நிகழ்வுகள் அநேகமுள்ளன.1948  இல் இந்திய வம்சாவளி மக்களின் பிரசாவுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்டமை, 1956 தனிச்சிங்கள சட்டம், ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள், அவ்வப்போது முடுக்கிவிடப்பட்ட வன்செயல்கள் இவையனைத்தும் இனவாதத்தின் மறைமுக வெளிப்பாடுகளே என்பதனை மறுப்பதற்கில்லை.

1956 ம் ஆண்டு முன்வைக்கப்பட்ட தனிச்சிங்கள சட்டம் இந்நாட்டில் மக்களின் ஒற்றுமையை வேரறுத்தது.அரச தொழில் வாய்ப்புகளில் தமிழர்களின் வீதத்தில் சரிவு ஏற்பட‌இது உந்துசக்தியானது.” தனிச் சிங்களம்  எனும் கொள்கை இலங்கை நாட்டின் பொதுவாழ்க்கையில் தமிழ் மொழியை அதற்குரிய ஸ்தானத்தில் இருந்து வெறுமனே விலக்கி வைப்பதை மட்டும் கருதவில்லை. ஆனால் அது இந்த நாட்டின் தமிழ் மொழி பேசும் மக்களை இலங்கையின் அரசியல், பொருளாதாரம், மற்றும் கலாச்சார வாழ்க்கை என்பவற்றில் இருந்தே வெளியே தள்ளி வைக்கிறது ” என்று முக்கியஸ்தர்கள் கருத்து தெரிவித்திருந்ததையும் நான் இங்கு நினைவுகூற விரும்புகின்றேன்.

சிங்களம் மட்டும் அரசகரும மொழியாக்கப்படுவதை ஆரம்பத்தில் எதிர்த்த இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா போன்றவர்கள் கூட பின்னர் அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக தனிச் சிங்கள சட்டத்துக்கு ஆதரவு வழங்கியமை கசப்பான வரலாறாகும்.

இலங்கையில் யுத்தத்தின் தோற்றுவாயாக  இனவாதம் அமைந்தது.யுத்தத்தினால் இலங்கை எதிர்கொண்ட விளைவுகள் அதிகமாகும்.சர்வதேசத்தின் சந்தேகப்பார்வை இலங்கை மீது விழுவதற்கும் இனவாதமே காரணமானது.இலங்கையில் இரத்த ஆறு ஓடியதோடு அபிவிருத்தியும் கேள்விக்குறியானது.பல உயிர்களும் காவு கொல்லப்பட்டன.இத்தனை தாக்க விளைவுகள் இடம்பெற்றபோதும் இனவாதத்தை தொடர்ந்து முன்னெடுக்கும் இனவாதிகள்  இன்னும் இருந்து வருவது வேதனைக்குரியதாகும்.இனவாதிகள் திருந்தும் வரை நாட்டிற்கு அபிவிருத்தியோ அல்லது முன்னேற்றமோ கிடையாது.இதேவேளை நல்லிணக்க முயற்சிகள் இலங்கையில் இடம்பெற்று வருகின்றபோதும் இவை பெயரளவில்லாது  இதயசுத்தியுடன் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்..

கேள்வி:-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில்:-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் கடந்த மே 18 ம் திகதி வியாழக்கிழமை  இடம்பெற்று முடிந்திருக்கின்றது. இறுதி  யுத்தத்தின் போது உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து வடக்கு கிழக்கில் உணர்வுபூர்வமாக இந்நிகழ்வு  நடைபெற்றுள்ளதனை  அறிந்து  கொள்ளக்கூடியதாக உள்ளது.மக்கள் தமது உறவுகளை நினைவு கூர்ந்து அழுது புலம்பி இருக்கின்றனர் என்பதையும் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

இதேவேளை சிங்கள ராவய அமைப்பினரால் கொழுப்பில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக தெரிய வருகின்றது.இது விரும்பத்தக்கதல்ல.இது போன்ற நிகழ்வுகள் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். ஒரு இனம் இன்னொரு இனத்தைக் காட்டிலும் உயர்வானதல்ல.எந்தவொரு இனமும் இன்னொரு இனத்தை அடக்கியாள முடியாது.அவ்வாறு அடக்கியாளவும் கூடாது. அனைவரும் இதனை ஒரு பாடமாகக் கொள்ள வேண்டும்.கற்றறிந்த பாடங்களின் துணைகொண்டு முன்செல்ல வேண்டிய தேவையுள்ளது.

ஒரு நிகழ்வினை நினைவுபடுத்தி அனுஷ்டிப்பதென்பது அவரவர் சார்ந்த விடயமாகும்.இதனை தடுப்பதோ அல்லது இடையூறு விளைவிப்பதோ சாத்தியமானதாக தென்படவில்லை.ஏதேனும் ஒரு இனத்தின் நியாயமான செயற்பாடுகளை முடக்குகின்ற அல்லது மழுங்கடிக்கின்ற நடவடிக்கைகள் சிறப்பானதல்ல என்பதனை சகல தரப்பினரும் விளங்கிச் செயற்பட வேண்டியது அவசியமாகும். இனங்களுக்கிடையே புரிந்துணர்வு கட்டியெழுப்பப்பட்டு  சமாதான சூழ்நிலைக்கான கதவுகள் திறந்து விடப்படவேண்டும்.

கேள்வி:-
இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படாது இழுத்தடிக்கப்பட்டு வருகின்றதே!

பதில்:-
உண்மைதான்.இது நியாயமானதல்ல.இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நிலவிய கொடிய யுத்தத்தின் விளைவாக நாடு பல்வேறு சவால்களையும சந்திக்க நேர்ந்தது என்று முன்னதாக கூறியிருந்தேன்.யுத்தத்தால் உளரீதியாக காயமடைந்த மக்கள் பலருள்ளனர்.இவர்களின் காயங்கள் ஆற்றப்படாது தொடர்ச்சியாக இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றமை விரும்பத்தக்கதல்ல. ஏற்கனவே 13 வது திருத்தச் சட்டம்,  சமஸ்டி மூலமான தீர்வு, 13 ஐ விஞ்சிய தீர்வு என்று பல விடயங்கள் குறித்து பேசப்பட்டது.முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் முன்னதாக இலங்கை வந்தபோது 13 ஜயும் விஞ்சிய தீர்வு குறித்து வலியுறுத்தி இருந்தார்.எனினும் இதுவும் இன்றுவரை  சாத்தியப்படாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை 13 ஆவது திருத்தச் சட்டத்தை மையப்படுத்திய தீர்வு தொடர்பில் நோக்குகின்றபோது இச்சட்டம் கொண்டு வரப்பட்டு 40 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.இத்திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட அரசியல் சூழ்நிலை வேறு.இப்போதிருக்கும் அரசியல் சூழ்நிலை வேறு.மக்களின் வாழ்க்கையிலும் இப்போது மாற்றங்கள் பல ஏற்பட்டுள்ளன.எனவே அக்காலத்தில் முன்வைக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் இப்போது பொருந்துமா? என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.எனவேதான் 13 ஐ விஞ்சிய தீர்வு தொடர்பில் ஆலோசிக்கப்பட்டது என்பதும் நோக்கத்தக்தாகும்.

எவ்வாறெனினும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வலிகளை ஏனையோர் புரிந்து கொள்ள வேண்டும்.அவர்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வினை ஆட்சியாளர்கள் பெற்றுக் கொடுக்க முன்வருதல் வேண்டும்.தொழில் நிலை, சமூக அந்தஸ்து, பொருளாதார அபிவிருத்தி, அரசியல் உள்ளிட்ட சகல துறைகளிலும் சகல இனங்களுக்கும் சமவுரிமை வழங்கப்படுதல் அவசியமாகும்.

இதைவிடுத்து  இன அடிப்படையில் மாற்றுக்கண் கொண்டு நோக்குவதால் அது பிரச்சினைகள் பலவற்றுக்கும் வித்திடுவதாக அமையும் என்பதை மறுப்பதற்கில்லை. இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட பல விடயங்களிலும் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுவதால் வக்கிர எண்ணங்கள் மேலோங்கும் என்பதனை சகலரும் புரிந்து செயற்படுதல் வேண்டும்.

கேள்வி:-
வடபகுதியில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனை தொடர்பில் என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில்:-
உங்களின் கேள்வி மிகவும் முக்கியமானது.போதை என்பது சமூகத்தை சீரழித்து இளைஞர்களின் பாதையை மாற்றக்கூடியது என்பார்கள்.” ஒரு நாட்டை அழித்து விடுவதற்கு அணு ஆயுதங்கள் தேவையில்லை.ஒரு நாட்டின் இளைஞரை போதைப்பொருளில் மாட்டிவிட்டால் அந்நாடு முழுவதும் திக்கற்று துன்பத்தில் அல்லல்படும்.பௌதீக. அழிவுகளின் சிதைவுகளில் இருந்து ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியும்.ஆனால் உள‌ரீதியாக இளைஞர் அழிக்கப்பட்ட ஒரு நாட்டுக்கு எவ்விதத்திலும் விமோசனம் கிடைக்கமாட்டாது ” என்று பேராசிரியர் ஆர்.எம்.கல்றா கூறி இருக்கின்றார்.இது தொடர்பில் நாம் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது.

உரிமைக்காக குரல் கொடுக்கும் சமூகத்தை மழுங்கடிக்க போதைப்பொருள் வாய்ப்பளிக்கும் என்று புத்திஜீவிகள் வலியுறுத்தி இருக்கின்றனர்.இவ்விடயம் தொடர்பிலும் முக்கியமாக நோக்க வேண்டியுள்ளது. போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த ஆவண செய்தல் வேண்டும்.

அரசியல்வாதிகளும் இந்நடவடிக்கைக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். வடபகுதி மக்களின் கலாசாரம் மற்றும் பண்பாடு என்பன உலகளாவிய ரீதியில் சிறப்பு பெற்றதாக விளங்குகின்றது என்று கூறுவார்கள். எனவே இவற்றைப் பேணி முன்செல்வது குறித்து ஒவ்வொருவரும் ஆர்வம் செலுத்த வேண்டும்.

இதைவிடுத்து போதைப்பொருள் போன்ற தீய செயல்களில் ஈடுபடுவது சமூகத்துக்கு அவப்பெயரைத் தேடித்தரும். அத்துடன்  அபிவிருத்தி உரிமை சார்ந்த விடயங்கள் என்பனவும் இதனால் கேள்விக்குறியாகும்.

கலந்துரையாடியவர்- துரைசாமி நடராஜா

Exit mobile version