மனித வரலாற்றில் மிக அதிக நாடுகளில் தேர்தல்கள் இடம்பெற்ற ஆண்டாக இந்த வருடம் கடந்து செல்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கின்ற 70 இற்கு மேற்பட்ட நாடுகளில் தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது உலக மக்கள் தொகையில் அரை பங்குக்கு மேற்பட்ட மக்கள் தமது வாக்குபலத்தை பயன்படுத்தியுள்ளதுடன், பல நாடுகளில் தேர்தல்கள் இன்றியே ஆட்சி மாற்றங்களும் இடம் பெற்றுள்ளன.
சிரியாவில் அரசு கைப்பற்றப்பட்ட அதே சமயம் ஜேர்மனி அரசும் வீழ்ந்தது. மறுபுறமாக தென்கொரிய அதிபரும் தனது பதவியை இழந்தார், அதற்கு முன்னர் பங்களாதேசத்தின் ஹசீனா அரசு வீழ்த்தப்பட்டது, மேலும் ஈரானின் அதிபர் உலங்குவானூர்தி விபத்தில் கொல்லப்பட்டதால் அங்கும் தேர்தல் மூலம் புதிய அதிபர் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜோர்ஜியா மற்றும் வெனிசுலாவில் இடம் பெற்ற தேர்தல்களை அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன், மோல்டோவில் இடம்பெற்ற தேர்தலையும் மீண்டும் நடத்துமாறு கூறி தமக்கு சார்பான அரசை அவர்கள் நிறுவியுள்ளனர்.
மேலும் தேர்தல்கள் இடம்பெற்ற நாடுக ளில் மிக முக்கிய நாடுகளான ரஸ்யாவில் பூட்டீன் மீண்டும் பதவிக்கு வந்ததுடன், அமெரிக்காவிலும், பிரித்தானியாவிலும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள் ளது. பிரான்ஸிலும் நாடாளுமன்றத்தின் பெரும் பான்மையை அரசு இழந்துள்ளது. இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி அரசு தனது பெரும் பான்மை பலத்தை இழந்து பலவீனமான அரசி யல் உருவாகியுள்ளது. இலங்கையில் பல தசாப் தங்களாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரண்டு பிரதான காட்சிகளும் அரசியலில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளன.
அதாவது பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்த ஆண்டாக இந்த ஆண்டு கடந்து சென்றாலும், போர் விரிவாக்கம் பெற்றுச் செல்லும் ஆண்டாகவும் இந்த ஆண்டு திகழ்ந்துள்ளது. உக்ரைன்-ரஸ்ய போர் மேலும் தீவிரமடைந்ததுடன், தற்போது ரஸ்யாவின் வெற்றி உறுதி என்ற நிலைக்கு களமுனை மாற்றம் பெற்றுள்ளது. எனினும் இந்த ஆண்டு முடிவுறும் போது அந்த போர் தனது மூன்றாவது ஆண்டுக்குள் நுழையப்போகிறது.
ஆனால் அந்த போர் உலகில் ஏற்படுத்திய பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் பல, இதுவரையில் உக்ரைன் போருக்கு அமெரிக்கா தலைமையிலான மேற்குலக கூட்டணி நாடுகள் 340 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளன. ஆனால் உக்ரைன் செலுத்திய விலைகள் மிக அதிகம். போர் ஆரம்பிக்கும் போது 43 மில்லியன் மக்கள் கொகையை கொண்ட அந்த நாட்டில் தற்போது 20 மில்லியன் மக்களே எஞ்சியுள்ளனர்.
ஏனையவர்கள் நாட்டை விட்டு வெளி யேறிவிட்டனர், போரில் இதுவரையில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட உக்ரைன் படையினர் கொல்லப்பட்டும், காயமடைந்தும் உள்ளதாக தெரி விக்கப்படுகின்றது. நேட்டோ படையினரின் நவீன ஆயுதங்கள் எவையும் களமுனையில் மாற்றங்களை கொண்டுவரவில்லை.
இந்த களமுனை தோல்விகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அரசியலை ஆட்டம் காணவைத்துள்ளது. ஒரு நூற்றாண்டு உலக வல்லரசாக திகழ்ந்த அமெரிக்காவின் நிலையும் இந்த ஆண்டுடன் வீழ்ச்சியை காண ஆரம்பித்துள்ளது. கடந்த 15 வருடங்களாக அமெரிக்கா தனது அரசியல் ஆளுமையை உலகில் இழக்க ஆரம்பித்திருந்தாலும் இந்த வருடம் தான் அது அதிகம் வெளித்தெரிய ஆரம்பித்துள்ளது.
தனது வீழ்ச்சியை தடுப்பதற்காக உலகில் உள்ள பல வலிமையற்ற நாடுகளை தண்டிக்க அமெரிக்கா முனைந்து நிற்பதையும் அவதா னிக்க முடிகின்றது. உதாரணமாக 100 பில்லியன் டொலர்களை வரிச்சலுகையாக பெறும் கனடாவை தனது மாநிலமாக பிரகடனப்படுத்த அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முற்பட்டுள்ளதும், 300 பில்லியன் டொலர்களை வரிச்சலுகையாக பெறும் மெக்சிக்கோவை ஆக்கிரமிப்பேன் என அவர் மிரட்டியதும் போக, தற்போது டென்மார்க்கின் ஆளுமையில் உள்ள 57,000 மக்கள் தொகையை கொண்ட ஜேர்மனியை விட 6 மடங்கு அதிக பரப்பளவைக் கொண்ட ஆனால் அதில் 80 விகிதம் பனிக்கட்டிகளால் சூழப்பட்ட கிறீன்லாட்டை கைப்பற்றுவேன் எனவும், 1977 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் 1999 ஆம் ஆண்டு அமெரிக்காவிடம் இருந்து பனாமாவுக்கு வழங்கப்பட்ட கால்வாயை மீண்டும் கைப்பற்று வேன் என ட்ரம்ப் தெரிவித்ததும் அமெரிக்காவின் இயலாமையை காண்பிக்கின்றது.
ஏனெனில் டிறம்பினால் கூறப்பட்ட இந்த நாடுகள் அனைத்தும் பலவீனமானவை, வீழ்ந்துவரும் தனது சாம்ராஜ்ஜியத்தை தூக்கி நிறுத்து வதற்காக அமெரிக்கா மிகவும் பலவீனமாக இலக்குகளை தேடுகின்றது. சீனாவிடம் இழந்து வரும் சந்தை வாய்ப்புக்களை ஈடுகட்ட தனது நட்புநாடுகளை நோக்கி அது தனது ஆயுதத்தை திருப்ப முற்பட்டுள்ளது. கிறீன்லான்டில் உள்ள தங்கம், வெள்ளி, செப்பு மற்றும் யூரேனியம் போன்ற தாதுப்பொருட்கள், எரிபொருட்களுடன், ஆட்டிக் பகுதி மீதான ஆளுமைக்கு அது முக்கியம் என்பதால் தனது பொருளாதார மற்றும் படைத்துறை விரிவாக்கத்திற்கு அதனை தெரிவுசெய்துள்ளது அமெரிக்கா. பனாமா கால் வாயும் அப்படியானது தான்.
ஓன்பது உறுப்பு நாடுகளைக் கொண்ட பிறிக்ஸ் அமைப்பு இந்த ஆண்டின் முடிவுடன் மேலும் 9 பங்காளி நாடுகளையும் கொண்ட அமைப்பாக விரிவாக்கம் பெற்றுள்ளது. அதாவது உலகின் மக்கள் தொகையில் அரை பங்கு மக்கள் தொகையை கொண்ட நாடுகளின் கூட்டணியாக அது பலமாகியுள்ளதுடன், இதுவரையில் உலகினை ஆட்சி செய்த பொருளாதார வல்லமை கொண்ட ஜி-7 நாடுகளின் கூட்டணியைiயும் அது பின்தள்ளியுள்ளது.
பிறிக்ஸின் வளர்ச்சி, ரஸ்யாவை படைத் துறை மற்றும் இராணுவ ரீதியில் பலவீனப்படுத்த மேற்குலகம் மேற்கொண்ட முயற்சியின் தோல்வி, சீனாவின் பொருளாதாரத்தை முடக்க மேற்கொண்ட முயற்சியின் தோல்வி என்பன அமெரிக்காவிற்கு அச்சத்தை கொடுத்துள்ளது. அதனை இந்த வருடம் நன்றாக உணர்த்தியுள்ளது.
உக்ரைனில் ரஸ்யா பெறும் வெற்றி என்பது அதன் விரிவாக்கமாகவும், ஐரோப்பாவின் வீழ்ச்சியாகவும் மேற்குலகம் பார்க்கின்றது. அது அமெரிக்காவின் உலக ஆழுமையை தகார்ப் பதுடன், அதற்கு மாற்றீடான ஒரு பலமான அணியை உருவாக்கிவிடும் என மேற்குலகம் அஞ்சுகின்றது. எனவே கிறீன்லான்ட், பனாமா, கனடா, மெக்சிகோ என தனது விரிவாக்கம் தொடர்பில் அமெரிக்கா சிந்தித்துவருகையில், காசா, லெபனான், சிரியா என இஸ்ரேல் தனது விரிவாக்கத்தை மேற்கொண்டுவருகின்றது.
ஆபிரிக்க கண்டத்தில் இந்த வருடம் ரஸ்யா மேற்கொண்ட விரிவாக்கமும், அங்கிருந்து அமெரிக்க மற்றும் பிரான்ஸ் நாடுகள் வெளியேறிய தும், பூகோள அரசியலில் முக்கியமானவை. அதனை ஈடுசெய்வதற்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் அவசரமாக மேற்கொள்ளும் நகர்வுகள் தற்போதைய உலக ஒழுங்கை சீர்குலைத்துள்ளதே தவிர, அதனை ஈடுசெய்வதற்கு ஏற்றவையல்ல.
உதாரணமாக சிரியாவின் வீழ்ச்சியை உடனடியான வெற்றியாக இஸ்ரேலும், அமெரிக் காவும், துருக்கியும் பார்த்தாலும், முற்றாக உட்கட்டுமானங்களை இழந்த அந்த நாட்டை ஆரம்பத்தில் இருந்து கட்டியெழுப்புவது என்பது தற்போதைய பொருhளாதா சுமைகளை மேலும் அதிகப்படுத்தும் என்பதுடன், மத்திய கிழக்கின் பாதுகாப்பையும், உறுதித்தன்மையையும் அது நிரந்தரமாக சீர்குலைத்துள்ளது என்பது தான் உண்மை. உக்ரைனில் ரஸ்யா போரை வென்றால் அது மத்தியகிழக்கில் தனது கவனத்தை திருப்பும் என்பதும் உண்மை.
காசாவில் ஆரம்பமாகிய போர் ஒரு வருடத்தை கடந்தும் பயணிக்கின்றது. ஹிஸ் புல்லாக்களின் தலைமைப்பீடத்தை ஆழித்து, ஹமாஸின் தலைவர்களை படுகொலை செய்த போதும் இஸ்ரேலினால் போரை வெல்ல முடிய வில்லை. உலகம் பார்த்து நிற்க 46,000 மக்களை படுகொலை செய்த இஸ்ரேல் உலகின் அத்தனை சட்டவிதிகளையும் மீறியுள்ளது.
அதனை மேற்குலக நாடுகள் அனுமதித்தது என்பது அல்லது நிறுத்த முற்படாதது என்பது இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உலக நாடுகளால் அதிலும் குறிப்பாக மேற்குலக நாடுகளால் உருவாக்காக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனிதாபிமான மற்றும் மனித நேய அமைப்புக்களின் கட்டமைப்புக்கள் அனைத்தும் சிதைந்துபோன ஆண்டாக இந்த வருடத்தை பார்க்கலாம்.
அமெரிக்காவினால் பயங்கரவாதியாக அறி விக்கப்பட்டு, அவரின் தலைக்கு 10 மில்லியன் டொலர்கள் பரிசு அறிவிக்கப்பட்ட ஒருவரை அதே அமெரிக்கா தலமையிலான மேற்குலக நாடுகள் ஜனநாயகப் போராளியாக தமது நலன்களுக்காக மாற்றியதும், மேகுலகம் மீதான எஞ்சியிருந்த நம்பிக்கையையும் உலகநாடுகளில் கேலிக்கூத்தாக்கியுள்ளதுடன், இதுவரையில் பயங்கரவாதம் என்ற சொற்பதத்தை மேற்குலக நாடுகள் தம்மை ஏமாற்ற பயன்படுத்தியதாகவும் உலகம் உணர்கின்றது.
அதாவது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, பொருளாதாரத்தினாலும், போரினாலும் அதிகம் பாதிக்கப்பட்ட ஆண்டாக இந்த ஆண்டு கடந்து செல்வதுடன், உலக அமைதிக்காக உருவாக்கப்பட்ட அமைப்புக்களும் தமது வேடம் கலைந்து நிற்கின்ற ஆண்டாகவும் இந்த ஆண்டு தன்னை முடித்துக்கொள்கின்றது.