உலக நாடுகள்  சிறீலங்காவை  தன் மக்களுக்கு நீதியை வழங்க தவறிய  நாடாகவே காண்கின்றது- சுமந்திரன்

447 Views

உலக நாடுகள்  சிறீலங்காவை  தன் மக்களுக்கு நீதியை வழங்க தவறிய நாடாகவே காண்கின்றது என உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போது எம். ஏ. சுமந்திரன்     இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலினால் பெருமளவில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் என்றும் இத் தாக்குதலை நடத்தியவர்களை, அவர்களுடைய விசுவாசத்திற்கமைய அவர்கள் மன்னித்திருக்கின்றார்கள் என்பதற்காக அவர்களுக்கான நீதியை மறுத்துவிட முடியாது என்றார்.

அத்தோடு அரசாங்கமும் இவ்விடயத்தில் நீதியை நிலைநாட்ட தவறியுள்ளது. பல்வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் பேராயர் அவர்கள் குறிப்பிட்டது போல இத்தாக்குதலின் மூல காரணமானவர்கள் இன்னமும் இவ் அறிக்கையில் வெளிப்படுத்தப்படவில்லை.

இதன் போது மேலும் தெரிவிக்கையில்” ஏற்கனவே தாக்குதல் நடக்கவிருப்பது தொடர்பான விபரங்கள் மற்றும் பெயர் விபரங்கள் கிடைக்கப்பெற்றிருந்தும் இதன் மூல சூத்திரதாரியினை நாம் அறியோம் என அரசு கூறுமாயின் அது தமது மக்களை ஏமாற்றுவதாகும், இதுவரை சர்வதேச விசாரணைகள் தேவையில்லையென மறுத்தவர்களே தற்போது இத்தாக்குதல் விடயத்தில் சர்வதேச விசாரணையினை நாடுவது, இவ்வரசு அதன் மக்களை கைவிட்டுள்ளதோடு பொறுப்புக்கூறல் எனும் அடிப்படை கடமையில் தவறியுள்ளதையே எடுத்துக்காட்டுகின்றது.

நீதியை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் கடமை.மேலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடர்கள் இடம்பெறும் இக்காலப்பகுதியில், உலக நாடுகள் கடந்த 11 வருடங்களாக இலங்கையிடம் இப்பொறுப்புக்கூறலினை வேண்டிநிற்பதோடு இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்ற அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஒப்புதலுக்கு பின்பும் இன்றளவும் எவ்வித பொறுப்பு கூறலும் இடம்பெறவில்லை. கத்தோலிக்க திருச்சபை 2 வருடத்திற்குள் பொறுமை இழந்து சர்வதேச விசாரணையினை கோருகிறார்கள், நாம் 11 வருடங்களாக பொறுத்திருக்கின்றோம்.இவ்வாறான சூழ்நிலையில் நாம் சர்வதேச விசாரணையினை கோருவதை தவறு என்று எப்படி கூற முடியும்? அரசாங்கங்கள் மக்களை ஏமாற்றும் போதும் இவ்வாறாக சர்வதேச தலையீட்டை கோர நேரிடும். உலக நாடுகள் இன்று இலங்கையை அதன் மக்களுக்கு நீதியின் வழங்க தவறிய ஒரு நாடாகவே காண்கின்றது” என்றார்.

Leave a Reply