Home ஆய்வுகள் உலகை கதிகலங்க வைக்கும் புதிய கொரோனா வைரசு-விக்கிரமன்

உலகை கதிகலங்க வைக்கும் புதிய கொரோனா வைரசு-விக்கிரமன்

நோயியல் வரலாற்றில் வைரசுக்களின் தாக்கம்

உயிரின வரலாற்றில் நுண்ணுயிர்கள் பேராதிக்கம் செலுத்தி வருவது தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது.இந் நுண்ணுயிர்கள் தாம் அனைத்து உயிரினங்களின் இருப்பிற்கு ஆதாரமாகவும், சிலவேளைகளில் அவ்வுயிர்களின் அழிவுக்கு காரணமாகவும் அமைந்து விடுகின்றன. அந்த வகையில் வைரசுக்களின் அமைப்பும் செயற்படு திறனும் மனித குலத்தை நீண்ட நெடுங்காலமாக ஆட்டம் காண வைத்து வருவது கண்கூடு.

கடந்த எட்டு நூற்றாண்டுகளில் இரண்டு பில்லியனுக்கும் மேற்பட்ட மனித உயிரிழப்புகள் வைரசுக்களின் தாக்கத்தால் ஏற்பட்டவை என கணக்கிடப்படுகிறது. இவற்றுள், ஸ்பானிய காய்ச்சல், ஈரலழற்சி(செங்கமாரி/hepatitis), சின்னமுத்து(Measles), சின்னம்மை(smallpox), எய்ட்ஸ், பல்வேறு வகையான இன்பு(f)ளுவென்சா (influenza) காய்ச்சல் என்பன கடந்த காலங்களில் சிறு மற்றும் பெரும் எண்ணிக்கைகளில் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வந்திருக்கின்றன.

கொரோனா வைரசுக்கள்

கொரோனா வைரசுக்கள் 1960களில் கோழிகளில் நோயை ஏற்படுத்திய போது இனங்காணப்பட்டன. கொரோனா வைரசுக்களின் மகுடம்(crown) போன்ற தோற்றம் இப்பெயருக்கான காரணமாக அமைந்தது.coronavirus 1 உலகை கதிகலங்க வைக்கும் புதிய கொரோனா வைரசு-விக்கிரமன்

கடந்த காலங்களில் இரு வெவ்வேறு கொரோனா வைரசுக்கள் மனிதரில் சாதாரண சளிக்காய்ச்சலை ஏற்படுத்துவதும் அறியப்பட்டது. எனினும் மனிதர்கள் மீதான புதிய கொரோனா வைரசுகளின் தாக்கம் கடந்த 2003 முதல் அச்சுறுத்தும் வகையில் குறுகிய காலத்துள் பல்வேறு நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதுடன் சடுதியான மரணங்களையும் மருத்துவ விஞ்ஞானத்துறைக்கு சவாலாகவும் விளங்கி வருகின்றன.

இவற்றுள் துரித கடுஞ் சுவாச நோய் (Severe Acute Respiratory Syndrome /SARS), மத்திய கிழக்கு சுவாச நோய் (Middle  East Respiratory Syndromeல்/ MERS) என்பன 2003 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் தாக்கம் செலுத்தத் தொடங்கி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டன. எனினும் 2019 டிசம்பரில் இனங்காணப்பட்ட புதிய கொரோனா வைரசு ஒரு மாத காலத்தில் 27 நாடுகளுக்கு பரவியுள்ளதுடன் 11,000 இற்கு மேற்பட்டவர்களில் உறுதிப்படுத்தப்பட்டு 250இற்கு  மேற்பட்ட உயிர்களை காவு கொண்டு உலகமெங்கும் மக்களின் பேசு பொருளாகி கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிறது.

புதிய கொரோனா வைரசின் பரவும் முறையும்நோய்த் தாக்கமும்

புதிய வைரசு ஏனைய கொரோனா வைரசுக்கள் போலவே தோற்றமளித்தாலும் அதன் வெளிப்புறமுள்ள உயிர்க் கலங்களைத் தாக்கும் புரத கூறுகளில் சிறு வேறுபாடுகளைக் கொண்டுள்ளமையே இதனை புதிய வைரசாக இனங்காட்டி நிற்கிறது.

இவ் வைரசு தொடர்பான முதற்கட்ட ஆய்வுகள் முன்னர் இனங்காணப்பட்ட SARS மற்றும் MERS கொரோனா வைரசுகளின் அமைப்புடன் ஒத்துப் போகின்ற போதிலும், வௌவ்வால்களில் இருந்து பரவிய SARS வைரசுடன் அதிக தொடர்புடையதாக கருதப்படுகிறது.

இவ்வைரசு வௌவ்வால் போன்ற ஏதேனும் விலங்கிலிருந்து, ஏனைய விலங்குகளுக்கும் , அவ்விலங்குகளை கையாளும் அல்லது உண்ணும் மனிதருக்கும் பரவியிருக்கக் கூடிய வாய்ப்புகளையே இதுவரையான நோய் பரம்பலியல் ஆய்வுகள் சுட்டி நிற்கின்றன. இவ்வைரசு விலங்கிலும் மனிதர்களிடையேயும் பரவும். நோய் ஏற்படுத்தும் மற்றும் தாக்கம் உண்டு பண்ணும் முறைகளில் SARS வைரசையே ஒத்ததாக காணப்பட்டாலும், இதன் வீரியம் சற்று அதிகமானதாக இருக்கலாம் என்பது இதன் பரவல் வேகத்தில் இருந்து கணிக்கப்படுகிறது.

புதிய கொரோனா வைரசுக்கள் விலங்குகளின் தொடுகை, விலங்கு உணவுகளை உட்கொள்ளல் என்பவற்றின் மூலமும் தொற்றுக்கு உள்ளானவர்களின் சுவாச துணிக்கைகள் மூலமாகவும் பரவுவதாக இனங்காணப்பட்டுள்ளது.

தொற்று ஏற்பட்ட ஓர் மனிதருடனான தொடுகை மற்றும் அவரிடமிருந்து சுமார் 6 அடி சுற்று வட்டத்தினுள்ளான காற்றுத் துணிக்கைகளை சுவாசித்தல் என்பவற்றின் மூலம் இவ்வைரசுக்கள் இன்னொரு நபரை தொற்றலாம் என அறியப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்றும் வைரசுக்கள் தொற்று ஏற்பட்டவரின் சுவாச குழாய்களிலும் நூரையீரலிலும் பல்கிப் பெருகி நூரையீரலின் கலங்களைத் தாக்கி அவற்றின் உயிர்வளி(ஓட்ஸிசன்) பரிமாற்ற திறனை பாதிப்பதன் மூலம் மூச்சுத் திணறலையும் பிற உடல் உறுப்புக்களின் செயற்பாடுகளையும் பாதித்து இறுதியில் உயிரிழப்பை ஏற்படுத்துகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

நோயின் அறிகுறி

ஏனைய சுவாச தொற்றுக்கள் போலவே இந்நோயும் தடிமன், இருமல், காய்ச்சல், என்பவற்றுடன் ஆரம்பித்து மூச்சுத் திணறல் ஏற்படும் போது தீவிரமடைகிறது.

புதிய கொரோனா வைரசு நோய் பரம்பல்

புதிய கொரோனா வைரசானது 2019ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி சீனாவின் வுஹான் மாவட்டத்திலிருந்து இனங்காணப்பட்டு உலக சுகாதார நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து 2020ஆம் ஆண்டு பெப்ருவரி 1ஆம் திகதி வரை 11374 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 98.7 வீதமானவர்கள் சீனாவிலும் 153 (1.3%) பேர் 26 பிறநாடுகளிலும் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 2.2 வீதத்தினர் இறந்துள்ளனர். பிற நாடுகளில் இனங்காணப்பட்ட அனைவரும் எதோ ஒரு வகையில் சீன நோயாளர்கள் அல்லது பயணிகளுடன் தொடர்புபட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நோயின் பரம்பல் வேகத்தையும் நோய்த் தாக்கம் மற்றும் தடுப்பு அல்லது சிகிச்சை முறை ஏற்பாடுகளையும் கருத்தில் கொண்டு இந்நோய் கிட்டத்தட்ட 40,000 பேர் வரை தாக்கத்திற்குள்ளாக்கும் காலத்தினுள் (மார்ச் நடுப்பகுதி) கட்டுப்பாடுக்குக்குள் கொண்டுவர முடியும் என மருத்துவஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

இந்த நோய் விரைவாக பரவுவதற்கு புதிய வைரசின் வீரியத்துடன் அதன் தோற்றுவாயாக அமைந்த சீன சனத்தொகை (உலக சனத் தொகையில் 18.2%), அவர்களின் உலகளாவிய பரம்பல், உலகளாவிய வியாபார மற்றும் சுற்றுலா தொடர்புகள், தினசரி பயணங்கள் என்பன பிரதான காரணமாக அமைகின்றன.

நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள்

இந்த நோய்க்கான பிரத்தியேக நோயெதிர்ப்பு பாயங்களோ, மருந்து வகைகளோ கண்டு பிடிக்கப்படவில்லை. ஏற்கெனவே இருக்கும் வைரசு எதிர்ப்பு மருந்துகள் எதுவும் இந்நோயை கட்டுப்படுத்தும் திறனற்றவையாகவே காணப்படுகின்றன.

இந்நிலையில் மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளை குறைத்தல், அவசியமற்ற பயணங்களைத் தவிர்த்தல், தனிநபர் சுகாதாரம் பேணல், நோய்த் தவிர்ப்பு பழக்க வழக்கங்களை கிரமமாக கைக்கொள்ளல் என்பவற்றுடன், சிறந்த மருத்துவ பராமரிப்பு முறைகளை நாடுகள், மற்றும் மாவட்டங்கள் தோறும் ஒழுங்கமைப்பு செய்தல் என்பவையே நாம் மேற்கொள்ள வேண்டிய நோய்த் தவிர்ப்பு பொறி முறைகளாக விளங்குகின்றன.

குறிப்பாக நோயாளர்களை எதிர் கொள்ளக் கூடிய பொது இடங்களில் (வைத்தியசாலைகள், விமானங்கள், பொது வாகனங்கள்) முகக் கவசம்(face mask) அணிதல், தேவையற்ற பொது பாவனைப் பொருட்களின் தொடுகையை தவிர்த்தல். அவ்வாறு தொட நேர்ந்தால் கைகளை சவர்க்காரமும் நீரும் கொண்டு கழுவுதல் அல்லது மதுசார சுத்தமாக்கிகள் (Alcohol based sanitizer) கொண்டு சுத்தம் செய்தல் போன்ற செயற்பாடுகள் நோய் தொற்றுவாய்ப்பை குறைக்க உதவும்.

அதேவேளை, புதிய கொரோனா வைரசு தொற்றுக்கு ஆளான ஒருவருடன் நெருங்கிய தொடர்பாடலை கொண்டிருந்த ஒருவரிடம் நோய் அறிகுறிகள் காணப்பட்டால், அவரை உடன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதுடன் உரிய நோய் பராமரிப்பு சிகிச்சைகளை வழங்க வேண்டும்.

தொற்றுக்குள்ளானவர்கள் சுவாச தொற்று நோய் பராமரிப்புக்கான தனிப்பட்ட பராமரிப்பு அறைகளில், உயிர்வளி(ஓட்ஸிசன்) வழங்கிகள், நாளங்களூடான திரவ பாயங்கள் வழங்கும் வசதி, உடல் உறுப்புகளின் செயற்பாடுகளை கண்காணிக்கும் பரிசோதனை வசதிகள் என்பவற்றுடன் பிற தொற்றுக்களுக்கெதிரான தேர்ந்த நுண்ணுயிர் கொல்லிகளை வழங்கும் வசதிகளுடைய பிரதான வைத்தியசாலைகளில் அதிக கவனத்துடன் சிகிச்சையளிக்கப்பட வேண்டும்.

Exit mobile version