Home ஆய்வுகள் “உரிமைக்குரல் உயிர்வாழ” – பேராசிரியர் அருள்முனைவர் ஆ. குழந்தை

“உரிமைக்குரல் உயிர்வாழ” – பேராசிரியர் அருள்முனைவர் ஆ. குழந்தை

557 Views

ஈழ மண்ணில் மன்னார் மறைமாவட்டத்தின் தலைச்சிறந்த ஆயராக பணியாற்றி ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்ற, மேதகு ஆயர் இராயப்பு சோசப்பு 01. 04. 2021 அன்று தனது 80ஆவது அகவையில் இறைவனடிச் சேர்ந்தார். அவரை நான் நன்கு அறிவேன். நல்ல நண்பர். அவரது மறைமாவட்டத்தில் எங்களுக்கு இல்லம் தொடங்க உதவினார். நான் ஈழத்திற்கு செல்லும் போதெல்லாம் அவரை நான் சந்தித்து உரையாடிவிட்டு வருவேன். அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட விடுதலைப் பண்புகளை இங்கு பதிவுசெய்ய விரும்புகிறேன்.

செவிமடுக்கும் யாவே கடவுள்

விவிலியத்தில் யாவே கடவுள் மோசேயிடம் பின்வருமாறு கூறுகிறார்: எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்…. இசுராயேல் மக்களின் அழுகுரல் என்னை எட்டியுள்ளது. மேலும் எகிப்தியர் அவர்களுக்கு இழைக்கும் கொடுமைகளையும் கண்டுள்ளேன் (விடுதலைப் பயணம் 3: 1 – 12). ஆயர் ஈழத்தமிழர்களின் அழுகுரலுக்கு செவிமடுத்தார். யாவே கடவுளைப்போல தனது ஆயர் அழைப்பை தென்அமெரிக்க, எல்சல்வதோரின் பேராயர் ஆஸ்கர் ரொமேரோவைப்போல வாழ்ந்து காட்டினார். பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரலுக்கு செவிமடுக்காதவர் உண்மையான விடுதலைப் போராளியாக இருக்கமுடியாது. பாதிக்கப்பட்ட தமிழர்களை உடனடியாக சந்தித்து, அவாகளது வேதனைக்கு செவிமடுப்பார். ஈழத்தமிழரின் அழுகுரலுக்கு செவிமடுத்த நல்ல ஆயராகவும், அவர்களின் விடுதலைப் போராட்டத்தில் தன்னையே கரைத்துக்கொண்ட போராளியாகவும் வாழ்ந்தார்.

ஈழத்தின் இறைவாக்கினர்

நீதியை நிலைநாட்ட துணிவு வேண்டும். ஒருமுறை மலேசியாவிலிருந்து மன்னாருக்கு வந்த கப்பல் துறையின் அதிகாரி திருமிகு கிம், ஆயரிடம் கேட்டார்: “நீங்கள் தமிழ் மக்களுக்குகாக ஏன் போராடுகிறீர்கள்.?” அதற்கு அவர் பதிலளித்தார்: “சிங்களவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள். எனவே பாதிக்கப்பட்டவர் எவராக இருந்தாலும் அவர் சார்பாக நிலைப்பாடு எடுத்து அவருக்கு நீதி கிடைக்க யாவே கடவுளைப்போல, இயேசுவைப்போல உழைப்பேன்“ என்றுரைத்தார்(லூக். 4: 18 -19)

பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நிலைப்பாடு எடுத்து நீதிக்காக உழைப்பவர் இறைவாக்கினர். நடுநிலை வகிப்பது விடுதலைக்கு எதிரான அநீத செயலாகும் என்று தென் அமெரிக்க விடுதலை இறையியலாளர் சான் சொப்ரினோ கூறுகிறார்.

ஆயர் இராயப்பு தமிழர்களின் நீதிக்காக சிங்கள பௌத்த பேரினவாத அரசின் தமிழ் இன அழிப்பை எதிர்த்தார். இந்த பேரினவாத அரசை ஆதாரிக்கும் கர்தினால் மால்கம் இரஞ்சித்தையும் சிங்கள இராணுவத்தையும் துணிவுடன் எதிர்த்தார்.

சிங்கள பேரினவாத அரசு 1, 46, 000 தமிழர்களைக் கொலை செய்ததென ஐ.நா மனித உரிமை பேரவையில் உரக்கச் சொன்னார். இசுராயேல் அரசர்கள் ஏழை மக்களுக்குச் செய்த அநீதிகளை(நேர்மையாளர்களை வெள்ளிக்காசுக்கும் வறியவரை இரண்டு காலணிகளுக்கு விற்கின்றனர்) ஆமோசு இறைவாக்கினர்  துணிந்து எடுத்துரைத்தார்(ஆமோசு 2: 6 – 8).

அதுபோல ஈழத்து மண்ணில் அரசின் அநீதிகளைத் துணிந்து உரக்கச் சொன்னார். எனவே அவர் ஈழத்து இறைவாக்கினராக வாழ்ந்தார். இறைவாக்கினர் அறிவித்தல், அறிவுறுத்துதல், ஆர்தெழுதல் ஆகிய முப்பெரும் பணியை நீதியை நிலைநிறுத்த செயல்படுத்துபவர். இந்தப் பணியை திறம்பட செய்தவர்தான் இந்த ஆயர்.

உரிமைக்குரலின் ஊற்று

சாதி சமயங்களைக் கடந்து தமிழன் என்ற ஒற்றை அடையாளத்தில் நயனற்ற முறையில் உரிமைகள் பறிக்கப்பட்ட தமிழர்களின் உரிமைக்குரலாக செயல்பட்டார். அவர் அமைத்த குடிமைக் குமுகம்(சமூகம்) மிகச்சிறந்த எடுத்துகாட்டாகும்.

நல்லிணக்கத்தோடு வாழ்ந்த நற்பற்பண்பாளர். பரத்தமையில்(விபச்சாரத்தில்) பிடிபட்ட பெண்ணின் உரிமைக்குரலாக இயேசு செயல்பட்டார்(யோவான் 8: 1 -11). பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நிலைப்பாடு எடுத்து அவர்களின் உரிமைக்குரலாக ஒலிக்கவில்லையென்றால் சாவான பாவம் செய்கிறான். உரிமைக்குரலாக செயல்படுவது ஓர் அறநெறிச் செயல், ஆண்டவனின் அறப்பணி, புனிதப் பணியாகும்.

இறுதியாக, மக்கள் ஆயராகவும், நல்ல வழிகாட்டியாகவும், நுண்மதியாளராகவும் ஈழத்தமிழர்களின் உரிமைக்குரலாகவும் வாழ்ந்த ஆயர் இயற்கை எய்தியது ஈழ மண்ணுக்கு மிகப்பெரிய இழப்பாகும். இவரது இறப்பிலிருந்து நயன்மையுள்ள நாம் பிறப்பெடுக்க வேண்டும். அவர் கண்ட கனவை நனவாக்க உறுதி எடுப்போம். அவரை நம்மில் வாழ வைப்போம். அவர் விட்டுச்சென்ற விடுதலைப் பணிகளைத் தொடருவோம். மாமனிதர் மறைந்தது நம்மில் மலரவே.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version