உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அதிகமாக பயன் அடைந்தது ராஜபக்ஸ குடும்ப அரசாங்கம் தான் – மனோ கணேசன்

கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் 250இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு, 500இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.  இந்த தாக்குதல் தொடர்பாக ஆராய   ஜனாதிபதி ஆணைக்குழு  அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து 11 இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்வதாக தெரிவித்து, வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை கடந்த 13ஆம் திகதி இலங்கை அரசு வெளியிட்டது.

மேற்குறித்த தாக்குதலில் தற்கொலை குண்டுதாரிகளுக்கு ஆதரவு வழங்கியதாக குற்றம் சுமத்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியூதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியூதீன் ஆகியோர்  கடந்த 24ஆம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நிகாப், புர்கா மற்றும் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்குத் தடை விதிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான  மனோ கணேசன் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் இறுதிப் பகுதி.

கேள்வி – இனவாத மேலாதிக்கத்தின் விளைவுகளை பாதிக்கப்பட்ட தேசிய இனங்களை நோக்கி திருப்பி விடும்இத்தகைய நடவடிக்கைகளின் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என கருதுகிறீர்கள்?

பதில் – ஒன்றை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது 2021ஆம் ஆண்டு. உலகில் இன்று மனித உரிமை என்பது வளர்ச்சியடைந்த விடயமாக இருக்கின்றது. எந்தவொரு நாடும் நாட்டிற்குள்ளே மனித உரிமைகளை ஒழுங்கான முறையில் முன்னெடுக்கா விட்டால், உலக நியமங்கள் அடிப்படையில் செயற்படாது விட்டால், அந்த நாடு ஒதுக்கப்பட்ட நாடாக, தள்ளி வைக்கப்பட்ட நாடாக படிப்படியாக மாற்றப்பட்டு விடும் என்பதை இலங்கை அரசாங்கம் உணர வேண்டும்.  தற்போது சீனா, அமெரிக்கா, ரஸ்யா போன்ற பலம் வாய்ந்த நாடுகளே ஆங்காங்கே தங்கள் நாட்டிற்குள்ளேயும், உலக ரீதியாகவும் மனித உரிமைகளை மீறுகின்றன தான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அவை பலம் வாய்ந்த நாடுகள் என்ற காரணத்தினாலே அவர்களை ஒதுக்கி வைக்கும் காலம் தாமதமாக வரும். ஆனால் வந்தே தீரும்.

ஆனால் இலங்கை ஒரு சின்னஞ் சிறிய நாடு. சீனா தனது நண்பன் என நினைத்துக் கொண்டு இலங்கை  தன்னை சீனாவாக நினைக்க முடியாது.  சீனா வேறு. இலங்கை வேறு.  சீனாவிற்கு இலங்கை பயன்படும் வரை தேவையானது. அவ்வளவு தான். அதற்குப் பிறகு கறிவேப்பிலை போல் தூக்கி எறிந்து விடுவார்கள். ஆகவே சின்னஞ் சிறிய தீவான இலங்கை தனது சக்திக்கு ஏற்றவாறு தான் காரியங்களை ஆற்ற வேண்டும். இப்பொழுது சீனாவை நம்பி முழு உலகத்தையும் பகைத்துக் கொண்டிருக்கின்றது. அமெரிக்கா உட்பட மேற்கத்தைய நாடுகள், இந்தியா, ஜப்பான் உட்பட ஆசிய நாடுகள் எல்லாவற்றையும் பகைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையிலே உள்நாட்டிலே வாழும் சிங்கள பௌத்தர்கள் அல்லாத தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், இந்து மக்கள், கத்தோலிக்க மக்கள், இஸ்லாமிய மக்கள் ஆகிய இலங்கையர்களுக்கு எதிராக தான்தோன்றித் தனமாக, எதேச்சாதிகாரமாக இனவாத ரீதியாக கடந்த காலங்களைப் போல இந்த அரசாங்கம் நாட்டாண்மை செய்ய முடியாது. அடாவடித்தனம் காட்ட முடியாது. குறிப்பாக இன்றைய இலங்கை அரசாங்கத்தின் வரலாறு உலகத்திற்கு அத்துப்படியாகியிருக்கின்றது. ஆகவே தற்போது மனித உரிமை ஆணையகத்தில் நடைபெற்ற தீர்மானத்தின் அடிப்படையிலே இந்த வருடம் செப்டெம்பர் மாதம் வாய்மொழி அறிக்கையையும், அடுத்த வருடம் 2022 மார்ச்சிலே எழுத்துமூல அறிக்கையையும் தரவேண்டும் என்று மனித உரிமை ஆணையர் மனித உரிமை ஆணையத்தின் தீர்மானத்தினால் பணிக்கப்பட்டுள்ளார். அடுத்து வரும் 2022 செப்டெம்பரிற்கு இடையிலே மனித உரிமை ரீதியாக இலங்கை அரசாங்கம் தன்னை வளர்த்துக் கொள்ளா விட்டால், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக, நாட்டிற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது சம்பந்தமாக எழுத்து மூலமான சிபார்சுகளைத் தரும்படியும் மனித உரிமை ஆணையர் பணிக்கப்பட்டிருக்கின்றார்.

இலங்கையை கண்காணிப்பதற்காக பத்து, பன்னிரெண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆகவே ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு எதிர்காலம் இருண்டதாகவே இருக்கப் போகின்றது. சீனாவை நம்பி பாதுகாப்பு சபைக்கு இந்தப் பிரச்சினை செல்லுமாயின், சீனாவின் வீட்டோ இலங்கையை பாதுகாக்கலாம்.  ஆனால் அரசியல், பொருளாதார, கலாசார ரீதியாக இலங்கையை பாதுகாக்க சீனாவால் முடியாது. இலங்கையின் ஏற்றுமதியின் 75%, 80%செல்வது அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் தான். தேயிலை, தைத்த ஆடைகள், வாசனைத் திரவியங்கள் எதுவாக இருந்தாலும் இங்கு தான் செல்கின்றது. மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் வளங்கள் இருக்கின்றன. முஸ்லிம் மக்களை பகைக்கும் போது இந்த நாடுகள் இலங்கையுடன் சந்தோசமாக இருக்காது. அத்துடன் மேற்கத்தய நாடுகளை பகைத்துக்கொண்டு அரபு நாடுகள் தன்னிச்சையாக இலங்கைக்கு உதவி செய்யாது. எல்லாவற்றிற்கும் மேலாக பிராந்திய வல்லரசான அயல் நாடாக இந்தியா இருக்கின்றது. இலங்கை அரசாங்கம் இந்தியாவை எவ்வளவு பகைக்க முடியுமோ அவ்வளவு பகைத்துக் கொண்டிருக்கின்றது.  இலங்கை வரலாற்றிலே இந்தியாவை மிக மிக மோசமாக ஆத்திரமூட்டக் கூடியதாக நடக்கின்ற அரசாங்கம் இந்த அரசாங்கமே. இதன் விளைவுகளை நாங்கள் கோவிட் 19 அடங்கிய பின்னர் பார்க்கலாம் என நினைக்கின்றேன்.

இதெல்லாம் நடக்க வேண்டும். நடந்து விடும் என்ற ஆசை எனக்குக் கிடையாது.  ஆனால் நடந்து விடுமோ என்ற பயம் எனக்கு இருக்கின்றது. நானும் இலங்கையன் என்ற அடிப்படையிலே இலங்கையின் நல்வாழ்வு, மக்களின் நல்வாழ்வு, எனது தேசத்தின் நல்வாழ்வு எனக்கும் தேவையாக இருக்கின்றது. ஆனால், இதை இந்த அரசாங்கம் உணரா விட்டால், உணரும் அளவிற்கு முதிர்ச்சியில்லாத ஒரு ஜனாதிபதி இந்த நாட்டிலே இருப்பாராரேயானால், நாங்கள் எதுவும் செய்ய முடியாது. இலங்கையை கடவுளால்கூட காப்பாற்ற முடியாது. கௌதம புத்தர் இன்னொரு பிறவி எடுத்து வந்தாலும்கூட இலங்கையை காப்பாற்றுவதை விடுத்து இன்றைய இலங்கைக்கு, இந்த சிங்கள பௌத்தர்களுக்கு, தீவிரவாதிகளுக்கு ஒரு தண்டனையை அவரே வாங்கிக் கொடுத்துவிடுவார் என நினைக்கின்றேன்.

கேள்வி – பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதினின் திடீர் கைது குறித்து உங்கள் கருத்து?

ரிசாட் பதியுதீனின் கைது திடீர் கைது அல்ல. எதிர்பார்த்த கைது தான். இதற்கு முன்னர் ஒருமுளை கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் புத்தளத்திலிருந்து மன்னாருக்கு வாக்காள மக்களை அரசாங்க விதியைப் பயன்படுத்தி பேருந்துகளை ஒழுங்கு செய்து கொண்டு சென்றார் என்று கூறி, பிரயோசனமற்ற குற்றச்சாட்டை ஏற்படுத்தி அவரையும், அவரது சகோதரரையும் கைது செய்தார்கள். பின்னர் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு அவரது கட்சியைச் சேர்ந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டு அவரை விடுதலை செய்தார்கள்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கின்றார் என்று சொல்லித் தான் அவரைக் கைது செய்திருக்கிறார்கள். சில வாரங்களின் முன்னர் ஓர் ஊடக நிகழ்வில் வரம்புமீறி பேசி விட்டார் என்று கூறி அசாத்சாலியையும் கைது செய்தார்கள். பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புள்ளதால் அவரைக் கைது செய்ததாக கூறுகின்றார்கள். தற்போது அரசாங்கத்திற்கு சூத்திரதாரி யார் என்று இனங்கண்டு சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

அதேபோல மல்க்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களுக்கும் உள்ளது. அவர் மீது எனக்கிருந்த நம்பிக்கை தற்போது கிடையாது. அவரின் கருத்துக்கள் அரசியல்வாதிகளின் கருத்துக்கள் போல் நாளுக்கு நாள் மாறிக் கொண்டிருக்கின்றது என்று நான் சந்தேகப்படுகின்றேன். நான் மட்டுமல்ல குறிப்பாக நாட்டிலுள்ள சிங்கள, தமிழ் கத்தோலிக்க மக்களே இந்த ஆண்டகை மீது சந்தேகப்படுகின்றார்கள். இந்த அரசாங்கத்தின் மீதும் கடந்த அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கையில்லை. சர்வதேச விசாரணை தேவை என்று சொன்னார். கடந்த அரசாங்கத்தில் நம்பிக்கையில்லை என்று கூறிவிட்டு, தற்போதைய அரசாங்கத்தை பதவிக்குக் கொண்டு வருவதில் பாரிய பங்களிப்பை வழங்கியவர் அவர். பின்னர் அது தொடர்பாக பேச்சில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் பற்றி பேசும் போது, முஸ்லிம், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இதை செய்யவில்லை. அவர்கள் பயன்பட்டிருப்பார்கள். ஆனால் பின்னணியில் இருப்பது அரசியல் சக்திகள் தான் என்று சொன்னார்.  அப்படியென்றால் அது இன்றைய அரசாங்கம் தான் என்ற அர்த்தத்தை அது கொடுத்து விட்டது. பின்னர் என்ன நடந்ததோ தெரியவில்லை. என்ன அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதோ தெரியவில்லை. அடுத்த நாள் விசேட ஒன்றுகூடலில் பேசும் போது, நான் அப்படி சொல்லவில்லை. சர்வதேச இஸ்லாமிய சக்திகள் தான் பின்னல் இருந்திருக்கும் என்று  சொன்னார்.  அது எல்லோருக்கும் தெரியுமே.

ஐ.எஸ்.ஐ.எஸ்கூட இந்த குண்டு வெடிப்புத் தாக்குதலுக்கு உரிமை கோரவில்லை. பின்னர் மலேசியாவிலிருந்து ஒருவர் தொடர்பு கொண்டு கூறி தாமதமாகத்தான் அவர்கள் உரிமை கோரினார்கள் என்ற ஒரு கதையும் அந்தக் காலத்தில் அடிபட்டது. இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் தன்னை குற்றவாளிக் கூண்டிலே தன்னைத் தானே நிறுத்திக் கொண்டது. அரசாங்க எம்.பிக்களும், அமைச்சர்களும் பகிரங்கமாக இதைக் கூறிக் கொள்கின்றார்கள்.

அண்மையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்  பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னான்டோ கூறும் போது எல்லோரும் சேர்ந்து எங்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விட்டீர்கள் என்று பேசியதை நான் கேட்டேன். இதன் பின்னணியில் தான் ரிசாட் கைது செய்யப்பட்டிருக்கின்றார். அவரைக் கைது செய்து சிங்கள மக்கள் மத்தியில் காட்டி இதோ பாருங்கள் சூத்திரதாரியைப் பிடித்து விட்டோம் என்று கூறுவதற்கு அரசாங்கம் முனைகிறது. ஆனால் சாட்சியங்கள் இல்லை. அத்தாட்சிகள் இல்லை. ஆவணங்கள் இல்லை. இவைகள் இல்லாமல் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்து விட்டு அவரை குற்றவாளி என்று தீர்மானிக்க முடியாது. உலக நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. சர்வதேச உலகம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

ரிசாட் மீது நாட்டிலே பல குற்றச்சாட்டுகள் காலங்காலமாக சுமத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சமூக ஊடகங்களிலும் சொல்லப்படுகின்றன. அவற்றைப் பற்றி நாம் பேசவரவில்லை. அவை சம்பந்தமாக பதில்கூற வேண்டிய கடப்பாடு ரிசாட்டிற்கு இருக்கின்றது. அந்தக் குற்றச்சாட்டுக்களை வைத்துக் கொண்டு இந்தக் கைதை நியாயப்படுத்த முடியாது. ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

காலை ஒரு மணியளவிலே சென்று வீட்டை சுற்றிவளைத்து அதிகாலை 3 மணியளவிலே பொலிசாரும், இராணுவத்தினரும் அவரைப் பிடித்து வந்திருக்கின்றனர். அப்படிப் பிடிக்கும் அளவிற்கு அவர் தலைமறைவாக இல்லை. பகிரங்கமாக குடும்பத்துடன் கொழும்பில் வாழ்கிறார். அத்துடன் அரசாங்கத்தின் அமைச்சு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் (MSD) பொலிசார் இருக்கின்றார்கள். அவர்களைக் கேட்டால், அவர்கள் ரிசாட் பதியுதீன் எங்கு இருக்கின்றார் என்று சொல்லுவார்கள். ஆனால் அதிகாலையில் சென்று கைது செய்ய வேண்டிய காரணம் என்ன? ஒரு பாதாள உலகக் கேடியைப் போல அவரை பிடித்து இழுத்து வந்திருக்கின்றார்கள்.

இதன் மூலம் எதிர்க் கட்சியாகிய தமிழ் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய எங்களுக்குக் கூட ஒரு எச்சரிக்கை செய்தியை அரசாங்கம் விடுத்திருக்கின்றது. அதாவது கவனமாக இருங்கள். வாயை மூடிக்கொண்டு இருங்கள். அதிகமாகப் பேசினால் இழுத்துக் கொண்டு போய்விடுவோம் என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

இந்த உருட்டல்களுக்கும், மிரட்டல்களுக்கும், எச்சரிக்கைகளுக்கும், அபாய சமிக்ஞைகளுக்கும் பயந்து வாய்மூடி, கைகட்டிக் கொண்டிருக்கும் நபர்கள் நாங்கள் அல்ல. நான் அப்படியல்ல. அப்படியிருக்க முடியாது. இன்று குற்றவாளிக்கூண்டில் நிற்பது நாங்கள் அல்ல. ரிசாட்டும் அல்ல.

தன்மீது குற்றச்சாட்டு இருக்குமானால் விசாரிக்கும்படி அவரே சொல்லியிருக்கின்றார். விசாரிக்கலாமே. விமல் வீரவன்ச என்ற அமைச்சர் கூறியிருந்தார், கடந்த காலங்களில் ரிசாட்டின் அமைச்சின் கீழ் வந்திருக்கக்கூடிய கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தின்(CWE) வாகனங்கள் காத்தான்குடிக்கும், கிழக்கு மாகாணத்திற்கும் போய் வந்தன. குண்டுகளை சுமந்து சென்றன. அதற்குரிய அத்தாட்சிகள் எம்மிடம் இருக்கின்றன. GPS தகவலும் தன்னிடம் உள்ளதாக சொன்னார். இப்போது GPS உம் இல்லை. விமல் வீரவன்சவும் இல்லை. ஆகவே ரிசாட் மீது குற்றச்சாட்டு சுமத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை. சுமத்திய பழிக்கு குற்றவாளியாக முடியாது. அது ஒருபுறமிருக்க தற்போது குற்றவாளிக் கூண்டில் இருப்பது நாங்கள் அல்ல. இந்த அரசாங்கம் தான். கோத்தாபய, மகிந்த, பசில், நாமல் ஆகிய ராஜபக்ஸ சார்ந்தவர்கள் தான் இருக்கின்றார்கள்.

ஆகவே இனிமேலாவது கோமாளித்தன வேலைகள் செய்யாமல், அரசாங்கம் உண்மையை வெளிப்படுத்த வேண்டும். சொல்லாவிட்டால், உண்மை நிச்சயமாக வெளிவரும். தாமதமாகலாம். ஆனால் உண்மை வந்தே தீரும்.