உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அதிகமாக பயன் அடைந்தது ராஜபக்ஸ குடும்ப அரசாங்கம் தான் – மனோ கணேசன்

கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் 250இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு, 500இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடைசெய்வதாக தெரிவித்து, வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை கடந்த 13ஆம் திகதி இலங்கை அரசு வெளியிட்டது.

மேற்குறித்த தாக்குதலில் தற்கொலைக் குண்டுத்தாரிகளுக்கு ஆதரவு வழங்கியதாக குற்றம் சுமத்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியூதீன் ஆகியோர் கடந்த 24ஆம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நிகாப், புர்கா மற்றும் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்குத் தடை விதிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்

கேள்வி – உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் நடை பெற்று இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றன. தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது திட்டவட்டமாகக் கண்டறியப்படாத நிலையில் இந்தத் தடை உத்தரவு ஏன் பிறப்பிக்கப்பட்டுள்ளது?  இதன் பின்னணி என்ன?

பதில் – உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் நடைபெற்று இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றன. தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது திட்டவட்டமாகக் கண்டறியப்படாத நிலையில் முஸ்லிம் அமைப்புகள் மீது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21, ஏப்ரல் 2019 நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடிப்படையாக வைத்தே தான் நல்லாட்சி அரசாங்கத்தை வீழ்த்தி இன்றைய கோத்தபயா அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியது.

தற்போதைய அரசாங்கம் எதிரணியாக இருந்த காலகட்டத்திலே தற்போதைய அரசாங்கத்தின் ஒவ்வொரு அமைச்சர்களும், அவர்கள் சார்ந்த பௌத்த பிக்குகளும், சிங்கள தேசியவாத அமைப்புகளை சேர்ந்தவர்களும் தினம் தினம் புலனாய்வுத்துறை பொலிஸ் நிலையத்திற்கு(CID) பெரும் கோவைகளுடன் சென்று வந்தார்கள். செல்லும் பொழுதும், வரும் பொழுதும் ஊடகத்தினருடன் பேசுவார்கள். இவர்களுக்கு சார்பான 2 தனியார் சிங்கள மொழி தொலைக்காட்சி ஊடகங்கள் அந்த நிகழ்வுகளை மிகப் பிரமாண்டமாக மாற்றி திருத்தி எடுத்து, சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு சென்றன. தங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளைவிட அதிகமாகவே செய்தார்கள்.

அன்றைய காலகட்டத்திலே இன்றைய அர சாங்கத்தைச் சார்ந்தவர்கள் தெரிவிக்கையில், எங்களிடம் சாட்சியங்கள், ஆவணங்கள் தெளிவாக இருக்கின்றன. யார் சூத்திரதாரிகள், யார் பின்னணியாளர்கள் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே மாதத்திலே குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுப்போம் என்று சொன்னார்கள். சில பிக்குகள் இவர்களை யாழ். நீதிமன்றில் நிறுத்தி தூக்கில் தொங்க விடுவோம் என்று சொன்னார்கள். இதற்கமைவாகத் தான் கத்தோலிக்க குரு மறைமாவட்ட பேராயர் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகை கூட இந்திய அரசாங்கத்திற்கு சார்பான பல கருத்துக்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் தெரிவித்துக் கொண்டேயிருந்தார்.

வழமையாக ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி சார்ந்த வாக்குவங்கியாக இருந்த சிங்கள கத்தோலிக்க வாக்கு வங்கியும்கூட இந்த ஆண்டகையின் கருத்துக்களால் தடுமாறிப்போய் தேர்தலின் போது தங்களின் வாக்குகளை பெருவாரியாக ராஜபக்ஸ அரசாங்கத்திற்கே வழங்கியது. இதற்குப் பெரும் காரணம் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகை தான். எல்லோரும் சேர்ந்து ஆட்சி பீடம் ஏற்றி விட்டார்கள். இன்று பார்த்தால், அரசாங்கத்தை சார்ந்தவர்களின் நோக்கம் ஆட்சிபீடம் ஏறுவதாக இருந்ததே தவிர சாட்சிகள், ஆவணங்கள் இல்லை என்பது வெளிப்படையாக தெரிந்து விட்டது. எழுதிய, பேசிய, முன்வைத்த குற்றச் சாட்டுகளை நிரூபிப்பதற்குத் தேவையான சாட்சிகளும் அரசாங்கத்திடம் இல்லை.

ஆகவே தான் இப்பொழுது இந்த உயிர்த்த ஞாயிறு விவகாரம் திசை திரும்பி பூமராங் போன்று அரசாங்கத்தை நோக்கியே பாய்கின்றது. ஆகவே தான் இந்த தடுமாற்றம். தடுமாற்றத்தின் விளைவாகத் தான் முஸ்லிம் அமைப்புகளை அவர்கள் தடை செய்திருக்கின்றார்கள். முஸ்லிம் நபர்களை, இஸ்லாமிய மொளலவிகளை பெயர் சொல்லி தடை செய்திருக்கின்றார்கள். இதற்கு அப்பால் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளையும், நபர்களையும் கூட அடையாளம் காட்டி விசேட வர்த்தமானி மூலம் தடை செய்திருக்கின்றார்கள்.

இவை எல்லாம் ராஜபக்ஸ அரசாங்கம் தாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காகவும், ஆட்சியை தக்க வைப்பதற்காகவும், தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாதத்தைக் கக்குவது என்ற நிரந்தரக் கொள்கைக்கு உடன்பாடாக இருக்கின்றன.

கேள்வி – குண்டுத் தாக்குதல்கள் உண்மையில் மிகப் பயங்கரமானவை. இந்தத் தடை உத்தரவு எந்த வகையில் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்யப் போகின்றது?

பதில் – தடை உத்தரவு பாதுகாப்பை உறுதி செய்யப் போகின்றதா என்பது கேலிக்குரிய கேள்வி என்று நினைக்கின்றேன். இந்த அரசாங்கத்தைப் பற்றி மக்கள் மனங்களில் இருக்கக்கூடிய கிண்டல், கேலியைத்தான் நீங்கள் உங்கள் கேள்வி மூலம் என்னிடம் போட்டிருக்கின்றீர்கள் என நினைக்கிறேன். ஒருபோதும் தடையுத்தரவுகள் குண்டுத் தாக்குதலை தடை செய்யாது. உண்மையில் இந்தக் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி யார் என்பதை நாங்கள் கண்டறிய வேண்டும். கண்டறிந்தால் தான் இந்த சாரான் குழு சார்ந்த இந்த பயங்கரவாத சம்பவங்கள் நடைபெறாது தடுக்க முடியும்.

சாரான் ஒருபோதுமே சூத்திரதாரி அல்ல. அவரும், அவரை சார்ந்த நபர்களும் வெறும் கருவிதான். எப்பொழுதுமே ஒரு இயக்கத்தின் – அமைப்பின் தலைவர் தற்கொலைக் குண்டுதாரியாக மாறி தன்னை அழித்துக் கொள்ளமாட்டார். அத்தகைய மனோதிடம் அவருக்கு இருந்தாலும்கூட தலைவர் அழிந்து போய் விட்டால், அந்த இயக்தக்தை முன்னெடுக்க ஆள் இருக்க மாட்டார். உலகெங்கும் அப்படி நடக்காது. ஆகவே தன்னை மாய்த்துக் கொண்ட சாரான் ஒருபோதும் இந்த இயக்கத்தின் தலைவராக இருக்க முடியாது. அவர் ஒரு கருவி; அவ்வளவுதான். அதற்கு அப்பால் யாரோ இருக்கின்றார்கள். அவர்கள் யார் என்று கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும்.

இதைக் கேட்கும் போதே நியாயமான, நேர்மையான ஒரு சந்தேகம் மக்கள் மனங்களில் எழுகின்றது. தமிழ், முஸ்லிம் மக்களை விட்டு விடுங்கள். தெற்கிலே சிங்கள மக்கள் மத்தியிலே இது எழும்பியிருப்பதை அறியக்கூடியதாய் இருக்கின்றது.

சிங்கள ஊடகவியலாளர்கள், சிங்கள அரசாங்க ஊழியர்கள், சிங்கள பௌத்த பிக்குகள், சமூக முன்னோடிகள் மற்றும் குறிப்பாக இளைய தலைமுறையினர் போன்றோர் கருத்துக்களை வெளிப்படுத்தக்கூடிய இடமான சமூக ஊடகங்கள், போராளிகளின் கருத்தைப் பார்த்தால், அவர்கள் சொல்ல வருவது என்னவென்றால், இந்த உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் ஊடாக மிக அதிகமாகப் பயனடைந்தது வேறு யாருமல்ல, இன்றைய ராஜபக்ஸ குடும்ப அரசாங்கம் தான்.

ஆகவே தான் இந்த அரசாங்கத்தின் மீது பல சந்தேகங்கள் இருந்துள்ளது. சந்தேகத்தை எழுப்பக் கூடிய ஹரின் பெர்னான்டோ, மனுஷ நாணயக்கார, சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன்.

எங்கள் மீது பாய்ந்து வருவதில் எந்த பிரயோசனமும் கிடையாது. மாறாக சந்தேக கேள்விகளுக்கு உரிய பதில்களை மக்கள் முன்னே அரசாங்கம் வைத்திட வேண்டும்.

ஜனாதிபதி ஒவ்வொரு வாரமும் கிராமத்தை சந்திக்கப் போகின்றேன் என்று சொல்லிப் போய்; கிராமத்து துன்பங்கள், துயரங்களை துடைக்கப் போகின்றேன் என்று போய் தனது துன்பங்களை மக்களிடம் அழுது, ஒப்பாரி வைத்து, ஓலமிட்டு வருகின்றார். ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ அதை நிறுத்திவிட்டு இந்த சந்தேகங்களுக்கு விடை தரவேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம். அதன் மூலாகத் தான் இந்தக் குண்டுத் தாக்குதல்களை தடுத்து நிறுத்த முடியும்.