Tamil News
Home செய்திகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : அரசியல் ரீதியிலான நோக்கங்களை கொண்டது- ஜேவிபியின் தலைவர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : அரசியல் ரீதியிலான நோக்கங்களை கொண்டது- ஜேவிபியின் தலைவர்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தீவிரவாத தாக்குதல் போன்று தோன்றினாலும் அது அரசியல் ரீதியிலான நோக்கங்களை கொண்டது என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த 2019 ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு  நாள் அன்று   நடத்தப்பட்ட    குண்டுவெடிப்பு தாக்குதலில்   258 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 500க்கும் மேற்பட்டவர்கள் படு காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் எனக் கூறி, அரசு விசாரணைகளை முன்னெடுத்து,அதன் விசாரணை அறிக்கைகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது.

இந்நிலையில், குறித்த தாக்குதலின் பின்னர் நாட்டில் பல அரசியல் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டு  நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ள ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க, தாக்குதல் நடந்த விதத்தில் அது தீவிரவாத பயங்கரவாத தாக்குதல் போன்று தோன்றினாலும் தாக்குதலின் விளைவு மற்றும் தாக்குதல் பற்றி விபரங்களை பார்க்கும்போது அது அரசியல் தாக்குதல் என்பது புலனாகின்றது  என்று தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு முக்கிய சூத்திரதாரியை நோக்கத்தை தாக்குதலின் பின்னால் இருந்தவர்களை அடையாளப்படுத்த தவறியுள்ளது என தெரிவித்துள்ள அவர், அறிக்கை தாக்குதலை தடுக்க முடியாமல் போனமைக்கான காரணங்களை மாத்திரம் முன்வைத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த சில பாதுகாப்பு தலைவர்கள் தாக்குதலின் பின்னணியில் மறைகரமொன்றின் சதி உள்ளது என தெரிவித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது பாரதூரமான நிலைமை இதனை விசாரணை செய்யவேண்டும் சதிமுயற்சி உள்ளதா என்பதை பகிரங்கப்படுத்தவேண்டும் எனவும்  தாக்குதலை தவிர்க்க முடியாமல் போனமைக்கான காரணங்களை சரிசெய்ய முடியும் ஆனால் சதித்திட்டம் குறித்த விபரங்கள் பகிரங்கப்படுத்தப்படாத பட்சத்தில் நாட்டில் மீண்டும் அவ்வறானதொரு தாக்குதல் இடம்பெறும் ஆபத்துள்ளது எனவும்   தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழு சதிதிட்டம் குறித்து ஆராய தவறிவிட்டது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Exit mobile version